இல்லம் > உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்... சேமிக்க சிறந்த வழிகள்! > உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள் !

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள் !


ந்த குடும்பத்தை எடுத்துக்கொண்டாலும் அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள்தான் பெற்றோரின் மிகப் பெரிய சொத்து. பெற்றோரின் கடைசிக் காலத்துக்கு அவர்கள் பெற்ற குழந்தைகளையே பலரும் நம்பி இருக்கின்றனர். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தந்தால்தான் அவர்களும் நன்றாக இருப்பார்கள்: பெற்றோர்களையும் நல்லபடியாகப் பார்த்துக்கொள்வார்கள்.

ஆனால், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகப் பணத்தைச் சேமிப்பதில் நம்மவர்களுக்கு இணையாக உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது. குழந்தை பிறந்தவுடன் அதன் பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைப்பதாக இருந்தாலும் சரி, சின்னதாக தங்க நகை வாங்கி வைப்பதாக இருந்தாலும் சரி நம்மவர் களுக்கு இணை நம்மவர்களே.

குழந்தைகள் பெயரில்..!

குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக நிறைய சேமிக்கவேண்டும் என்கிற எண்ணம் நமக்கு  இருந்தாலும், அதற்கான சரியான முதலீட்டு வழிமுறைகளை நாம் தேர்வு செய்கிறோமா என்பது மிகப் பெரிய கேள்வி. அதிக லாபம் தரக்கூடிய, அதே நேரத்தில் நம் குழந்தைகளுக்கு மிகச் சரியாக பயன்தரக்கூடிய திட்டங்களில் நாம் முதலீடு செய்கிறோமா என்றால், இல்லை என்பதே பலரது பதிலாக இருக்கும். முதலீட்டுக்கு உதவும் ஏஜென்ட்கள் சிபாரிசு செய்யும் திட்டங்களை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு  வாங்கி விடுகிறோம்.  

ஏஜென்ட்கள் சொல்லும் திட்டங்களை நாம் மறுக்காமல் வாங்குவதற்கு பல ஃபண்ட் நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளும் ஒரு சிம்பிளான டெக்னிக்கைப் பின்பற்றுகின்றன. அதாவது, புதிதாக ஆரம்பிக்கும் சில திட்டங்களின் பெயரோடு ‘சைல்டு/சில்ட்ரன்’ என்கிற வார்த்தையைச் சேர்த்துக்கொண்டுவிடுகின்றன.  ‘சில்ட்ரன் எஜுகேஷன் ஃபண்ட்’ எனவும் ‘சில்ட்ரன் இன்ஷூரன்ஸ் பாலிசி’ என்றும் புதிய திட்டங்களுக்கு பெயர் வைப்பதன் மூலம், நம்மை எளிதில் ஏமாற்றி ஃபண்டுகளையும் பாலிசிகளையும் வாங்க வைக்கின்றன. ஃபண்டிலோ அல்லது பாலிசியிலோ ‘சைல்டு/சில்ட்ரன்’ என்கிற வார்த்தை இருப்பதினாலேயே அது குழந்தைகளுக்கு ஏற்ற பாலிசி என்று சொல்லிவிட முடியாது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ‘சைல்டு’ என்கிற வார்த்தை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது நம் குழந்தையின் எதிர்காலத்துக்கு எந்த வகையில் ஏற்றது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகே அதில் பணத்தைப் போட ஆரம்பிக்கவேண்டும்.

இன்ஷூரன்ஸ் முதலீடல்ல!

குழந்தை பிறந்தவுடன் ஒரு தகப்பன் என்பவன் உணர்ச்சிவசப்படக்கூடிய நிலையில் இருப்பான். அவனுக்குள் மகிழ்ச்சியும் பொறுப்புணர்வும் பல மடங்கு அதிகமாக இருக்கும். இந்தச் சமயத்தில் அந்த தகப்பனால் ஒரு சரியான இன்ஷூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்ய முடியுமா என்பது சந்தேகமே. வங்கியில் வேலை பார்க்கும் குமாருக்கும் அப்படித்தான் நடந்தது. குமாருக்கு குழந்தை பிறந்தவுடனே அவருடைய இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் அவரை அணுகி ‘சைல்டு இன்ஷூரன்ஸ் பிளான்’ ஒன்றை வழங்கினார். தன் குழந்தைக்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற மனநிலையில் இருந்த குமார் அந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை உடனே வாங்கினார்.

ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு அந்த பாலிசியின் டாக்குமென்ட்களை படித்த போதுதான், அது குழந்தையின் 18 வயது வரையிலான சேமிப்புடன் கூடிய ஆயுள் காப்பீடு பாலிசி என்று தெரிந்தது. பாலிசி முதிர்வின்போதுதான் முதிர்வுத் தொகை வழங்கப்படும் என்றும் அதில் சொல்லி இருந்தார்கள். குழந்தையின் எதிர்கால கல்வித் தேவை என்ற ஒரே விஷயத்துக்காக குமார் அந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து விட்டார்.

ஆனால், அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசியின்படி, குழந்தையின் 18 வயது வரை குமார் தொடர்ந்து பிரீமியம் செலுத்தவேண்டும். பாலிசி முதிர்வின்போது பாலிசித் தொகையுடன் (sum assured) சேர்த்து போனஸ் தொகையும் வழங்கப்படும். அதேசமயம், 18 வயதிற்குள் குழந்தைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமானால், பாலிசித் தொகை மற்றும் அந்தக் காலம்வரை அறிவிக்கப்பட்ட போனஸ்களும் சேர்த்து குமாருக்கு (Nominee/policy holder) வழங்கப்படும்.

குடும்பச் செலவு, எதிர்காலத் தேவைகள் மற்றும் பாலிசி பிரீமியம் தொகை முதலியன குமாரின் வருமானத்தையே நம்பி உள்ளன. குழந்தை வளரும் பருவத்தில் குமாருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், பிரீமியம் கட்டுவது தடைபட்டு பாலிசி லேப்ஸ் ஆகும் வாய்ப்பு அதிகம். அப்படி பாலிசி லேப்ஸ் ஆகிவிட்டால் குழந்தையின் எதிர்காலத் தேவைக்கு எந்த பணமும் கிடைக்காது. அப்படி இருக்க, அந்தக் குழந்தைக்கு எப்படி ஒளிமயமான எதிர்காலம் அமையும்?

டேர்ம் பிளான் பெஸ்ட்!  

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், தன் குழந்தைக்கு குமார் எடுத்த பாலிசி பொருத்த மானதல்ல என்று தெரியவரும். குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டுமெனில், நாம் முதலில் கவனிக்கவேண்டியது, குழந்தையின் தகப்பனுக்குப் போதிய அளவு ஆயுள் காப்பீடு இருக்கிறதா என்பதே. போதுமான அளவு ஆயுள் காப்பீடு இல்லையெனில், வேறு எந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் எடுப்பதைவிட ‘டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி’ எடுப்பதே சரியான முடிவாக இருக்கும்.

நாம் எடுக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி நீண்டகால அளவுக்கு நமக்கு காப்பீடு அளிப்பவையாக இருக்கவேண்டும். உதாரணமாக, 30 வயதில் இருக்கும் பெற்றோர் 20 முதல் 25 ஆண்டுகளுக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கவேண்டும். குழந்தையின் அப்பா இளம் வயதில் இருக்கும்போதே இந்த பாலிசியை எடுத்தால் குறைவான பிரீமியம் தொகையில் நீண்டகாலத்திற்கு ஆயுள் காப்பீடு கிடைக்கும்.

அடுத்து நாம் கவனிக்கவேண்டியது, குழந்தை வளரும் பருவத்தில் நமது குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் முக்கியமாக குழந்தைக்கும், தேவையான அளவு ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். இதற்கு ஃபேமிலி ஃப்ளோட்டர்

(Family Floater) பாலிசி நமக்கு கைகொடுக்கும். மேலும், இன்று நாம் வேலை செய்யும் நிறுவனங்கள் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் நமக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸை அளிக்கின்றன. குழந்தை பிறந்தவுடன் குரூப் இன்ஷூரன்ஸ் திட்டத்தின் விதிமுறைகள்படி, நமது குழந்தையையும் அதில் இணைக்கவேண்டும். இது குழந்தைக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிடைக்க வழி செய்யும்.

  இன்றே, இப்போதே..!

குழந்தை பிறந்தவுடன், நமது மனதில் அது ஒரு இன்ஜினீயராக, மருத்துவராக வரவேண்டும் என்று கனவு காண்போம். இன்றையச் சூழலில் நான்கு வருடம் இன்ஜினீயரிங் கோர்ஸ், கேப்பிடேஷன் ஃபீஸ் இல்லாமல், ஆறு லட்சம் ரூபாய் தேவை. குழந்தை தற்போது பிறந்திருக்குமானால், இந்தப் படிப்புக்கான செலவு 17 வருடங்களுக்குப் பின் 7% பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் 19 லட்சம் ரூபாயாக இருக்கும். இதற்கான சேமிப்பை நாம் இன்றே, இப்போதே தொடங்கிவிடுவது நல்லது.

இரண்டாவது, முதுகலைப் படிப்புக்கு (Post Graduation)சேமிப்பது. இந்தச் செலவு குழந்தையின் 20 அல்லது 21 வயதுகளில் வரலாம். அன்றைய தேதியில் முதுகலைப் படிப்பு இரண்டு ஆண்டு படிக்க அதிகபட்சம் 23 லட்சம் ரூபாய் செலவாகும். இன்னும் சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி மேற்படிப்பு படிக்க வைக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். உள்ளூரில் படிப்பதாக இருந்தாலும் வெளிநாட்டில் படிப்பதாக இருந்தாலும், வங்கியில் கல்விக் கடன் வாங்குவதே  எதிர்காலத்தில் சாத்தியமான விஷயம்.

அடுத்து, மகன்/மகளின் திருமணச் செலவு. இன்று பலரும் திருமணத்தை ‘கிராண்ட்’-ஆக செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். விளைவு, ஓய்வுக்காலத்துக்கான பி.எஃப்.-லிருந்து பணத்தை எடுக்கவேண்டியச் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற நெருக்கடிகளைத் தவிர்க்க,  குழந்தை பிறந்ததும் திருமணத்துக்கு என தனியாக ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க ஆரம்பித்துவிட வேண்டும். 23 வயதில் இத்தகைய செலவு வரும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது கல்யாணத்துக்கு 10 லட்சம் ரூபாய் தேவை எனில், 22 வருடங்களுக்குப் பிறகு 47.40 லட்சம் ரூபாய் தேவையாக இருக்கும்.

படிப்பு, திருமணம் போக, குழந்தைகளுக்குத் தேவையான சைக்கிள், 18 வயதில் ஒரு மோட்டார் பைக், செல்போன் போன்றவற்றை பரிசாக அளித்து உற்சாகப்படுத்தவும் சேமிப்பின் ஒரு  பகுதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

எப்படி சேமிப்பது?

நாம் வாங்கும் சம்பளத்தில் முதல் செலவு சேமிப்பாக இருக்கவேண்டும். அது குழந்தை களுக்காக இருக்கவேண்டும் என்றானால் அதைவிட சந்தோஷம் பெற்றோர்களுக்கு வேறென்ன வேண்டும்?  உதாரணத்திற்கு, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 25-வது வயதில் 25,000 ரூபாய் சம்பாதிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்செய்யவேண்டிய முதலீட்டு நடைமுறைகளை இனி பார்ப்போம்.

25 வயதில்  ஒருவருக்கு குழந்தை பிறப்பதாக கணக்கில்கொள்வோம். குழந்தை பிறந்தபிறகு, 0-5 வருடங்களுக்கு மாதம் 3,000 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்யவேண்டும். பணவீக்கம் ஆண்டுக்கு 7% உயர்கிறது எனில், அதற்கேற்ப ஒருவரது சம்பளமும் ஆண்டுக்கு 7% அதிகரிக்கும் என்று வைத்துக்கொள்ளலாம்.  

6-10 வயது வரை செய்துவரும் முதலீட்டுடன் 3,000 ரூபாயைச் சேர்த்து மாதம் 6,000 ரூபாயை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். குழந்தையின் பத்தாவது வயதில் ஒரு சைக்கிள் வாங்கித் தர வேண்டும் என்றாலும் இந்த முதலீட்டிலிருந்தே தேவையான தொகையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.  

குழந்தைகளின் 11-15 வயது வரை மாதம் 10,000 ரூபாயை ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்யவேண்டும். 16-23 வயது வரை மாதம் 15,000 ரூபாயை முதலீடு செய்யவேண்டும். இந்தச் சேமிப்பை குழந்தையின் படிப்பு (இதில் வெளிநாட்டு மேற்படிப்பு அடங்காது!) மற்றும் திருமணச் செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதற்குத் தேவையான முதலீட்டு விவரங்கள்  சேமிப்புத் திட்ட அட்டவணையில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. இந்த முதலீடு ஒரு குழந்தைக்கே.  இரண்டு குழந்தைகள் என்பவர்களுக்கு வருடா வருடம் உயரும் வருமானத்திலிருந்து தேவைக்கு தக்கபடி முதலீட்டையும் உயர்த்திக்கொள்வது அவசியம்.

இனி என்ன யோசனை, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இதுவரை சேமிக்கத் தொடங்காதவர்கள் உடனே அதில் இறங்க வேண்டியதுதானே!  

நன்றி: தொகுப்பு: செ.கார்த்திகேயன், படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்.

நன்றி:- நாணயம் விகடன்

Advertisements
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: