இல்லம் > அன்புக் குழந்தைகளே! உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது, குழந்தைகள், மகளீர் > அன்புக் குழந்தைகளே! உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது – பிரசன்னம்

அன்புக் குழந்தைகளே! உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது – பிரசன்னம்


உங்களை உலகிற்குத் தந்த எங்களின் பெருமையையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொள்ளுங்கள்; பெரியவர்கள் அனுபவசாலிகள். ஆகவே (உங்களது நன்மைக்காகவே) அவர்கள் சில அறிவுரைகளைச் சொல்வார்கள் என்பதை நம்புங்கள். உங்களை நாங்கள் மிகவும் நேசிப்பதை வெளியில் பலரிடமும் காட்டுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அதற்காக நீங்கள் கோபம் கொள்ளாதீர்கள். உங்கள் திறமையை நாங்கள் மதிக்கிறோம். இருந்தாலும் உங்களுக்குச் சிரமம் தர வேண்டாம் என்றுதான் நாங்களே தலையிட்டுச் சில செயல்களைச் செய்துவிடுகிறோம். அது தவறா? பாசத்தின் வெளிப்பாடு என்று தெரிந்து கொள்ளுங்கள். விளையாடுங்கள். முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல. ஆனால், உங்களுக்கு அதிலேயே பொழுது கழிந்துவிடக்கூடாது என்பதால்  நாங்கள் அவ்வப்போது குறுக்கிடுகிறோம். பொறுத்துக்கொள்ளுங்களேன்!

செய்,சரி, நல்லது என்பதைச் சொல்ல நாங்கள் தயார். இடையிலேயே சில வேண்டாம், கூடாது போன்ற கட்டளைகள் வருவது இயல்புதான். அதைப் பெரிதுபடுத்தாதீர்கள் ! எல்லா இடத்திற்கும் உங்களை அழைத்துச் செல்ல இயலாமல் போகலாம். அதற்காக வருத்தப்பட வேண்டாமே ! நீங்கள் தனிமையை விரும்பலாம். ஆனால் உங்கள் தனிமை உங்களுக்கு நன்மை தராவிட்டால் என்ன செய்வது? அதனால் நாங்கள் பக்கத்தில் வந்து துணைக்கு நிற்கிறோம். எங்கள் கவலை எங்களுக்கு. எங்கள் பெற்றோர் எங்களுக்கு நாங்கள் கேட்டதையெல்லாம் தரவில்லை. அந்த ஏக்கம் இன்றுவரை இருப்பதால் நீங்கள் கேட்டதுமே வாங்கிக் கொடுத்து நிறைவு காண்கிறோம்.

நீங்கள் சொல்லும் பதிலை நாங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். நம்புங்கள். வேறு எங்கு பார்த்திருந்தாலும் கவனம் எங்கள் பிள்ளைகள் மீதுதான். நம் வீட்டுத் தொலைபேசியை நீங்கள் பயன்படுத்துவது தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், காலம் மாறும் பணத்தின் அருமையைக் கருதி சற்று யோசித்துப் பாருங்கள்.

உன் சகோதரன், சகோதரி உண்மையே பேசி நீ பொய் பேசி வந்தால் ஒப்பீடு செய்ய மாட்டோமா? பலருக்கும் உதவி செய்யும் உன் நண்பனைக் குறித்து ஒருவருக்கும் உதவாமல் சுயநலத்தோடு இருக்கும் உன்னிடம் சொல்லிக் காட்ட மாட்டோமா? இது உன்னைத் திருத்தத்தானே தவிர உன்னை வருந்த வைக்க இல்லை. நல்ல பொருளைத் தொலைத்துவிட்டு வந்தால் கொஞ்சவா முடியும்? திட்டுவோம். அடுத்து அது மாதிரி நிகழாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றுதான் அவ்வாறு செய்கிறோம். பாசமில்லாத கொடியவர்களா நாங்கள்?

உங்களுக்கு பிடித்த சில உடைகளை வாங்கித் தருகின்றோம். எங்கள் ஆசைக்கு நாங்கள் விரும்பும் சில உடைகளையும் அணிந்தால் என்ன? சற்று யோசித்துப் பாருங்களேன் ! உங்களை அரவணைப்பதை விடத் தழுவுவதைவிட உங்கள் இனிய பேச்சைக் கேட்பதை விடவா உலகில் எங்களுக்குப் பேரின்பம் இருக்கிறது. அந்த வாய்ப்பை அவ்வப்போது தாருங்கள்.

உங்களுக்கு உயர்ந்த இலட்சியத்தைக் காட்டவும் நற்பண்புகளை உணர்த்தவும் நாங்கள் முன்மாதிரியாக இருக்கிறோம் என்பதை மறவாதீர்கள். தொலைக்காட்சி பாருங்கள் ; வேண்டாமென்று தடுக்கவில்லை. அதே நேரத்தில் மனதைக் கெடுத்துவிடும் சிலவற்றை நீங்கள் பார்த்துவிடலாகாதே என்ற பயம் எங்களுக்கு உள்ளது. அதனால்தான் சதா தொலைக்காட்சி பார்க்காதே என்று எச்சரிக்கிறோம்.

உங்களிடம் சுறுசுறுப்பு, வேலையில் திறமை, சுத்த உணர்வு இவற்றை நாங்கள் எதிர்பார்ப்பது தவறா? உங்கள் நன்மைக்குத்தானே? நாங்கள் வேலையிலிருக்கும்போது நீங்கள் அருகில் வந்து இதை அடுக்கவா, இதை நறுக்கித் தரவா, இதைக் கொண்டுபோய் வைக்கவா என்று கேட்டு உதவிசெய்யலாமே ! உங்கள் அன்பை இப்படியும் வெளிப்படுத்துங்கள் ! உங்கள் ஆற்றலை நாங்கள் புரிந்து கொள்ளுமாறு உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என்பதை எங்களிடம் சொல்லுங்கள்.

வாய்ப்புகளையும் வசதிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். எல்லாம் செய்து கொடுத்துவிட்டு, உங்களிடமிருந்து சாதனைகளை நாங்கள் எதிர்பார்ப்பதில் தவறல்லவே !

நீங்கள் பெரியவர்களான எங்களை கேலி செய்வதாகவோ அவமானப் படுத்துவதாகவோ தோன்றும்படி கூட நடந்து விடாதீர்கள் எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. எங்கள் கவலைகளையெல்லாம் நாங்கள் உங்களிடம் சொல்வதில்லை. பிஞ்சுகளான உங்களிடம் பிரச்சனை, கவலை என்று திணித்து உங்களை வருத்தப்பட வைக்க நாங்கள் விரும்பவில்லை. இது பெருந்தன்மை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்களோடு விளையாட ஆசைதான். சமயம் கிடைக்கும்போது ஆடுவோம். எங்களுக்கு பல வேலைச் சுமைகள் இருக்கின்றபோது எங்களால் வர இயலவில்லை என்றால் எங்கள் நிலைமையை அனுசரித்து நடந்துகொள்வதுதான் உங்களின் புத்திசாலித்தனம்.

உங்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்தான் பெற்றோர்களாகிய நாங்கள் பாடுபடுகின்றோம். நிறைவேற்றமுடியாது என்றால் வாக்குறுதி தரத் தயங்குவோம். எங்கள் நிதிநிலைமை மற்றும் சந்தர்ப்பம் இவற்றை அறிந்து நடந்து கொள்ளுங்களேன்.

எங்களுடன் சிறிது நேரம் அமர்ந்து எங்கள் பழைய கதைகளைக் கேட்டால் என்ன? அதில் எங்கள் உள்ளம் பூரிக்குமே ! போங்கள் உங்களுக்கு வேறு விஷயமே இல்லை என்று சொல்லிவிட்டு ஓடாதீர்கள் ! உங்கள் நண்பர்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்வது மிக அவசியம். உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் நட்புக்கு மிகுந்த பங்குண்டு. எனவே உங்கள் நண்பர்களை எங்களிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்துங்கள்.

முடி அமைப்பு, உடை இவற்றில் உங்களுக்கு ஏற்றதை நாங்களும் தேர்வு செய்ய அனுமதியுங்கள்.
நாங்கள் தரும் அன்பளிப்பு ரூபாய்களைச் சேமித்து அதிலிருந்து என்றாவது ஒரு நாள் எங்களுக்கும் ஒரு சிறு அன்புப்பரிசு தாருங்கள். அப்போது எங்கள் உள்ளத்தின் களிப்பு கடலைவிடப் பெரிதாகுமே !

உங்களை முழுமையாக நம்புகிறோம். நம்பிக்கை சிதறாமல் நீங்கள் நடந்துகொள்ளுங்கள். நாங்கள் உங்களிடம் சிறு குறைகள் கண்டால் கூட சுட்டிக் காட்டுகிறோம். ஏன் தெரியுமா? குறை நீங்கி நீங்கள் முழுமையான நல்லவர்கள் ஆகத்தான்.

இன்றைய உலகம் போட்டி நிறைந்தது. திறமை இருப்பவனே முன்னுக்கு வரமுடியும். எங்கள் பிள்ளைகள் திறமைசாலியாகத் திகழ வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதால் மதிப்பெண்ணுக்கும் மதிப்புக் கொடுக்கிறோம். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு வேளையாவது எங்களுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுங்கள். வயது வளரும்போது இந்த வாய்ப்புகள் குறையலாம். வேலை, திருமணம், என்று ஆகி வெளியே பிரிந்து செல்ல நேரிடலாம். இப்போதாவது அந்த இனிய அனுபவத்தைப் பெற முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கு நாங்கள் சிறந்த பாதுகாவல். எங்களிடம் உங்கள் மனப் புழுக்கத்தைக் கொட்டிவிடுங்கள். மனதில் வைத்து வேகாதீர்கள்.

உங்கள் நண்பர்களிடம் எங்கள் பெற்றோர் பாசமானவர்கள் ; நல்லவர்கள் என்பதைச் சொல்லி வையுங்கள்.

நாங்கள் கோபத்தில் ஏதாவது வார்த்தைகளைப் பேசிவிட்டால் சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டு மன்னித்துவிடுங்கள். பின்னர் நீங்கள் அப்படிப் பேசியிருக்க வேண்டாமே என்று எடுத்துச் சொல்லுங்கள்.

காய்கறி வாங்குவது, அஞ்சலகம் செல்வது, வங்கிக்குச் செல்வது போன்ற சிறுசிறு உதவிகளைச் செய்து பெரும் பெரும் மகிழ்ச்சியை எங்களுக்குத் தரலாமே ! அதனால் வரைவோலை (டி.டி) எடுப்ப்பது, விண்ணப்பங்களை நிரப்புவது, பணவிடை (எம்.ஓ) அனுப்புவது இவற்றைப் பற்றிய அறிவும் உங்களுக்குக் கிடைக்குமே ! உங்கள் தகுதியை நிரூபிக்கவும் வாய்ப்புக் கிடைக்குமே. புத்தகப்புழுவாக மட்டும் இருக்காதீர்கள்.

நண்பர்களுடன் நீங்கள் எங்கும் செல்லலாம்; பேசலாம். நாங்கள்
அதற்கு அனுமதி தருகிறோம். அது தீய நட்பா, நல்ல நட்பா என்று சோதித்து அறிய எங்களுக்கு வாய்ப்புத்தாருங்கள்.

நல்ல சமையல் செய்து பரிமாறினால் அம்மாவைப் பாராட்டுங்கள். அழகான ஓர் ஆடையை வாங்கித் தந்தால் அப்பாவுக்கு அன்புடன் ஒரு முத்தம் தரலாமே ! நோட்டைத் தைத்துத் தந்த தங்கைக்கு ரோஜாப்பூ ; பட்டன் தைத்துத் தந்த பாட்டிக்கு ஒரு சபாஷ், இப்படி உங்களால் இயன்றதைச் செய்து நன்றியை வெளிப்படுத்தலாமே !

உங்கள் பள்ளியில் சிறுசிறு பிரச்சனைகள் வந்தால் நாங்கள் தலையிட மாட்டோம். அது குடும்ப கண்ணியத்தைக் குலைக்காத அளவு பார்த்துக்கொள்ளுங்கள். பெரிதானால் எங்களிடம் சொல்லித் தீர்வு காணுங்கள்.

எங்களுடையது என்று நாங்கள் வைத்துள்ளது எல்லாம் உங்களுக்காகத்தான். அவற்றை உடைத்துப் பழுது செய்து அவற்றின் அருமையை உணராமல் வீசிவிடாதீர்கள். கவனமாகக் கையாளுங்கள்.

உங்கள் எதிர்காலம் குறித்து எங்களுக்கும் அக்கறை, தொலைநோக்கு உண்டு. பத்திரமாக இருப்பதாக உணருங்கள். எங்கள் பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றியே இருக்கும்.

எங்களுக்குக் கிடைக்காத வசதிகளை உங்களுக்கு நாங்கள் வழங்கி இருக்கிறோம். அதை நினைத்து முகமலர்ச்சியும் மனமகிழ்ச்சியும் கொள்ளுங்கள்.

எங்களைக்குறித்து …..

அன்பும் ஆர்வமும் பாசமும் பரிவும் எதிர்பார்ப்பும் நிறைந்துள்ள பெற்றோர்கள் நாங்கள். இவற்றின் காரணமாக சில சமயம் அதிகத் தலையீடு, அதிகக் கண்டிப்பு, அதிகச் செல்லம், அதிகம் குற்றம் குறைகூறல், அதிக அறிவுரை, அதிக எச்சரிக்கை செய்ய நேரலாம். அதனால், நாங்கள் பொல்லாதவர்கள் அல்லர். நாங்கள் கொடுமைக்காரர்கள் அல்லர். நாங்கள் பிடிவாதக்காரர்களோ, கட்டுப் பாடுகள் விதிப்பவர்களோ சுயநலவாதிகளோ அல்லர். நாங்கள் சர்வாதிகளோ பழமைவாதிகளோ அல்லர்.

எங்கள் கண்மணிகளே !

உங்களை நல்ல பிள்ளைகளாக, வல்லவர்களாக, ஒழுக்க  மானவர்களாக, வீரம் மிக்கவர்களாக, விவேகம் உள்ளவர்களாக, கண்ணியமானவர்களாக, புகழத்தக்கவர்களாக ஆக்குவதே எங்கள் வாழ்வின் நோக்கம். எங்கள் பிரார்த்தனைகள் உங்களுக்காகவே. எங்கள் வாழ்வே உங்களுக்காகத்தானே !

புரிந்துகொண்டு மதித்து வாழ்ந்தால் போதும் ! வேறென்ன வேண்டும் எங்களுக்கு ?

நன்றி : இனிய திசைகள் மாத இதழ்

நன்றி:-nri-indians.blogspot

நன்றி:-.mudukulathur.com

Advertisements
  1. tamildigitalcinema
    2:11 பிப இல் ஜூலை 26, 2010

    உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்… http://writzy.com/tamil/

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: