இல்லம் > விக்கிலீக்ஸ் இரகசியம் > விக்கிலீக்ஸ் இரகசியம் – எஸ் செல்வராஜ்

விக்கிலீக்ஸ் இரகசியம் – எஸ் செல்வராஜ்


“”ஏகாதிபத்தியம் தன்னுடைய சதி திட்டங்கள் மூலமே வெற்றி பெறுகிறது. நாட்டை கொள்ளையிட போடும் கூட்டு மற்றும் ஒப்பந்தங்கள்  போன்றவையே அதனுடைய இராஜ தந்திரங்கள். அந்த இராஜதந்திர இரகசியத்தை ஏகாதிபத்திய நாடு அதிகபட்ச முக்கியத்துவத்தை  கொடுத்து பாதுகாக்கும்.”

– லியோன் டிராட்ஸ்கி, 1917 சோவியத் யூனியன்.

உலக போலீஸ்காரன் என்று அமெரிக்கா அழைக்கப்படுவது வழக்கம். காரணம், உலகளவில் பொருளாதார, யுத்த ஆதிக்கம் செலுத்துவதில் உச்சத்திலுள்ள நாடு. கடந்த ஆண்டுகளில் வியட் நாம், ஈராக், ஆப்கானிஸ்தான்  என பல நாடுகளின் மீது போர் தொடுத்து ஏராளமான  மக்களை கொன்றுள்ளது. அவைகளின் பொருளாதாரத்தையும் வாழ்வாதரங்களையும் இயற்கை வளங்களையும் கைப்பற்றியுள்ளது.   இலத்தீன் அமெரிக்க நாடுகள் ( தென் அமெரிக்க நாடுகள்), மேற்காசிய நாடுகள், கிழக்காசிய நாடுகள், பொதுவுடமை நாடுகள், ஆப்பிரிக்க  நாடுகள் என எந்த நாடும் அதன் ஆதிக்க அரசியலிலிருந்து தப்பியதில்லை. எதிர்த்து கேட்பதற்கு எந்த நாடும் தயாராகவும் இல்லை.  உலக அமைதி, மனித உரிமைகளை பேசும் நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்கா முன் னால் கைக்கட்டிக் கொண்டு நிற்கின்றன. இப்படியெல்லாம் இருந்த அமெரிக்கா இன்று “விக்கிலீக்ஸ் என்ற ஒரு இணையத்தளத்தினால் மூக்குடைக்கப்பட்டு,  கையறுநிலையில் நிற்கிறது. அனைத்து நாடுகளையும் தொடர்புக் கொண்டு விக்கி லீக்ஸை நம்ப வேண்டாம். அதில் உள்ளது எல்லாம்  பொய்’ என கதறி வருகிறது. அமெரிக்காவின் பொய் முகத்தை விக்கிலீக்ஸ் அகற்றிவிட்டதாகவே அனைத்துலக ஊடகங் களும் செய்திகளை வெளியிடுகின்றன. இச்சாதனை புரிந்த விக்கிலீக்ஸ் பக்கங்களை புரட்டுவோம்.

விக்கிலீக்ஸ்  (Wikileaks) அல்லது விக்கி கசிவுகள் என்பது இன்று உலகமே பரபரப்பாக பேசப்படும் இணையத்தளம். ஒரு இலாப நோக்கற்ற  இணைய ஊடகம். இதில் விக்கி என்பது யார் வேண்டுமானலும் பங்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இணையத் தளங்களை குறிக்க  பயன்படுத்தும் வார்த்தை. உதாரணத்திற்கு தகவல் களஞ்சியமான என்சைக்ளோபீடியாவின் விக்கி வடிவம்தான் விக்கிப்பிடியா (wikipedia.com). இதுபோல விக்கிலீக்ஸ் பெயர் அறிவிக்காதவர்களின் பங்களிப்புகளைக் கொண்டிருப்பதுடன், அரசு அல்லது சமய நிறுவனங்களின்  பாதுகாக்கப் பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு  கொண்டு வருகின்றது. நிறுவிய  ஓராண்டுகளுக் குள்ளேயே 1.2 மில்லியன் ஆவணங்கள் இந்த இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமாக  ஆப்கானிலும் ஈராக்கிலும் அமெரிக்கப் படை செய்த படுகொலைகளை பகிரங்கப்படுத்தியுள்ளது. இராணுவம் செய்த கொடூரங்களை  ஒளிப்படங்களாக வெளியிட்டது. அமெரிக்க இராணுவ இரகசிய ஆவணங்களை வெளியிட்டு திகிலூட்டியது. இவ்வளவுக்கும் காரணமான விக்கிலீக்ஸ் இணையத்தை இயக்குபவர்கள் சில பேர் கொண்ட குழுதான். அதன் மூளை வர்ணிக்கப்படுபவர் விக்கி லீக்ஸின் ஆசிரியர் ஜூலியன் பவுல் அசாஞ்ச். இணையத்தளத்தை நிறுவியவர். அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். இவரின் தன்னலமற்ற மனித  உரிமை ஆர்வம்தான் விக்கிலீக்ஸ் உருவாக காரணம்.

ஜூலியன் பவுல் அசாஞ்ச்  (Julian Paul Assange)  ஓர் ஆஸ்திரேலியர். இந்த துடிப்பான இளைஞருக்கு 41 வயது. திருமணமாகி  விவாகரத்தானவர். தனது 16 வயதிலேயே கனடாவின் புகழ்பெற்ற நோர்டெல் தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய வழங்கியினை  தன் வசப்படுத்தி, அதனுள் புகுந்து அனைத்தையும் படித்த ஹேக்கிங் கில்லாடி.

ஹேக்கிங் என்பது ஒருவரின் வலைதளத்தின் உள்அமைப்புக்குள் திருட்டுத்தனமாக சென்று அவற்றில் வைக்கப்பட்டுள்ள தகவல்களை திருடுவது. மாட்டிக்கொண்டால் சிறைதண்டனை  நிச்சயம். இதில் ஆதாரங்கள் இல்லாமல் ஹேக்கிங் செய்வதில் நிபுணத் துவம் பெற்றவர் ஜூலியன். வலையமைப்பின் பாதுகாப்பு  வலையங்களை உடைத்து உட்புகுந்து கணினிகளுக் கோ, அதிலுள்ள கோப்புகளுக்கோ எந்த சேதத்தினையும் விளைவிக்காமல்,  தகவல்களை திருடுவதில் கரைக்கண்டவர். இது ஒரு பாதுகாப்பான திருட்டுத் தனம். இந்த வழியில் பல  பொது நிறுவனங்கள்,  அரசுத் துறைகள் சார்ந்த வலையமைப்புக்குள் தகவல் களை எடுத்துவந்தார். அப்படி செய்துவந்த வேளையில் இந்த சமூகம் எப்படி ஒரு  போலியான கட்டமைப்புக் குள் இருந்து கொண்டு அப்பாவி மக்களை அலைக் கழிக்கிறது என்பதனைக் புரிந்துக் கொண்டார். ஊடக  போதையில் ஊறிக் கிடக்கும் இச்சமூகத்தினை ஒரு ஊடகப் புரட்சியின் மூலமே தெளிய வைக்க முடியும் என்று நம்பிய ஜூலியன்  அதற்குக் கொடுத்த செயல் வடிவம்தான் “விக்கிலீக்ஸ்’.

அரசின் இரகசியங்களை பகிரங்கமாக மக்களிடம் எடுத்துவைப்பது என  முடிவு செய்து விக்கிலீக்ஸ் தளத்தினை ஆரம்பித்தார் ஜூலியன். இதற்காக wikileaks.org எனற இணையத்தள முகவரி 2006-ஆம் ஆண்டு  அக்டோபர் 4-ஆம் தேதி ஜூலியனின் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 20 கோப்பு நிரல்களை வழங்கும் வழங்கிகள் பல ஐரோப்பிய  நாடுகளில் ஏற்படுத்தப்பட்டது.

ஏன் ஐரோப்பிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றால் இந்த நாடுகள் அனைத்தும் தகவல் பரவல்  சட்டப்படி பாதுகாப்பு வழங்கும் நாடுகள். எந்த நாடா வது விக்கிலீக்ஸ் தளத்தை முடக்கினால், வேறொரு நாட்டில் இருந்து தளம்  தடையின்றி செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. அதேபோல வெளி யிடப்படும் இரகசியத் தகவல்களை எந்த நேரத்திலும் எந்த  நாட்டின் நிர்ப்பந்ததிற்காகவும் நீக்குவதில்லை என்பது விக்கிலீக்ஸ் கொள்கை.  இப்படி சிறப்பாக திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டது  விக்கிலீக்ஸ். இது இந்த நூற்றாண்டின் இணைய ஊடகத்தின் மாபெரும் புரட்சி என்றே சொல்லலாம்.

உலகமெங்கும் விக்கிலீக்ஸ் தளத்திற்கான பதிவு செய்யப் பட்ட தன்னார்வ தொண்டர்கள் மட்டும் 1200 பேர். இது 2009-ஆம் ஆண்டு  விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல். இவர் களை வழிநடத்துவது விக்கிலீக்ஸ் ஆலோசனைக் குழு. அதில் ஜூலியன் அசாஞ்ச் (ஆலோசனைக்  குழுவின் தலைவர்), பிலிப் ஆதம்ஸ், சி.ஜே.ஹின்க், பென் லூரி, டேசி  நெம்கியால் கம்ஷிட்சாங், சூவா கியுவங், சிகோ விட்கேர், வாங்  யுக்காய் ஆகியோர் உள்ளனர். மொத்தமே இவ்வளவு பேர்தான் விக்கிலீக்ஸின் பணியாளர்கள். இவர்களின் பணி கோப்புகளை சரிபார்ப்பது, மொழிபெயர்க்க வேண்டியிருந்ததால் மொழி பெயர்ப்பது, அதன் பின்னர் கோப்புகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வெளியிடலாமா, வேண்டாமா என்று பரிந்துரைப்பது. அவ்வாறு  பரிந்துரைக்கப்பட்டவைகளில் இருந்து சிறப்பானவையாக, முக்கியத் தகவல்களாக, தேர்ந்தெடுப்பது ஜூலியனின் வேலை. இவரே  முதன்மை ஆசிரியர். இவர்களின் சீரிய பணியிலிருந்துதான் விக்கிலீக்ஸ் செயல்படுகிறது.
அடுத்ததாக, உங்களுக்கு இங்கு ஒரு சந்தேகம் வரலாம். சாதாரணமாக யாருக்கேனும் ஈமெயில் வழியே மிரட்டல் விடுத் தாலே அவர்கள்  பயன்படுத்திய ஐ.பி (Internet Protocol address – IP address)  முகவரியை கண்டுபித்து ஈமெயில் அனுப்பியவரை பிடித்துவிடுவார்கள். அப்படி இருக்க ஒரு நாட்டின்  இரகசியத்தையே எப்படி விக்கிலீக்ஸிற்கு அனுப்பிவைக் கின்றனர். அவர்கள் மாட்டிகொள்ள மாட்டார்களா என கேள்வி எழுவது  நியாயமானதே. இந்த மாபெரும் பிரச்சினையிலிருந்து தப்பிக்க விக்கிலீக்ஸ் தனது ஆர்வலர்களுக்கு பரிந்துரை செய் திருப்பது பர்ழ். இது ஒரு  இணையத்தொடர்பு வழங்கி. www.torproject.orgஇல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Tor anonymity network என குறிப்பிடப்படுகிறது. இதன்  இலச்சினையே வெங்காயம்  தான். வெங்காயம்  உரிக்க,  உரிக்க இதழ்கள்தான் கிடைக்குமே ஒழிய, ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே இருக்காது. கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இந்த  டார். திருட்டுதனமாக இதன் மூலம் எதையும் அனுப்பலாம். இதனுள் போனால் நீங்கள் எங்கிருந்து என்ன தகவல்களை அனுப்புகிறீர்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இப்படி எல்லா விதத்திலும் தயார்படுத்திக் கொண்டு ஊடக யுத்ததிற்கு தயாரானார்கள் விக்கிலீக்ஸ் குழுவினர். இது நக்கீரன் இதழில் தொடராக வரும் யுத்தத்தை போல. அதில் நீங்கள் நக்கீரன் கோபால் அவர்கள் நடத்திய அ.தி.மு.க. அரசுக்கெதிரான யுத்தத்தையும் அவரின் வீரத்தையும் படிக்கலாம்.

விக்கிலீக்ஸ் 2010 ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி சுமார் 30 நிமிடம் ஓடக் கூடிய ஒரு வீடியோவை Collateral  Murder என்ற பெயரில் வெளியிட்டது. அவ்வளவுதான் ஒட்டு மொத்த அமெரிக்காவும் அவமானத்தால் முகத்தினை கவிழ்த்து கொண்டது.  அப்படி என்ன இருந்தது அந்த வீடியோவில்?. எந்தவித விபரீத அறிகுறியும் இல்லாமல், வெறும் முன்னெச்ச ரிக்கைக்காக என்ற  காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு சிட்டுக்குருவிகள் போல் சாதாரண மக்களை, குழந்தைகளை, பொதுமக்கள் குடியிருக்கும்  கட்டிடத்தினை  வேட்டையாடப் படுவது அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. அதில் இறந்தவர் களில் புகழ்பெற்ற  “”வாஷிங்டன் போஸ்ட்” செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் இருவரும் அடங்குவர். அவர்களின் மரணம் குறித்து பலமுறை  கேள்வியெழுப்பிய போதெல்லாம், தங்களுக்கு எதுவுமே தெரியாது என அதுவரை அமெரிக்கா மறுத்து வந்ததும், அந்த வீடியோ  தாக்குதலில் ஈடுபட்ட அதே  ராக்கெட்டிலிருந்தே எடுக்கப்பட்டிருந்ததும் ஆச்சர்யமான விஷயம்.

அமெரிக்காவின் மனித உரிமை,  சர்வதேசப் போர் விதி முறை சாயங்கள் இணையத்தில் மொத்தமாகக் கரைந்து, இவ்வ ளவு நாள் மறைத்து வைக்கப்பட்ட விகாரமான  இராணுவ முகம் உலகத்தின் கண்களுக்கு காட்சியளித்தது. உலக அளவில் மனித நேய ஆர்வலர் ஜூலியன் பவுல் அசாஞ்ச்-ஐ  கொண்டாடியது. ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டன. நியூ மீடியா விருது, இங்கி லாந்து மீடியா விருது போன்றவை அவற்றில்  முக்கியமானவை.

2010-ஆம் ஆண்டு  ஜூலை மாதம் 25-ஆம் தேதி விக்கி லீக்ஸ் 1.2 மில்லியன் அமெரிக்க இராணுவ கோப்புகளை கைப் பற்றியது. இவற்றை அலசிபார்த்து ஆயிரம்  கோப்புகளை மட்டும் ஒழுங்குபடுத்தியது. அதனை ஆப்கானிஸ்தான் போர்க் குறிப்புகள் (Afghan War Diary) என்ற  தலைப்பில் வெளியிடப்பட்டது. விக்கிலீக்ஸ் தளத்தில் மட்டுமே வெளியிடாமல் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், ஜெர்மனியின் டெர்  ஷெபிகல், பிரான்சின் லி மொன்ட், ஆஸ்திரேலியாவின் தி ஆஸ்திரேலியன், இங்கிலாந்தின் த கார்டியன் போன்ற முக்கியப்  பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவ்வளவுதான் மறுநாள் உலகமே தடுமாறிப்போனது. விக்கிலீக்ஸ் தளத்தின் ஆரம்ப கால  அதிரடி வெளியீடு திக்குமுக்காட வைத்து விட்டது. அமெரிக்க அரசாங்கத்தின் “”நேர்மையற்ற” போர் தந்திரங்கள், படுகொலைகள்  அம்பலமானது. அதில் முக்கியமானது சக நேசநாட்டுப்  (Nato)  படையான கனடாவின் படையணியைச் சேர்ந்த நால்வரை அமெரிக்க ராணுவமே  சுட்டுக்கொன்ற தும் இதில் அடக்கம். வட அமெரிக்காவில் அரசியல் உஷ்ணம் அதிகமானது. நீச்சல் தெரியாதவனைத் தண்ணீருக்குள் தள்ளிவிட்ட நிலைமை அமெரிக் காவிற்கு. இதற்கு முன் சரித்திரத்தில் இப்படி மொத்தமாக இவ்வளவு விஷயங்கள் ஒரே நேரத்தில் அரசாங்க  ஆவணங்களாகவே வெளியிடும் அளவுக் கான ஊடகத் தாக்குதலை எந்த நாடும் எதிர் கொண்டதில்லை. “”இது நாட்டின் பாதுகாப்பு மற்றும்  இறையாண்மை மீதான தாக்குதல், இல்லை இல்லை’ இவர்கள் யாரென்றே தெரியவில்லை, எப்படி நம்புவது’, இல்லை இல்லை அவர்கள் சொல்வதெல்லாம் ஆரம்பத்தில் நடந்தது, பின்னர் நாங்கள் திருந்திவிட்டோம், இல்லை இல்லை ‘அந்த கனடா வீரர்களை  நாங்கள் கொல்லவில்லை,” என அமெரிக்கா உளறிக்கொட்டியது. அப்படி உளறினாலும், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆணிவேரை நோக்கியத்  தாக்குதலிற்கான தனது சகல முயற்சிகளையும் அன்றே ஆரம்பித்தது அமெரிக்கா. அமெரிக்காவிற்கு இது மானப் பிரச்சினை என்பதால் முழுவேகத்துடன் விக்கிலீக்ஸ் நோக்கிப் பாய்ந்தது.

2010 நவம்பர் மாதம் 28- ஆம் தேதி அமெரிக்காவின் முகமூடி கழற்றப்பட்ட நாள்.  அமெரிக்க தூதரக இரகசியம் (Cablegate) பெயரில் 2,50,000 கோப்புகளை வெளியிட்டது விக்கிலீக்ஸ். அமெரிக்க தூதரகங்களின் ஆவணங்கள் இணைய வரலாற்றில் முதல் முறையாக அம்பலப்படுத்தப்பட்டது. இதனால் அமெரிக்க  வெள்ளைமாளிகையின் அடித்தளமே ஆட்டம் கண்டது. “அமெரிக்காவின் பாதுகாப்புக் கெதிரான அச்சுறுத்தல், உலக நாடுகளில்  ஒற்றுமையின் மீதானத் தாக்குதல்’’ என்றார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன். ஒவ்வொரு நாட்டுத்  தலைவர்களையும் தொலைபேசியில் அமெரிக்கா அழைத்து “அதெல்லாம் பொய்.. ஏமாத்துறான்..நம்பாதீங்க’ என்றெல்லாம் கெஞ்சியது.  வரலாற்றில் முதல் முறையாக  அமெரிக்கா சகநாடுகளிடம் சிரம் தாழ்ந்து, பணிந்து பேச வைத்தார். ஜூலியன். விக்கிலீக்ஸ்  வெளியிட்ட இரகசிய ஆவணங்களைப் படித்த பிறகு, இப்போது, ஒவ்வொரு நாட்டுக்கும் தனது தூதர்களை அனுப்பி, விக்கிலீக்ஸ்’  சொல்வதை தயவு செய்து நம்பிவிடாதீர்கள்’ என்று கோரிக்கை விடுத்துவருகிறது அமெரிக்கா. அப்படி என்ன இருக்கிறது அமெரிக்க  தூதரக இரகசியத்தில். முதலில் நமது நாட்டை மட்டும் பார்ப்போம்.

இந்தியாவை இன்றுவரை சந்தேகத்துக்குரிய நாடாகவே அமெரிக்கா பார்ப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை டெல்லியில்  உள்ள தூதரகம் மூலம் 3,038 ரகசிய ஆவணங்கள் அமெரிக்காவுடன் பரிமாறப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, இந்தியாவுக்கான அமெரிக்கத்  தூதர் திமோதி ரோமரிடம் பேசும்போது, வளர்ந்து வரும் தீவிரவாதப் போக்குக் கொண்ட இந்துக் குழுக்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு  அதிக அச்சுறுத்தல்கள் உள்ளதென, தெரிவித்ததாக விக்கி லீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. சிவசேனைக்கு எதிரான ராகுல்  காந்தியின் கடுமையான அணுகுமுறை குறித்தும் இன்னொரு கசிவில் அமெரிக்கத் தூதர் குறிப்பிட்டிருக்கிறார். அதனால், ராகுல் காந்தியின்  கருத்துக்கு  ஆர்எஸ்எஸ், விசுவஹிந்து பரிஷத் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பாஜக ஆகியவை  கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இருந்தபோதும் ராகுல் காந்தியின் கருத்துகள் சரியானதே என மதசார்பற்றவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல ஐ.நா. நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற இந்தியா தீவிரமாக இருப்பதால், அது தொடர்பாக ஐ.நா.வில் என்னவிதமான முயற்சிகளை  இந்தியா மேற்கொள்கிறது என்பது குறித்து உளவு பார்க்குமாறு தனது தூதர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன்  கேட்டுக் கொண்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.  .

இந்திய அணு ஆயுத ஒப்பந்தம், ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக எடுத்து வரும் முயற்சிகள்  உள்ளிட்டவை குறித்து உளவு பார்க்குமாறு அதில் ஹிலாரி அறிவுறுத்தியுள்ளார். இந்த பணியை தனது உளவு அமைப்புகளுக்கும் அவர்  ஒதுக்கியுள்ளார். இந்தியா தவிர பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஐ.நா. பாது காப்பு சபை நிரந்தர உறுப்பினர் பதவிக்காக மோதி வருவதால் அவர்களையும் உளவு பார்க்க உத்தரவிட்டுள்ளார் ஹிலாரி.

இதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபை விரிவாக்கத்தை எதிர்த்து வரும் மெக்சிகோ, இத்தாலி, பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய  யூனியன், ஐ.நா. பொதுச் செயலகத்தில் உள்ள சிலரையும் தனக்கு கூட்டு சேர்த்து செயல்பட்டுள்ளது அமெரிக்கா. மேலும் அணி சேரா  நாடுகள் கூட்டமைப்பு, ஜி-77 கூட்டமைப்பு, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு குறித்தும் அது உளவு பார்த்துள்ளது. .

விக்கிலீக்ஸின் இந்த ஆவணங்கள் உலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தவிர மத்திய கிழக்கிலும் பதற்றமான நிலைமைக்கு வழி  வகுத்திருக்கிறது.

இந்த பின்விளைவுகளை எதிர்ப்பார்த்துதான் “விக்கிலீக்ஸை நம்பாதீர்கள்’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி  கிளிண்டன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசுகள், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவுக்கு  தொடர்ந்து செய்தி அனுப்பி வந்தார். அமெரிக்காவின் இந்த இராஜத்தந்திரம் இனி எடுபடுமா? என்பது சந்தேகம்தான்.

ஒவ்வொரு வெளியீட்டிற்குப் பிறகும் “”இதெல்லாம் எப்படி உங்களுக்கு மட்டும் கிடைக்கிறது” என ஜூலியனிடம் கேட்கும் போதெல்லாம், “”அது  ராமசாமி கொடுத்தது…. இது கந்தசாமி கொடுத்தது…” என்பது வழக்கம். ஜூலியனை நன்கு அறிந்தவர்கள் யாரும் அதனை நம்புவதற்குத்  தயாரில்லை. ஜூலியன் தனது ஹேக்கிங் நடவடிக்கைகள் மூலமே இதையெல்லாம் வெளியில் கொண்டுவருகின்றார். அதனிலிருந்து சட்ட  ரீதியாகத் தன்னைப் பாதுகாக்க “விக்கி’ எனும் இணைய நெட்ஒர்க் அமைப்பினைக் கேடயமாக்குகிறார். அதே நேரத்தில் ஜூலியன் இரு பெண்கள் விஷயத்தில் மாட்டிக் கொண்டது என்பது என்னவோ  உண்மைதான். இதற்காக இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு, தற்சமயம் ஜாமீனில் வெளிவந்துள்ளார். தமது பக்கம் நியாயம்  இருப்பதால்தான் பிணையில் வெளிவந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜூலியன், நீதிக்காக தொடர்ந்து போராடப் போவதாக தெரிவித்தார். “

“அமெரிக்க என்னை இன்னும் பின் தொடர்ந்தால் அமெரிக்காவில் திவாலாகும் நிலையில் உள்ள வங்கிகளின் ரகசியங்களை  வெளியிடுவேன். அதேபோல அந்த வங்கிகளின் கணக்கு விவரங்கள் பகிரங்கப்படுத்தப் படும்” என மிரட்டல் விடுத்தார். எது எப்படியோ இன்று உலகளவில்  பிடல் காஸ்ட்ரோ, குகே சாவேஸ், நோம் சோம்சுக்கி ரஷ்ய-சீன பொதுவுடமை தலைவர்கள்  விக்கிலீக்ஸை ஆதரிக்கிறார்கள்.  சமூக ஆர்வலர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விக்கிலீக்ஸுக்கு பெரும் ஆதரவை தந்துவருகின்றனர். இந்த பரபரப்பில் ரஷ்யா ஜூலியனுக்கு நோபல் பரிசு  தர வேண்டும் என கூறியுள்ளது.

அவரது தாய்நாடான ஆஸ்திரேலியாவே ஜூலியன் எங்கள் மண்ணின் மைந்தன் அவரை நாங்கள் பாதுகாப்போம் என அறிவித்துள்ளது. அதே நேரத்தில் விக்கிலீக்ஸ் சீனாவுக்கு ஆதரவானது எனவும் கருதப்படுகிறது. எது எப்படி இருந்தாலும்  எவ்வித சமரசமுமின்றி பணம் பதவிக்கு ஆசைப்படாமல் நேர்மையான துணிவான ஜூலியன் பவுல் அசாஞ்ச்-ன் சாதனை ஈடு  இணையில்லாத ஒரு மாபெரும் ஊடக சாதனை இந்த நேர்மையான பத்திரிகையாளரின் வெற்றிப் பயணம் தொடரட்டும். மக்கள் விரோத அரசுகளின் இரகசியம் அம்பலமாகட்டும்.

நன்றி:- எஸ் செல்வராஜ்

நன்றி:- நக்கீரன்


Advertisements
 1. 10:59 முப இல் ஜனவரி 30, 2011

  Assalamuallikum .
  I have given Link to அஜீஸ் அஹ்மத் in http://seasonsali.wordpress.com/
  LINK 5(Tamil)
  Please visit. Thank you very much for your kind support to our site
  Wassalam

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: