இல்லம் > தடையில்லா மின்சாரம் சாத்தியமா? > தடையில்லா மின்சாரம் சாத்தியமா?

தடையில்லா மின்சாரம் சாத்தியமா?


தடையில்லா மின்சாரம் சாத்தியமே…எப்படி?

தமிழக மின்சார தடை குறித்து எக்கச்சக்கமாக ஆதங்கப்பட்டு விட்டோம். நம் ஆதங்கத்தை எழுத்துக்களாக கொட்டிவிட்டோம். சரி, இதற்கு தீர்வு என்ன? மக்களாகிய நாம் இது குறித்த நம்முடைய எண்ணங்களை அரசாங்கத்திடம் பகிரலாமே? தடையில்லா மின்சாரம் சாத்தியமா?…. இம்மாதிரியான கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைக்க முயற்சிக்கின்றது இந்த கட்டுரை….

மின்சாரம் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்தபோது விளக்குகள் எரிவதற்கும், மின் விசிறி சுழல்வதற்கும் மற்றும் நிலத்தடி நீரை மேலேற்றுவதற்குமே பயன்படுத்தப்பட்டு வந்தது. உபரியான மின்சாரம் இருந்தது. தனியார்களால் மின் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட அந்தக்கால கட்டத்தில் வீடு வீடாக வந்து மின்சாரம் வேண்டுமா என்று மின்துறை ஊழியர்கள் கெஞ்சிக் கேட்டு மின் இணைப்புக் கொடுத்தனர்.

மேலும் மின்சாரக் கட்டணத்தைக்கூட தவணை முறை வியாபாரிகளைப் போல் வீடுகளுக்கு வந்து அலைந்து வசூலித்துச் சென்றனர். மின் உற்பத்தியை விட மின் உபயோகம் குறைவாக இருந்ததால் இந்த நிலை இருந்தது. ஆனால் அடுத்தடுத்த காலகட்டங்களில் மின்சாரத்தில் இயங்கும் நவீனசாதனங்களும், சொகுசான சாதனங்களும் பயன்பாட்டுக்கு வந்தன. விளக்குகளும், விசிறிகளும் சாப்பிடும் மின்சாரத்தை விட நூறு மடங்கு ஐநூறு மடங்கு என மின்சாரத்தை அதிகம் சாப்பிடக் கூடியவைகளாக இவை இருந்தன.

ஏசி, ஹீட்டர், ஃபிரிட்ஜ், ஃபிரீஸர், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், மைக்ரோ ஓவன், டீவி, கம்ப்யூட்டர், மின் அடுப்பு, எலக்ட்ரிக் குக்கர், வேக்கம் கிளீனர், ஹேர் டிரையர், அயர்ன் பாக்ஸ், ஸ்டிரியோ சிஸ்டம், டோஸ்டர், டீ மேக்கர், காப்பி மேக்கர் மற்றும் அதிக சக்தி வாய்ந்த மோட்டார் பம்புகள் போன்ற அனைத்துமே மிக அதிக அளவில் மின்சாரத்தைச் சாப்பிடக்கூடியவையாகும்.

இதுவரையில்லாத அளவுக்கு திடீரென்று அதிகப் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு மற்றொரு சிறப்பான காரணமும் உள்ளது. தொலைக்காட்சிப் பெட்டிக்கு விளக்கை விட அதிக மின்சாரம் தேவை. அதிகமான வீடுகளில் விளக்குகளுடனும், மின் விசிறியுடனும், வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தனர். மின் உற்பத்தி போதுமானதாக இல்லாத நம் மாநிலத்தில் அனைவருக்கும் இலவச கலர் டிவி கொடுக்கும் திட்டத்தினால் தான் பற்றாக்குறை தாறுமாறாக ஏறியது.

ஒரு கோடி குடும்ப அட்டைகளில் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்காவது தொலைக்காட்சிப் பெட்டிகள் கொடுக்கப்பட்டன. தொலைக்காட்சிப் பெட்டி இல்லாதவர்கள் தினமும் 16 மணிநேரம் புதிதாக பெற்ற தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினால், எவ்வளவு பற்றாக்குறை ஏற்படும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஒரு டிவி வைத்திருந்த குடும்பம் ஒன்றுக்கு மேற்பட்ட டிவியை இயக்கும் போதும் கூடுதல் மின்சாரம் செலவாகும். இதன் பின்னர்தான் தட்டுப்பாடு தாறுமாறாக ஏறியது.

தற்போது முதல்வர் ஜெயலலிதாவும் மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் என்று கொடுத்து வருகிறார். இதன் மூலமும் மின் பயன்பாடு அதிகரிப்பதால் மின் வெட்டு எட்டு மணி நேரமாகும் நிலை ஏற்பட்டது. மேற்கண்ட சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருந்த மக்கள் மீது இவைகள் திணிக்கப்படுவதால் போகப்போக மின் தட்டுப்பாடு அதிகமாகிக் கொண்டுதான் வரும்.

நினைத்தவுடன் சரி செய்யும் அளவிற்கு மின்சார நிலைமை இல்லை என்பதுதான் யதார்த்தமான நிலையாகும். தமிழகம் எந்த அளவுக்கு மின் பற்றாக்குறையில் உள்ளது என்பதை அறிந்து கொண்டால் தான் இது உடனடியாக சரி செய்யக்கூடியதல்ல என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.


மின்சாரத்தை வாட் கணக்கில் அளவிடுகிறார்கள். தமிழகத்தில் அனைவருக்கும் அனைத்துத் தேவைகளுக்கும் தங்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டுமானால், இப்போதைய நிலையில் 11 ஆயிரம் மெகாவாட் தேவைப்படும். (இந்த நிலையை நாம் எட்டும்போது மேலும் பல புதிய சாதனங்கள் வந்து கூடுதலாக 1000 மெகாவாட் தேவைப்படும் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்பது தனி விஷயம்)

ஆனால் தமிழகத்திற்கு தற்போது கிடைக்கும் மின்சாரத்தின் அளவு சுமார் 8000 மெகாவாட் மட்டுமே.  அதாவது அவசியம் ரூ.100 தேவையுள்ளவனுக்கு ரூ.65 மட்டுமே கிடைப்பது போல் மின்சாரம் மூன்றில் ஒருபங்கு பற்றாக்குறையாக உள்ளது. அதனால்தான் 24 மணி நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் எட்டு மணி நேரம் மின் வெட்டு செய்கிறார்கள். இப்போதைய நிலையில் என்னதான் தலைகீழாக நின்றாலும் 11 ஆயிரம் மெகாவாட் என்ற நிலையை எட்ட முடியாது. கூடங்குளம் மின் உலை செயல்பாட்டுக்கு வந்தால் 1000 மெகாவாட் தமிழகத்திற்குக் கிடைக்கும். இதனால் இரண்டு அல்லது மூன்று மணிநேர மின்வெட்டை சமாளிக்கலாம்.

இப்போது கிடைத்து வரும் எட்டாயிரம் மெகாவாட்  இப்படியே தொடர்ந்து கிடைக்கும் என்று சொல்ல முடியாது. மழை குறைந்து நீர் வீழ்ச்சி நின்று விட்டாலோ அணைகளில் தண்ணீர் குறைந்து விட்டாலோ நீர் மின்சாரம் மூலம் இப்போது கிடைத்து வரும் மின்சாரமும் குறைந்து போக வாய்ப்புள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டால் அதன் காரணமாகவும் அனல் மின்நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் குறைந்து போகலாம். காற்றாலை மின்சாரத்தையும் நம்ப முடியாது. இது அடிக்கடி காலை வாரிவிடக்கூடியதாகும். புதிய புதிய திட்டங்களை இப்போதே தீட்டினால்தான் எதிர்காலத் தமிழகத்தை இருளில் இருந்து காப்பாற்ற முடியும். எவ்விதத் தட்டுப்பாடும் இல்லாமல் சூரிய ஒளியிலும் மின்சாரம் தயாரிக்கலாம். பரவலாக இதற்கான தகடுகளை அதிகமாகப் பொருத்த வேண்டும். பெரிய அளவில் இது போன்ற மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல்லாயிரம் ஏக்கர் என்ற அளவில் பிரம்மாண்டமான தகடுகளை அமைத்தால் பகல் முழுவதும் மின் உற்பத்தி செய்ய முடியும்.

நிலக்கரிக்கும், நீருக்கும் அண்டை மாநிலங்களை நம்பி இருப்பது போல் சூரிய ஒளிக்காக யாரையும் சார்ந்து இருக்கத் தேவையில்லை. ஆரம்பத்தில் இதற்கு அதிகபட்சமான செலவு பிடித்தாலும், அத்தியாவசியத் தேவைகளில் செலவு கணக்கைப் பார்க்க முடியாது. இதைப்பற்றி அரசிடம் எந்தத் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும் இரவு பகல் என எல்லா நேரத்திலும் குறைந்த செலவில் கடல் அலைகளினால் கரையில் ஏற்படும் அழுத்தம் மூலமும் மின் உற்பத்தி செய்யலாம். தொடர்ந்து நிரந்தரமாக இதை உற்பத்தி செய்ய இயலும்.

மின் உற்பத்தியைப் பெருக்க இன்னும் எத்தனையோ திட்டங்கள் உள்ளன. அவற்றில் எல்லாம் அரசாங்கம் தன் கவனத்தைத் திருப்பினாலும் உடனடியாக மின்சாரம் கிடைக்கப்போவது இல்லை. போராட்டம் நடத்தினாலும் புரட்சியே வெடித்தாலும் இல்லாத ஒன்றை எந்த அரசாலும் தரமுடியாது என்பதுதான் யதார்த்தமான நிலை. இப்போதைய உற்பத்தியை வைத்துக் கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியும்.

மின் பற்றாக்குறையைச் சமாளிக்க இப்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கை முழுமையாகப் பயன்தராது. எட்டு மணிநேரம் மின்வெட்டு செய்வதால் மூன்றில் ஒரு பங்கு மின்சாரம் மீதமாகும் என்று அரசாங்கம் தப்புக் கணக்கு போடுகிறது. இவர்கள் விடாக்கண்டர்களாக  இருந்தால் மக்கள் கொடாக்கண்டர்களாக இருப்பார்கள் என்பதை அரசு கவனிக்கத் தவறிவிட்டது.

எட்டு மணிநேரம் மின்வெட்டால் விளக்கு, விசிறி, ஏசி ஆகிய மூன்றுதான் செயல்படாது. வாஷிங் மெஷின், ஓவன், கிரைண்டர், மோட்டார் பம்ப் உள்ளிட்ட எல்லா மின் சாதனங்களையும் மின்சாரம் வந்தபின் பயன்படுத்துவார்கள். ஓரளவு வசதி இருந்தால் ஒரு இன்வெர்ட்டர் மூலம் மின்சாரத்தை உறிஞ்சி மின்வெட்டின் போது விளக்கையும் விசிறியையும் இயக்கிக் கொள்வார்கள். எட்டு மணிநேர மின்வெட்டால் ஒரு மணிநேர மின்வெட்டின் பயன்தான் அரசுக்குக் கிடைக்கும்.

மண்டையைப் பிய்த்துக் கொண்டு பின்னர் பத்து மணி, 12 மணி என்று நீடித்துக் கொண்டே போவார்கள். இது பயனற்றதாகும். மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். நாம் முன்னரே சொன்னபடி அவசியத் தேவைக்கான மின்சாரம், சொகுசுத் தேவைக்கான மின்சாரம் எனற இரு வகைகளில் நமக்கு மின்சாரம் தேவைப்படுகிறது. இதை மட்டும் அதிகார வர்க்கம் சரியாகப் புரிந்து கொண்டால் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க இயலும்.

விளக்கோ விசிறியோ இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. ஏசியோ ஃபிரிட்ஜோ இல்லாமல் வாழ முடியும். இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு பின் வரும் யோசனைகளை அரசு செயல்படுத்தலாம். சில மணிநேர மின் வெட்டு இருந்த காலத்தில் அல்லது மின்வெட்டே இல்லாத காலங்களில் ஒரு வீட்டில் எவ்வளவு யூனிட் செலவானதோ அதில் முப்பது முதல் நாற்பது யூனிட் வரை குறைத்து இதுதான் உங்களுக்கான அளவு என்று ரேஷன் முறையைக் கொண்டு வரவேண்டும். அதாவது மின் வெட்டு இல்லாத நேரங்களில் 200 யூனிட் பயன்படுத்தி இருந்தால், அவர்களின் மின்சார ரேஷன் 140 யூனிட்டுகள்தான் என்று நிர்ணயிக்க வேண்டும்.

மின் ஊழியர்கள் 10 நாள்களுக்கு ஓரு முறை வீடு வீடாகச் சென்று உங்கள் ரேஷனில் இவ்வளவுதான் மீதம் உள்ளது என்று சொல்ல வேண்டும். அவர்கள் உபயோகிக்க வேண்டிய அளவை அடைந்துவிட்டால் அந்த மாதத்தில் எஞ்சிய நாட்களுக்கு அவர்களுக்கு மட்டும் மின்சாரத்தை நிறுத்தலாம். ஊருக்கே நிறுத்த வேண்டியதில்லை.

இதை கம்ப்யூட்டர் புராக்ராம் மூலமும் (gsm, micro-controller அல்லது வேறு எந்த யுக்திகளை கொண்டும்) செய்ய முடியும். அல்லது ஊழியர்களின் கண்காணிப்பு மூலமும் செய்யலாம். இப்படி ரேஷன் முறையை அமுல்படுத்தினால் குடும்பத்தவர்கள் இரவில் நிம்மதியாகத் தூங்கவும், பிள்ளைகள் படிக்கவும் தேவையான அளவுக்கு மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்தி சொகுசு சாதனங்களை தாங்களாகவே இயக்காமல் நிறுத்திக் கொள்வார்கள், அல்லது குறைத்துக் கொள்வார்கள்.

சொகுசு வாழ்க்கைக்கு மின்சாரம் இல்லை என்பதால் யாரும் புரட்சி செய்ய மாட்டார்கள். அடிப்படைத் தேவைக்கே இல்லாவிட்டால்தான் புரட்சி வெடிக்கும். எனவே மின்சாரம் 24 மணிநேரமும் வந்து கொண்டே இருக்கும். பயன்படுத்துவோர் சுயக்கட்டுப்பாடு செய்து கொள்வார்கள். இதன் மூலம் இருக்கும் மின்சாரத்தை வைத்தே மின்வெட்டு இல்லாமல் சமாளிக்கலாம்.

வர்த்தக நிறுவனங்கள் பொருள்களைக் கவர்ச்சியாகக் காட்டவும், விளம்பரத்துக்காகவும், தாறுமாறாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். அவர்களையும் இந்த ரேஷனில் கொண்டு வர வேண்டும். அப்படிக் கொண்டு வந்தால், அதிக மின்சாரத்தை இழுத்துக் கொள்ளும் நியான், மெர்குரி போன்ற விளக்குகளைத் தவிர்த்துக் கொண்டு தங்களுக்கான ரேஷன் அளவுக்குள் அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

தொழிற்சாலைகள், உற்பத்தி சார்ந்தவை மற்றும் மேலதிகச் செலவுவகை என இரு வகைகளில் மின்சாரத்தைச் செலவிடுகின்றன. தொழிற்சாலைகள் இயங்காவிட்டால் பலரது வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதால் தொழிற்சாலைகளுக்கு 20 சதவிகிதம் அளவுக்கு குறைத்து ரேஷன் நிர்ணயிக்கலாம். இதனால் உற்பத்திக்கு மட்டும் மின்சாரத்தைப் பயன்படுத்துவார்கள். தொழிலாளிகள் வேலை இழக்கும் நிலை இதனால் ஏற்படாது.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது அவசியமானதுதான். ஆனால் இரண்டு மணி நேரம் மோட்டார் இயங்கினால் போதும் என்ற நிலையில் 24 மணிநேரமும் மின் மோட்டார் இயங்கி தண்ணீரும்,  மின்சாரமும் வீணாவதை யாரும் மறுக்க முடியாது.

ஒரு ஏக்கருக்கு எத்தனை யூனிட் என்று நிபுணர்களைக் கொண்டு மதிப்பிட்டு ஒவ்வொரு இணைப்பிற்கும் எத்தனை யூனிட்டுகள் என்பதை நிர்ணயித்துக் கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தலாம். அதுபோல் அரிசி கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்திக்கு மட்டும் இலவச மின்சாரத்தை வழங்கிவிட்டு மற்ற பணப் பயிர்களுக்கு கட்டணத்தை நிர்ணயிப்பதுடன் அவற்றிற்கும் உரிய ரேஷனை நிர்ணயிக்கலாம்.

பொதுக்கூட்டமோ மாநாடுகளோ எந்தக் கட்சி நடத்தினாலும், கொக்கி போட்டோ அல்லது இணைப்புப் பெற்றவரிடம் அனுமதி பெற்றோ மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றனர். ஜெனரேட்டர் வழியாகத் தவிர வேறு வகையில் மின்சாரம் பயன்படுத்தக்கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கட் அவுட்டுகள் மற்றும் சீரியல் விளக்குகளுக்கும் இதையே சட்டமாக்க வேண்டும். ஏனென்றால் இது பலரிடம் வசூல் செய்யப்படுவதால் இதற்கு ஆகும் அதிக செலவு பொதுமக்களைப் பாதிக்காது.

மின் நிலைமை சீராகும் வரை, திருமண மண்டபங்களுக்கு ஜெனரேட்டர் மூலம் மட்டுமே மின்சாரம் பயன்படுத்த உத்தரவிடலாம். கல்யாண மண்டபத்துக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வோர், மின்சாரத்துக்காக சில ஆயிரங்களைச் செலவு செய்ய தயங்கமாட்டார்கள். சாப்பிடவும், படிக்கவும், தூங்கவும் தடையில்லாத மின்சாரம் 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்தால் மக்கள் நிலைமையைப் புரிந்து கொள்வார்கள்.

முட்டை பல்பு எரிக்க வேண்டாம் என்றும், எல்.இ.டி. விளக்குகளையும் எல்.இ.டி. டிவிக்களையும் பயன்படுத்துங்கள் என்றும் நாம் பிரச்சாரம் செய்யத் தேவையில்லை. ரேஷன் முறையைக் கொண்டுவந்தால் பொதுமக்களே தாமாக முன் வந்து குறைந்த மின்சாரம் செலவாகும் சாதனங்களை வாங்கும் நிலை ஏற்படும்.

இதன் மூலம் அவர்களின் பொருளாதாரத்தில் சேமிப்பு ஏற்படுவதால் சிலர் வாழ்த்தினாலும் ஆச்சரியமில்லை. தமிழக அரசும், மின்வாரியமும் இதைக் கவனத்தில் கொள்ளுமா?

நன்றி:- உணர்வு

நன்றி:-http://manithaabimaani.blogspot.com/

Advertisements
  1. 7:29 பிப இல் மார்ச் 2, 2012

    சிறப்பான பதிவு !

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: