இல்லம் > அமலால் நிறையும் ரமலான் > அமலால் நிறையும் ரமலான் (அமல்=நற்செயல்) – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

அமலால் நிறையும் ரமலான் (அமல்=நற்செயல்) – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

ஓகஸ்ட் 10, 2011

பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்

படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்

கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்

கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்

பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவரும் மாதம்

பயபக்தி யாதென்று சோதிக்கும் மாதம்

வசிக்கின்ற ஷைத்தானை விலங்கிலிடும் மாதம்

வறியவர்க்கு ஈந்திடவே “ஃபித்ராவின்” மாதம்

குடலுக்கு மோய்வாக்கி குரானோதும் ரமலான்

குற்றங்கள் தடுத்துவிடும் கேடயமாம் ரமலான்

*திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்*

திண்ணமாகச் சுவனத்தைப் பெற்றிடத்தான் ரமலான்

உடலுக்கும் பயிற்சியாக்கும் நெறிமுறைகள் ரமலான்

உயிர்க்குள்ளே உணவானச் சுடராகும் ரமலான்

கடலுக்குள் மீன்போல கல்புக்குள் ரமலான்

கர்த்தனவ னறியுமிர கசியம்தான் ரமலான்

குறிப்பு: இப்பாடலில் தடிமன் எழுத்துக்களில் உள்ளவைகள் அறபுச் சொற்கள்; இவ்வாறாக அறபுத்தமிழினைப் பாடலில் இணைப்பது இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் ஏற்றுக் கொள்ளப்படிருப்பதை உமறுப்புலவர் அவர்களின் சீறாப்புராணம் மற்றும் உள்ள இலக்கிய நூற்களில் காணலாம். கீழே அச்சொற்கட்கான பதவுரை வழங்கியுள்ளேன்:

 

 

 

 

ஷைத்தான் = இறைவனால் சபிக்கப்பட்டு நம் இரத்த நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் நம்மை வழிகெடுக்கும் ஒரு தீயசக்தி.

ஃபித்ரா = நோன்பில் ஏற்பட்டத் தவறுகட்குப் பரிகாரமாகவும் ஏழைகளின் உணவுத் தேவைக்கு நோன்புப் பெருநாளைக்கு முன்னதாகக் கொடுக்கப்பட வேண்டிய தர்மம்

குர்-ஆன் = இறைவன் வழங்கிய இறுதி வேதம்

கல்பு = ஹ்ருதயம்; உள்ளம்

ரமலான் = இஸ்லாமிய ஐந்து கடமைகளில் ஒன்றான  (வைகறை முதல் அஸ்தமனம் வரை) நோன்பிருக்கும் மாதம்

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)

அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499

வலைப்பூ: http://www.kalaamkathir.blogspot.com/

Advertisements
%d bloggers like this: