இல்லம் > இன்று எகிப்து... நாளை இந்தியா? > இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி


வீன உலகின் மக்கள் புரட்சி எப்படிப்பட்டதாக இருக்கும்?

சந்தேகமே இல்லாமல், எகிப்தைக் கை காட்டலாம்! 30 வருட சர்வாதிகார ஆட்சியை, வெகுமக்கள் போராட்டத்தால் தூக்கி வீசியிருக்கிறது கிளியோபாட்ரா தேசம்.

கெய்ரோ மாநகரின் தஹ்ரீர் சதுக்கத்தில் 18 நாட்களாக லட்சக்கணக்கில் திரண்ட மக்கள், 30 ஆண்டுகளாக நாட்டை சர்வாதிகாரம் செய்துகொண்டு இருந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்கை (82) நாட்டைவிட்டு ஓடவைத்தனர்.

எகிப்தின் அடிப்படைப் பிரச்னை என்ன? வரலாற்றில் ரோம சாம்ராஜ்யம் என அறியப்படும் ஒட்டுமொத்தப் பிரதேசத்துக்கும் ஒரு காலத்தில் தானிய ஏற்றுமதி செய்த செல்வச் செழிப்பான நாடு எகிப்து. ஒரு வல்லரசு ஆவதற்கான தகுதியுடைய நாடுதான். ஆனால், எங்கும் வறுமை, உணவுப் பஞ்சம், வேலைவாய்ப்பு இன்மை. எகிப்தின் மொத்த வளத்தையும் தன் சொந்த உடைமையாகக் கருதி கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருந்தார் அதிபர் முபாரக். கடுமையான பொருளாதார நெருக்கடி, குழு மோதல்களாகவும் கலவரங்களாகவும் ஆங்காங்கே வெடித்தன. அப்போதுதான் நடந்தது மற்றோர் அரபு நாடான துனிஷியாவின் மக்கள் புரட்சி. உண்மையில் தற்போதைய எகிப்து எழுச்சியின் துவக்கப் புள்ளி துனிஷியாவில்தான் தொடங்குகிறது.

23 ஆண்டுகளாக துனிஷியாவை சர்வாதிகாரம் செய்து வந்தவர் அதிபர் பென் அலி. 74 வயதாகும் இவர், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்தோ, மக்களின் வாழ்வாதாரம் குறித்தோ சிறிதும் கவலைப்படவில்லை. அரபு நாடுகளில் அதிகம் படித்தவர்கள் உள்ள நாடு துனிஷியாதான். ஆனால், அங்கேயும் வறுமை. இதை எதிர்த்துப் போராடினால், சிறையும் மரணமுமே பரிசு. அந்த நிலை யில்தான், முஹமது வுவாசி என்ற வேலை அற்ற பட்டதாரி இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். முஹமது செல்வாக்கானவரோ, புகழ்பெற்றவரோ இல்லை. ஆனால், மக்களின் கோபத்தை, அவரது மரணம் ஒருங்கிணைத்தது. ஒட்டுமொத்தத் துனிஷிய மக்களும் கோபாவேசத்துடன் போராட, கடைசியில் அதிபர் பென் அலி, நாட்டை விட்டு ஓடிப்போனார்.

துனிஷிய மக்கள் புரட்சி எப்படி ஒரு தற்கொலையால் துவக்கிவைக்கப்பட்டதோ, அதேபோல எகிப்துப் புரட்சியும், காலித் சையித் என்ற இளைஞனின் தற்கொலையில் இருந்துதான் துவங்கியது. எகிப்து போலீஸின் அத்துமீறல் வீடியோவை இணையத்தில் வெளியிட்டார் என்ற ‘குற்றத்துக்காக’ போலீஸ் அவரைச் சித்ரவதை செய்து கொலை செய்தது. அதுவரை சிறுசிறு குழுக்களாக நடந்த மக்கள் போராட்டங்களை காலித் சையித்தின் மரணம் ஒன்று சேர்த்தது.

உண்மையில் துனிஷியா, எகிப்து… இரண்டு நாடுகளின் மக்கள் போராட்டத்தை ஒருங் கிணைத்ததும், வெற்றிபெற வைத்ததும் தொழில் நுட்பம்தான். twitter, facebook ஆகிய சமூக வலைதளங்களும், வீடியோ வலைதளமான youtube-ம் இந்தப் போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தன. எகிப்துப் போராட்டத்தில் கலந்துகொள்ள facebook மூலம் விடுக்கப்பட்ட அழைப்பால் வந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரம். இந்த வலைதளங்களை எகிப்து அரசு தடை செய்தபோதிலும், வெளிநாடு வாழ் எகிப்தியர்களால் தகவல்கள் பரபரவெனக் கொண்டுசெல்லப்பட்டன. துனிஷியாவிலும் இப்படித்தான் தடை செய்தார்கள். ஆனால், இணைய இணைப்பு உள்ள கேமரா மொபைல் மூலம், போராட்டக் களத்தில் நின்றபடி உடனுக்குடன் எல்லாவற்றையும் இணையத்தில் பரப்புவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இணையத்தைத் தாண்டி, உண்மையை வெளி உலகுக்குச் சொன்ன அல் ஜஸீரா தொலைக்காட்சியின் அலுவலகத்தை மூடி, அதன் நிருபர்கள் ஆறு பேரைக் கைது செய்தது எகிப்து அரசு. எல்லா அடக்குமுறைகளையும் இறுதியில் மக்கள் புரட்சி வென்றுவிட்டது.

துனிஷியா, எகிப்து… எனப் பரவும் மக்கள் புரட்சியின் அடுத்த கட்டமாக, இப்போது ஏமன் நாட்டு சர்வாதிகாரி சலேவுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கி இருக்கின்றன. உள்ளூர்ப் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஜோர்டானிலும் பெருந்திரள் போராட்டங்கள் நடைபெறுகின்றன. மத்தியக் கிழக்கின் அரபு நாடுகளில் ஓர் அலையைப்போலப் பரவி வரும் மக்கள் போராட்டங்களைக் கண்டு அதிகம் அஞ்சுவது அமெரிக்காதான். ஏனெனில், பல காலமாக எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடுகளில் நகாசு அரசியல் செய்து வருகிறது அமெரிக்கா. இப்போது தன் செல்வாக்கு எல்லையைத் தாண்டி மக்களின் போராட்டம் நடப்பதால், என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து நிற்கிறது.

இப்போது துனிஷியாவில் பென் அலி, எகிப்தில் முபாரக் போல… சில காலம் முன்பு இரானில் மன்னர் ஷா, பிலிப்பைன்ஸில் மார்கோஸ், பனாமாவில் நொரீகா, இராக்கில் சதாம்… என அமெரிக்க விசுவாசிகள் பலர் இருந்தனர். மக்கள் புரட்சி வெடித்தபோது, அனைவரையும் அமெரிக்கா கடைசி நேரத்தில் கழுத்தறுத்துக் கைவிட்டதுதான் வரலாறு. தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அதி தீவிர விசுவாசியாக இந்தியா இருக்கிறது. எனில், இந்தியாவின் முபாரக், இந்தியாவின் பென் அலி யார்?

நன்றி:- பாரதி தம்பி

நன்றி:- .வி

Advertisements
  1. samy.sathi
    1:15 முப இல் பிப்ரவரி 20, 2011

    Please wake up before Italy rob the whole India.Certainly It happens one day to India. Persia,Britain now the Italy turn.Samy.

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: