தொகுப்பு

Archive for ஜனவரி 4, 2011

அள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்!


புத்தாண்டு பிறந்துவிட்டது… எல்லோருடைய மனதிலும் இனியாவது செழிப்பாக இருக்க வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அலையடித்துக் கொண்டிருக்கிறது. அதை நிறைவேற்றும் வகையில் 2011-ம் வருடம் ஒரு முக்கியமான வருடமாக இருக்கப்போகிறது. முதலீட்டு வைபவத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் உங்களை 2011-ம் ஆண்டு சாக்லேட் கொடுத்து வரவேற்க, வாசலில் காத்துக்கொண்டிருக்கிறது. அதைப் பெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தீர்கள் என்றால் உள்ளே உங்களுக்காக வரிசை வரிசையாக மிகப் பெரிய விருந்தே காத்துக்கொண்டிருக்கிறது!

ஆமாம், இந்தியாவின் பொருளாதாரம் இந்த வருடம் தொடங்கி இன்னும் பல ஆண்டுகளுக்குச் சிறப்பாக இருக்கும் என்றே பொருளாதார நிபுணர்கள் அனைவரும் அடித்துச் சொல்லிவருகிறார்கள்.

 

வாசகர்களைப் பொறுத்தவரை பங்குச் சந்தை பற்றி மிக நன்றாக அறிந்தவர்கள், சுமாராக அறிந்தவர்கள், இப்போதுதான் நுழைபவர்கள் என பல தரப்பில் இருப்பார்கள். அதனால் மூன்று தரப்பினருக்கும் தேவையான அடிப்படையில் கட்டுரையை மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன். நில், கவனி, வாங்கு என்ற மூன்று பகுதிகள்தான் அவை. முதலீடு செய்ய வேண்டிய சில ஷேர்களைக் குறித்துச் சொல்லியிருக்கிறேன். இதுவும்கூட வாசலில் நின்று வரவேற்று தரப்படும் சாக்லேட் போன்ற ஷேர்கள்தான். ஆனால் உள்ளே காத்திருக்கும் விருந்தைப் போல நூற்றுக்கணக்கான சூப்பர் ஷேர்கள் சந்தையில் இருக்கின்றன. இனம் கண்டு, அவற்றையும் பயன்படுத்தி சந்தோஷமடையுங்கள்.

விருந்தில் பரிமாறுபவர்கள் பலவகையான பாதார்த்தங்களை சிபாரிசு செய்தாலும், நமக்கு விருப்பமானதும் ஏற்றதுமானவற்றையே ஏற்றுக் கொள்வது போலவே, முதலீட்டு விஷயத்தில் யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே செயல்படுத்தாமல், தீர ஆலோசித்து சுயமாக முடிவெடுக்க வேண்டும். அதை மட்டும் மறந்துவிடக்கூடாது. சரியா?

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பி வந்திருக்கும் உங்களைப் பாராட்டி வரவேற்கிறேன்… பங்குச் சந்தையில் முதலீட்டாளராக இருக்க நீங்கள், பெரிய அனலிஸ்ட்டாக எல்லாம் இருக்கத் தேவையில்லை. ஏனென்றால், பங்கு, முதலீடுகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் புரிந்து கொள்ள முடியாத ராக்கெட் சயின்ஸ் இல்லை!

ங்குகள் வாங்குவதற்கு முன்னால் எந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குகிறோமோ அதன் பி.இ.விகிதம், புக் வேல்யூ, 52 வார அதிகம், குறைவு என்பது போன்ற பல டெக்னிக்கல் விஷயங்களைப் பார்த்து வாங்குவதுதான் வழக்கம். நீங்கள் இப்போதுதான் மார்க்கெட்டுக்கு  வந்திருப்பதால், அது மாதிரியான விஷயங்களைக் கண்டு பயப்படாமல் சுலபமாக என்ன செய்தால் போதும் என்பதைச் சொல்கிறேன்…

பங்குச் சந்தை பிதாமகர் எனப் போற்றப்படுவர் வாரன் பஃபெட். அவரது முதலீட்டு ஃபார்முலா என்பது வெகு சுலபமானது. எந்த டெக்னிக்கல் குழப்பங்களும் இல்லாதது. அந்த அடிப்படையிலேயே உங்களுக்கும் நான் வழி சொல்லித் தருகிறேன்…

நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அந்த நிறுவனத்தில் நீங்களும் ஒரு பங்குதாரராக ஆகுகிறீர்கள், அந்த பிஸினஸில் இறங்குகிறீர்கள் என்பதுதானே? அதனால் நீங்கள் நேரடியாக ஒரு தொழில் தொடங்கினால் எந்தெந்த விஷயங்களைக் கவனிப்பீர்களோ, அதே விஷயங்களை பங்கு முதலீட்டிலும் பார்த்தாலே போதுமானது! (அப்படிக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஆயிரம் இருந்தாலும், முக்கியமான சிலவற்றை மட்டும் பார்க்கலாம்).

எந்தெந்த பிஸினஸுக்கு இன்றைய தேதியில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று பார்ப்போம்.

அப்படி நல்ல வரவேற்பு இருக்கும் தொழில்களில் எந்தெந்த தொழிலில் நமக்கு நல்ல அனுபவமோ, திறமையோ இருக்கிறது என்று பார்ப்போம்.

நாட்டின் நிதி நிலை மற்றும் பொருளாதாரச் சூழல் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம். மக்கள் சுபிட்சமாக இருந்தால்தானே நம் தயாரிப்புகளை வாங்குவார்கள்!

அரசாங்கம் அந்தத் தொழிலை ஆதரிக்குமா? எதிர்க்குமா? ரெகுலேட் செய்யுமா? (லைசென்ஸ், பொல்யூஷன், கன்ட்ரோல் என்று) என்று பார்ப்போம்.

தொழிலுக்கான மூலப்பொருட்களின் விலை மாறுதல் டிரெண்ட்கள், அந்நியச் செலவாணி, தேவைப்பட்டால் கரன்சியின் டிரெண்ட் இதையும் பார்ப்போம்.

இன்றைய போட்டியாளர்கள் யார்? யார்? எதிர்காலத்தில் போட்டியாளர்கள் எவ்வளவு சுலபமாகத் தொழில் ஆரம்பிக்க முன்வரமுடியும் என்பதைப் பார்ப்போம்.

தொழில் ஆரம்பிக்க கவனிக்கவேண்டிய இவை எல்லாமே பங்கு முதலீட்டுக்கும் பொருந்தும். நீங்கள் எந்தப் பங்கை வாங்கலாம் என்று நினைக்கிறீர்களோ அந்த நிறுவனம் குறித்து மேலே குறிப்பிட்டிருக்கும் கேள்விகளையெல்லாம் கேட்டுப்பார்க்க வேண்டும். அதில் திருப்தியடைந்தால் மட்டுமே பங்கை வாங்கவேண்டும். இதையும் தாண்டி பங்கு முதலீட்டின் போது நீங்கள் பார்க்கவேண்டிய இரண்டு விஷயங்கள் உண்டு.

முதலாவதாக, மேலே சொல்லியுள்ள பாயிண்டுகளில் இரண்டாவது பாயின்டில் உள்ள நமது திறமை என்பதை நீக்கிவிட்டு, நாம் முதலீடு செய்யும் கம்பெனியின் மேனேஜ்மென்ட்டுக்கு அந்த தொழிலில் திறமை இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். காரணம் பங்கு முதலீட்டில் கம்பெனியின் மேனேஜ்மென்ட்தான் நமது ஏஜென்டாகச் செயல்படுகிறது. எனவே, மேனேஜ்மென்ட்டின் நம்பிக்கை, நாணயம், கடந்தகால திறமை, தொலைநோக்குப் பார்வை இவற்றையும் முக்கியமாக நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

இரண்டாவதாக, நாம் அந்த முதலீட்டை விற்றுவிட்டு வெளியே வர நினைக்கும்போது அந்த முதலீட்டை வாங்கிக்கொள்ள யாராவது தயாராக இருப்பார்களா என்பதையும் பார்க்கவேண்டும். அதாவது நாம் தொழில் செய்தது போதும் கம்பெனி வேண்டாம் என்று முடிவெடுத்தால் அந்த கம்பெனியை வாங்கிக்கொள்ள யாராவது இருந்தால்தானே நல்லது? அதைப் போலத்தான், நாம் வாங்கிய ஷேரை விற்க நினைக்கும்போது அதை வாங்குவதற்கும் ஆட்கள் இருக்க வேண்டும்.

இவைதவிர இன்னும் சில விஷயங்களையும் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். கீழே உள்ள அட்டவணையைப் பாருங்கள்…

*வருடா வருடம் ஜனவரி 1ல் முதலீடு செய்து அடுத்த ஜனவரி 1ல் விற்றுவிட்டால் வரும் லாபத்தின் அளவு சதவிகிதத்தில்

24-12-10 க்ளோசிங் லெவல் ஆகிய 20,000த்தில் கணக்கிடப்பட்ட ரிட்டர்ன்.

இந்த அட்டவணையைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தெரிகிறது?

சந்தையில் பங்குகளின் மதிப்பு அதிகமாகிக்கொண்டே வருகின்றது.

ஒரு காலகட்டத்தில் திடீரென்று இறங்கினாலும், அந்த இறக்கத்தை ஈடுகட்டும் வகையில் மீண்டும் ஏறவே செய்கிறது.

இரண்டு வருடத்துக்கு குறைவான முதலீட்டுக் காலகட்டத்தை (டியூரேஷன்) மனதில்வைத்து சந்தையில் முதலீடு செய்தால் நஷ்டம் உறுதி! அதாவது, இரண்டு வருடத்துக்குள் குழந்தைகள் திருமணம், படிப்பு போன்ற வேறு உபயோகத்துக்குத் தேவைப்படும் பணத்தை சந்தை முதலீட்டில் போட்டால் நஷ்டமடைய அதிக வாய்ப்புள்ளது.

இந்த மூன்று விஷயங்களையும் மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டுதான் பங்கு சந்தையில் முதலீடுகளைச் செய்யவேண்டும்.


சென்ற ‘நில்’ பகுதியின் கடைசியில் இடம்பெற்ற சென்செக்ஸ் அட்டவணையைப் பார்த்தீர்களா? அதைப் பார்க்கும்போது 2001-ல் நாம் முதலீடு செய்திருந்தால் இன்று எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று ஒரு சிந்தனை வந்துபோகிறதல்லவா? கவலைப்பட வேண்டாம்! அதே போன்றதொரு வாய்ப்பு மீண்டும் வருகிறது!]

ந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை 2020-வது வருடம் என்பது ஒரு பெரிய மைல்கல்லாக இருக்கும் என அனைத்துத் துறை வல்லுநர்களும் சொல்லி வருகின்றார்கள். அப்படி என்றால் நாம் இந்த 2011-ல் முதலீடு செய்தால் நிச்சயமாக 2020-ல் நல்ல லாபத்தைப் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

முதலில் 2020-ல் ஒவ்வொரு துறையும் எந்த அளவு வளர்ச்சியைச் சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

நாட்டின் பொருளாதாரம் வளர்ந்தால் அரசாங்கத்தின் ஐந்தாண்டுத் திட்டத்தின் செலவின் அளவும் வளரும் இல்லையா? இந்த தொகை அதிகரிப்பால் மின்சாரம், சாலை கட்டுமானம், ரயில்வே, நீர்ப்பாசனம், குடிநீர் மற்றும் வடிகால் வசதி இவையனைத்தும் இரண்டு முதல் ஐந்து மடங்கு வரை அதிகரிக்கும்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இதையெல்லாம் எதற்குப் பார்க்கவேண்டும் என்கிறீர்களா? பங்குகளின் விலை ஏற்றம் கம்பெனிகளின் லாபத்தாலும் வளர்ச்சியாலும் அமையும். கம்பெனிகளின் லாபமும் வளர்ச்சியும் மக்களின் சம்பாதிக்கும் திறன், செலவு மற்றும் சேமிக்கும் திறனால் அமையும். மக்களின் சம்பாதிக்கும் திறன் அவர்கள் வயதினால் அமையும். இதுவும் தவிர சில துறைகள் அரசாங்கத்தின் செலவு அதிகமானால் நல்ல வளர்ச்சியை அடையும். கடந்த பத்து வருடத்தில் நாம் கண்ட வளர்ச்சிக்கு காரணம் உழைக்கும் கரங்கள் அதிகமாக இருந்ததுதான். அதற்கான புள்ளி விவரங்களுடன் கொஞ்சம் விவரமாய் பார்க்கலாம்…

வளரும் கரங்கள் (40%)

அதாவது நம்நாட்டில் 18 வயதுக்கு கீழே உள்ள மக்களின் தொகை நாற்பது சதவிகிதம். இந்தப் பிரிவினர் தாய்-தந்தையைச் சார்ந்திருப்பவர்கள். உலக நாடுகள் பலவற்றோடு ஒப்பிடும் போது இந்த பிரிவினரின் தொகை நம் நாட்டில்தான் அதிகமாக இருக்கிறது.

உழைக்கும் கரங்கள் (50%)

18-லிருந்து 60 வயதுக்குள் இருக்கும் மக்கள் தொகைப் பிரிவு. இந்தப் பிரிவினர்தான் உழைப்பிலும் சேமிப்பிலும் ஈடுபட்டிருப்பவர்கள். அதே நேரத்தில் செலவும் செய்பவர்கள்.

இளைப்பாறும் கரங்கள் (10%)

60 வயதுக்கு மேல் உள்ள மக்கள் தொகையினர். உழைத்த காலத்தில் சேமித்து வைத்த சேமிப்பிலிருந்து வரும் வருமானத்தில் சாப்பிட்டுக்கொண்டும், மெடிக்கல் செலவுகள் செய்துகொண்டும் இருப்பவர்கள்.

வேகமாக வளரும் ஒரு நாட்டில் உழைக்கும்கரங்களாகிக் கொண்டு வரும் மக்கள் தொகை பெரிய அளவில் இருப்பது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். வயது ரீதியாக அலசி ஆராய்ந்தால், அடுத்த பத்து வருடத்தில் உழைக்கும் கரங்கள் தற்போது இருக்கும் எண்ணிக்கையை விட 20% அதிகரிக்கும். இந்த மகத்தான 20% அதிகரிப்புதான் உங்கள் முதலீட்டைக் கொழிக்க வைக்கப் போகும் சக்தியாகத் திகழப் போகிறது.

இந்த உழைக்கும் கரங்களின் அபரிமிதமான அதிகரிப்பு எல்லா தொழிலுக்கும் வாடிக்கையாளர்களை அதிகரிக்கும். அந்த வளர்ச்சியைத்தான் மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் 2020-ல் நாம் அடையக்கூடிய வளர்ச்சி என்கிறோம்.

”சரி சார், இதெல்லாம் 2020-ல்தானே? நாம 2015-க்குத்தானே கணக்குப் போடுகிறோம்?” என்கிறீர்களா? 2020-க்கு 2015-ன் வழியாகத்தானே செல்லவேண்டும்! அட்ட வணையில் கொடுக்கப்பட்டுள்ள வளர்ச்சியில் கிட்டத்தட்ட 50 சதவிகித வளர்ச்சியை 2015-ல் நாம் பெற்றுவிடுவோம் என்றே சொல்லலாம்.

மக்களின் சேமிப்பு 2015-ல் கிட்டத்தட்ட 1.5 மடங்கு அதிகமாகும் என்றும், வங்கி டெப்பாசிட்டுகள் இரண்டு மடங்காகும் என்றும், இன்ஷூரன்ஸ், பி.ஃஎப். மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் இரண்டு மடங்காகும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அரசும் கடன் வாங்கி காலங்கழிப்பதை வெகுவாகக் குறைத்து, மானியங்களையும் குறைத்து 2015-ல் மாறிவிடும் என்கிறார்கள். இந்த மாற்றங்கள் வெளிநாட்டு முதலீடுகளை சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பதாகவே அமையும் என்கிறார்கள்.

எனவே, இது போன்ற வேகமாக வளர்ந்து வரும், சம்பாதிக்கும் திறன் கூடிக்கொண்டே செல்லும், உழைக்கும் கரங்கள் இருக்கின்ற நாட்டில் துணிமணி, டி.டி.ஹெச். கனெக்ஷன், கார் விற்பனை இவற்றில் ஆரம்பித்து வீட்டுக்கடன் கொடுப்பதுவரை எல்லா தொழில்களிலுமே சூப்பர் சூப்பராய் வாய்ப்புகளும் லாபங்களும் அதிகரிக்கப் போகிறது. நான் ஏற்கெனவே சொன்னது போல் நீங்கள் எந்தத் தொழிலில் முதலீடு செய்து (ஷேரை வாங்கி) முதலாளி போல் அமர்ந்து நீங்கள் செய்த புத்திசாலித்தனமான முதலீட்டின் பலனை (ஷேரிலிருந்து வரும் டிவிடெண்ட், போனஸ் மற்றும் விலைஏற்றத்தினை) அனுபவிக்கப் போகின்றீர்கள் என்பதுதான் மேட்டரே, இல்லையா?! இடையிலே சின்னச் சின்ன இடைஞ்சல்கள் பல வந்தாலும், ஐந்தாண்டு கால அளவில் செய்யப்படும் முதலீடுகள் பெரிய அளவில் பொய்த்துப்போவதில்லை.

இவை அனைத்தையும் கருத்தில் வைத்து அடுத்த ஐந்து வருடத்துக்கான சிறந்த முதலீட்டுக்கான கம்பெனிகள் என்னென்ன என்று அடுத்து கொடுக்கிறேன். இந்தியாவின் அசுர வளர்ச்சியில் லாபம் அடையக்கூடியவை இன்னும் நிறைய இருக்கின்றன. அவை குறித்து அவ்வப்போது வாசர்களுக்கு தருகிறேன். வருட ஆரம்பத்தில் உங்களுக்காக அரை டஜன் பங்குகளை தந்திருக்கின்றேன். நன்றாக சிந்தித்து முதலீடு செய்து பலன்பெறுங்கள். வாழ்த்துக்கள்.


இப்போது முக்கியமான கட்டத்துக்கு வந்துவிட்டோம்… எந்தெந்தப் பங்குகளை வாங்கலாம், உங்களது போர்ட் ஃபோலியோவில் அவசியம் இடம்பெற வேண்டிய பங்குகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கப் போகிறோம்.

டந்த 10 வருடங்களில் வெவ்வேறு நாடுகளின் சந்தைகள் கொடுத்த வருமானத்தை பார்த்தால் பிரேசில் மற்றும் இந்திய சந்தைகள்தான் அதிகபட்ச வருமானத்தைக் கொடுத்திருக்கின்றது. ஜப்பானின் சந்தை 25 சதவிகித நஷ்டத்தையும் இந்திய பங்குச் சந்தைகள் அதிகபட்சமாக 405 சதவிகித வருமானத்தையும் கொடுத்திருக்கின்றது. இதே மாதிரியான 400 சதவிகித வருமானம் அடுத்த பத்து வருடங்களில் இந்திய சந்தையில் கிடைக்குமா என்றால் அது சந்தேகம்தான்! இருப்பினும், நீண்ட காலத்தில் சந்தை முதலீடுகள் இன்ஃப்ளேஷனுக்கு எதிராக நல்லதொரு மருந்தாக இருப்பதால் சந்தையில் நீங்கள் முதலீடு செய்தே ஆகவேண்டும். ஆனால் அதற்கு முன்பாக ஒரு எச்சரிக்கை… இங்கே கொடுக்கப்பட்டுள்ள பங்குகளை புது வருடத்தில் சந்தையின் முதல் வியாபார நாளான 03-01-2011 அன்றே வாங்க முயற்சிக்காதீர்கள். ஏதாவதொரு காரணத்தால் சந்தை வேகமாக இறங்குகின்ற தினத்தன்று கொஞ்சம் கொஞ்சமாய் வாங்கிப்போடுங்கள்.

ஒரு முதலீட்டாளராக நாம் இன்றைய சூழ்நிலையில் இரண்டு விஷயங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியுள்ளது. முதலாவதாக இந்திய சந்தையின் போக்குக்கும் நம் முதலீட்டுத் திட்டத்துக்கு சாதகமாகவும் இருக்கும் அளவுக்கு உள்நாட்டு நடப்புகள் இருக்கவேண்டுமே என்பது. இரண்டாவதாக உலக முதலீட்டாளர்களின் (எஃப்.ஐ.ஐ-க்கள் வழியாக) ரிஸ்க் எடுக்கும் திறன் மாறாமல் இருக்கவேண்டும். மேலும் அவர்களுக்கு அவரவர் நாட்டிலேயே நல்ல வருமானம் தரும் முதலீட்டு வாய்ப்புகள் உருவாகாமல் இருக்கவேண்டும். இவை இரண்டையும் மனதில் கொண்டு 2011-ல் இருக்கும் நல்ல மற்றும் நல்லவையல்லாத விஷயங்கள் இங்கே வரிசைப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

2011-ல் இருக்கும் மற்றும் எதிர்பார்க்கப்படும் நல்ல விஷயங்கள்

வளர்ச்சி விகிதம் – 8 % அளவை ஒட்டியே இருப்பது.

பெரிய அளவில் ஜி7 மற்றும் சைனாவை நம்பியில்லாமல் இருப்பது.

அரசாங்கத்தின் ஸ்டிமுலஸ் பேக்கேஜை பெரிய அளவில்  நம்பி தொழில்கள் நடக்காமல் இருப்பது.

ஜி.எஸ்.டி., டி.டீ.சி. ஆகியவற்றை அறிமுகப்படுத்தப் போவது.

பெட்ரோல், டீசல், உரம் போன்றவற்றுக்கான மானியத்தைக் குறைக்க நினைப்பது.

அரசு சம்பாதிக்க வாய்ப்பிருக்கும் எதிர்பாராத தொகைகள்.

வளர்ச்சியை உறுதி செய்யும் மக்களின் வாங்கும் திறன் மற்றும் சேமிப்பு,

கட்டுமானத்துக்கான அரசின் செலவீனங்கள்.

பெரிய அளவில் விலை ஏறாத சந்தை நிலைமை.

2011-ல் இருக்கும் மற்றும் எதிர்பார்க்கப்படும் நல்லவையல்லாத விஷயங்கள்

உலக பொருளாதார சூழ்நிலை – அமெரிக்கா, ஐரோப்பா – கடன் மற்றும் கரன்சி சந்தைகளின் கலவர நிலை.

உலக நாடுகளின் முதலீட்டா ளர்களின் ரிஸ்க் எடுக்கும் திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவது; எஃப்.ஐ.ஐ. முதலீட்டை பாதிப்பதாக அமைவது

பணவீக்கத்தை கணக்கில் எடுத்துப் பார்த்தால் சந்தையில் பெரிய வாய்ப்பில்லாதது போல் தோன்றுவது.

புதிய பல பங்கு வெளியீடுகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பது.

அந்நிய முதலீட்டுக்கான சட்டதிட்டங்களில் பாசிட்டிவ்வான இடங்களில் மாறுதல் வருவது; நெகட்டிவ்வான இடங்களில் மாறுதல் வராமல் இருப்பது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நீங்கள்  மூன்று முதல் ஐந்தாண்டுகளுக்கான போர்ட்ஃபோலியோ ஒன்றைத் தீர்மானித்தீர்கள் என்றால், அதில் இருக்கவேண்டிய சில முக்கியமான ஷேர்கள் என்னென்ன என்று பார்ப்போம்.



நன்றி:- நா.வி