தொகுப்பு

Archive for ஏப்ரல் 23, 2010

டாக்டரிடம் கேளுங்கள் பகுதி-03


‘‘எல்லாருக்குமே ‘ஹேர் டை’ சரிப்பட்டு வரும் என்று சொல்ல முடியாது.. சிலருக்கு அலர்ஜியை உண்டாக் கும் என்கிறாள் தோழி. இது உண்மையா? ஹெர்பல் ‘ஹேர் டை’களில்கூட கெமிக்கல் கலக்கிறார்களாமே? ஹேர் டை உபயோகிக்கலாமா, கூடாதா? தெளிவுபடுத்துங்கள் ப்ளீஸ்…’’

டாக்டர் நடராஜன், தோல் சிறப்பு நிபுணர், சென்னை:

‘‘கண்ணுக்கு மையிடுவது மட்டுமல்ல, கூந்தலுக்குச் சாயம் பூசுவதும் காப்பிய காலத் திலேயே இருந்திருக்கிறது. அப்போது, வீட்டில் தயாரித்த இயற்கையான சாயங்களையே உபயோகித்திருக்கிறார்கள். ஆனால், இப்போது யாருக்கும் அப்படி சாயம் தயாரிக்க தெரிவதில்லை. அதற்கு நேரமும் இல்லை.

இயற்கை, கெமிக்கல், அக்ரிலிக் என்று மூன்று வகையான ‘ஹேர் டை’கள் கடைகளில் கிடைக்கின்றன. மருதாணி முதல் வகையைச் சேர்ந்தது. அலர்ஜி போன்ற தொல்லைகள் தராதது. ஆனால், இதைப் பயன் படுத்தினால் தலைமுடி சிவப்பாக மாறிவிடுவதால் கொஞ்சம் சங்கடமாக இருக்கும். கெமிக்கல் மற்றும் அக்ரிலிக் ‘ஹேர் டை’களில் அலர்ஜி ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. சிலருக்கு டை அடித்துக் கொண்டு வெயிலில் போனால், முகம், கண், புருவம் எல்லாம் வீங்கிப் போய்விடும். தலை அரிக்கும். கொப்புளம் வரும்.

இப்படி அலர்ஜி ஏற்பட்டால், ஒன்றும் செய்ய முடியாது. அந்த ப்ராண்டைத் தவிர்த்து வேறு ப்ராண்ட் மாற்ற வேண்டியதுதான். அலர்ஜி ஆனால்தான் மாற்ற வேண்டுமே தவிர, விளம்பரங்களில் மயங்கி அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு சிலர், ‘முப்பது வருஷமா இதே ப்ராண்டைத்தான் உபயோகிக்கிறேன் டாக்டர்… திடீர்னு இப்போ அலர்ஜி ஆகுது’ என்று வருவார்கள். ‘நீங்கள் ப்ராண்டை மாற்றவில்லை. ஆனால், வியாபாரத்துக்காக, அந்த கம்பெனி, அதில் சேர்க்கிற பொருள்களை மாற்றியிருக்கிறது’ என்பேன்.
நடராஜன்

ஆம்! முப்பது வருஷத்துக்கு முன்பிருந்த கம்பெனிகள் இப்போ தும் இருக்கின்றன. ஆனால், பேஸ்ட்டிலிருந்து சோப்பு வரை அன்று இருந்த அதே தரத்திலும் அதே உட்பொருள்களுடனும்தான் இருக்கின்றனவா என்றால், இல்லை. அப்புறம், அலர்ஜி ஆகாமல் என்ன செய்யும்? ஹெர்பல் ‘ஹேர் டை’கள் கெமிக்கலைவிட கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், இவையும் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். ஏனெனில், நிறத்துக்காகச் சில கம்பெனிகள் கெமிக்கல் கலக்கின்றன.

அதற்காக, ‘ஹேர் டை’ உபயோகிக்கவே கூடாது என்றில்லை. உபயோகிக்கலாம். ஆனால், அளவாக உபயோகிக்க வேண்டும். ‘ஹேர் டை’ போடுவதற்கான கால இடைவெளியை முடிந்த அளவுக்குத் தள்ளிப் போடலாம். எந்த ‘ஹேர் டை’ வாங்கினாலும் அதிலிருந்து ஒரு துளி எடுத்து, காதின் பின்புறம் வைத்து, இரண்டு மணி நேரம் விட்டு, ஏதேனும் அரிப்பு, கொப்புளம், தடிப்பு வருகிறதா என்று பார்த்து ஒரு பிரச்னையும் இல்லையெனில், உபயோகிக்கலாம் (எல்லா ‘ஹேர் டை’ பாக்கெட்களிலும் பொடி எழுத்துக்களில் இந்தக் குறிப்பைப் போட்டிருப்பார்கள்!).

இளம்வயதில் இளநரை ஏற்பட்டு டை போடுகிறவர்கள் எனில் பரவாயில்லை. சற்றே வயதானவர்கள் அடிக்கடி டை போட்டு, வம்பை விலைகொடுத்து வாங்கவேண்டாம். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, நரை முடிக்கென்று சிறப்பு மரியாதை இருக்கிறது என்பது என் கருத்து…’’
_______________________________________________________

‘‘என் வயது 48. காது இரைச்சல், காது மந்தம் என்று ஈ.என்.டி. டாக்டரிடம் போனேன். எக்ஸ்-ரே பார்த்த டாக்டர், ‘செவியின் பின்புறம் எலும்பு வளர்ந்துள்ளது. பரம்பரை வியாதிதான் இந்த செவிட்டுத்தன்மை. ஆபரேஷன் செய்யவேண்டும்’ என்றார். இது என் மகளையும் பாதிக்குமா? மருந்து, மாத்திரை, காது சொட்டு மருந்து மூலம் குணப்படுத்த முடியாதா? காது கேட்கும் கருவி உபயோகப்படாதா? என் வயதுக்கு அதை நான் பொருத்த முடியுமா? ஆபரேஷனுக்கு எவ்வளவு செலவாகும்? மூளை நரம்பு இதனால் பாதிக்கப்படுமா? இதிலேயே இன்னொரு பிரச்னை… நேருக்குநேர் உட்கார்ந்து பேசினால் காதில் விழுகிறது. பக்கவாட்டில் உட்கார்ந்து பேசினால்தான் விழுவதில்லை!’’

டாக்டர் கே.ஆர். கண்ணப்பன், காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர், மதுரை:

‘‘உங்களுடைய காது இரைச்சல், காது மந்தத்துக்குக் காரணம் ‘ஓடோஸ்க்ளிரோசிஸ்’ (Otosclerosis) என்கிற பிரச்னையாக இருக்கும். நடுச்செவியில் உள்ள ஸ்டேப்ஸ் என்கிற எலும்பின் அசைவுத்தன்மை நின்றுவிடுவதுதான் இந்தப் பிரச்னை. இதற்குக் காரணம், இந்த எலும்பின் முக்கியப் பகுதியைச் சுற்றிலும் எலும்பு வளர்ந்து, அடைத்துவிடுவதுதான். காது நுண் அறுவை சிகிச்சை செய்வதுதான் இதற்கான நிரந்தரத் தீர்வு. இந்த சர்ஜரியைச் செய்யும்போதே காது நன்றாகக் கேட்கத் துவங்கிவிடும். எலும்பு மறுபடியும் வளராது.

நோயின் தன்மையைப் பொறுத்தே இதற்கான ஆபரேஷன் செலவை நிர்ணயம் செய்ய முடியும். ஆபரேஷனுக்காக, மருத்துவ மனையில் மூன்று நாட்கள் வரை தங்கவேண்டி வரும். இதனால் மூளை நரம்பு பாதிக்காது. இது பரம்பரை வியாதி என்பதால், உங்கள் மகளையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

காதுக்குக் கருவி பொருத்து வது ஒலியைப் பெருக்கிக் கொடுக்குமே தவிர, நோய்க்கு குணம் தராது (காதுக்குக் கருவியை எந்த வயதிலும் பொருத்தலாம்). மாத்திரைகளும் நோயின் தாக்கத்தை ஓரளவு குறைக்குமேயொழிய முழுமையான தீர்வு தராது.

நேரில் உட்கார்ந்து பேசும்போது காது கேட்பதற்கும் பக்கவாட்டில் பேசினால் கேட்காமல் போவதற்கும் காரணம் உங்கள் காதல்ல. நேரில் உட்கார்ந்து பேசுகிறவரின் வாயசைவை வைத்து, நீங்கள் அவர் பேசுவதை அனுமானிக்கிறீர்கள். அதுவே பக்கவாட்டில் எனில், முடிவதில்லை!’’
____________________________________________________________________________________________

‘‘என் வயது 20. எனக்கு முடி ரொம்பவும் கொட்டுகிறது. பொடுகு இருக்கிறது. முன்புறமும் காதின் அருகிலும் ரொம்ப கொட்டுகிறது. நான் தற்சமயம் இரண்டு வகை பொடுகு ஸ்பெஷல் ஷாம்புகளைக் கலந்து போடுகிறேன். இதுதவிர, வாரத்துக்கு ஒரு தடவை நல்லெண்ணெய் தடவி, ஒரு குறிப்பிட்ட பிராண்ட் சீயக்காய் போட்டுக் குளிக்கிறேன். இருந்தும் முடி கொட்டுவது குறையவில்லை. அழகு நிலையத்துக்குப் போனபோது ஹென்னா போடச் சொன்னார்கள். ஹென்னா போட்டால் முடி கொட்டாதா? ஹென்னா போட்டால், என்ன ஷாம்பு போட வேண்டும்? நெல்லிக்காய் கலந்ததென்று விற்கப்படுகிற ஹேர் ஆயில் உபயோகிக்கலாமா? இது செப்டிக் ஆகுமா? என் கவலையைப் போக்க, வழி சொல்லுங்கள்…’’

டாக்டர் சி.முருகன், தோல் நோய் சிகிச்சை நிபுணர், மதுரை:

‘‘ரத்தசோகை, தைராய்டு பிரச்னை, மனஅழுத்தம், பொடுகு, தண்ணீரின் தன்மை, கர்ப்பகாலம், அதிகப்படியான மாத்திரைகளைச் சாப்பிடுவது, ஹார்மோன் ஏற்ற இறக்கம் போன்றவை முடி கொட்டுவதற்கான பொதுவான காரணங்கள். இதில் ஏதாவது ஒன்றுகூட உங்களின் முடி உதிர்வதற்குக் காரணமாக இருக்கும். நீங்கள் குறிப்பாக முன்மண்டையிலும் காதின் பின்புறத்திலும் அதிகமாக முடி கொட்டுவதாகக் குறிப்பிட்டிருப்பதால், அந்த இடங்களில் வெளிப்புறத்தில் ஏதேனும் புண் அல்லது அலர்ஜி இருக்க வாய்ப்புண்டு.

தோல் நோய் சிறப்பு மருத்துவரிடம் காண்பித்து, நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை எடுக்க வேண்டும். மற்றபடி, முடி உதிர்வது என்பது எல்லோருக்கும் நிகழ்வதுதான். சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் ஐம்பது முடிகள்வரை உதிரும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின் றன. அதேபோல், இயற்கையாகவே புதுமுடியும் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

உங்களுக்கு பொடுகு இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தீர்கள். பொடுகு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள, வாரத்தில் இருமுறை கட்டாயமாக தலைக்கு குளிக்க வேண்டும். ஏதேனும் ஆன்டி டான்ட்ரஃப் ஷாம்பு (Anti dandruff shampoo) உபயோகிக்கலாம். ஷாம்பு போட்டபின் தலையை மிக நன்றாக தண்ணீர்விட்டு அலசுவது முக்கியம். இத்துடன் தினமும் சாதாரண தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதே போதுமானது.

பல ஷாம்புகள் மற்றும் எண்ணெய்களை நீங்கள் மாறி மாறி உபயோகிப்பது, உங்களின் குழப்பமான மனநிலையைக் காட்டுகிறது. மறந்து விடாதீர்கள். மன அழுத்தமும் முடி உதிர்வதற்கான காரணம்தான்! தவிர, ஷாம்புகளை மாற்றிக் கொண்டே இருப்பதும் வெவ்வேறு ஷாம்புகளை கலந்து உபயோகிப்பதும்கூட தவறுதான்.

ஹென்னா போடுவது பற்றிக் கேட்டிருந்தீர்கள். மருதாணி நல்ல ஹேர் கண்டிஷனர். கடைகளில் கேசத்துக்கான ஹென்னா பவுடர் என்று கேட்டால் கிடைக்கிறது. அதிலேயே உபயோகிப்பதற்கான முறையும் விளக்கப்பட்டிருக்கிறது. அதைப் பின்பற்றலாம். தலையில், ஏற்கெனவே ஏதாவது புண் அல்லது அலர்ஜி இருந்தால், ஹென்னாவைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், ஹென்னா பவுடரில் ஏதேனும் கெமிக்கல் கலந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

என்னதான் நாம் வெளிப்புறத்தைப் பராமரித்தாலும், உடலின் உள் ஆரோக்கியமும் முக்கியமானது. சத்துள்ள உணவு வகைகளைச் சாப் பிடுங்கள். இரும்புச் சத்து, மற்றும் கால்சியம் அதிகமுள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். பால் அருந்துவதையும் பேரீச்சம்பழம் சாப்பிடுவதையும் தினசரி வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.’’

__________________________________________________________________________________________________

‘‘எனக்குத் திருமணமாகி 7 வருடங்கள் ஆகின்றன. என் வயது 31. நார்மல் டெலிவரியில் மகள் பிறந்தாள். பிரசவம் ஆகி 45 நாட்கள் கழித்து, காப்பர்|டி போட்டுக் கொண்டேன். சிறிது காலம் கழித்து, ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அதை எடுத்துவிட்டேன். வேறெந்த கர்ப்பத் தடையையும் உபயோகிக்கவில்லை. இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பியும் கருத்தரிக்கவே இல்லை. டாக்டரிடம் காண்பித்ததில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொன்னார். 8, 9 மாதம் காத்திருந்தும் பலனின்றி வேறொரு டாக்டரிடம் காண்பித்ததில் லேப்ராஸ்கோபிக் செய்யவேண்டும் என்றார். ஆனால், நான் செய்யவில்லை. எனக்கு கரு உருவாகாததற்கு என்ன காரணம்? காப்பர்-டி போட்டதால் இன்ஃபெக்ஷன் ஆகியிருக்குமா? மாதவிலக்கு சிலசமயம் தள்ளிப் போகிறது.’’


டாக்டர் பூங்கோதை செந்தில், மகப்பேறு மருத்துவ நிபுணர், திருச்சி:

‘‘முதல் குழந்தை பிறந்த பிறகு, இரண்டாவது குழந்தை பிறக்காமல் இருப்பதை ‘செகண்டரி இன்ஃபெர்டி லிட்டி’ என்று கூறுவோம். உங்களுக் கும்கூட இந்தப் பிரச்னையாகத்தான் இருக்கும். காப்பர்-டி உபயோகித்தது, இன்ஃபெக்ஷன் ஆனது உள்ளிட்ட பல இதற்குக் காரணமாக அமையும்.

முதல் குழந்தையே பிறக்காமல் இருப்பவர்களுக்கு உரிய காரணங்களும் இந்தப் பிரச்னைக்குப் பொருந்தும். அதாவது முதல் குழந்தை பிறந்த பிறகு, உங்கள் கணவருக்கு ஏதாவது குறை ஏற்பட்டிருக்கலாம். அதற்கு முப்பது சதவிகித வாய்ப்பு உள்ளது. அதனால், தகுந்த மருத்துவரை அணுகி, உங்கள் கணவரின் உடல்நிலையைப் பரிசோதித்து, குறையிருந்தால் சிகிச்சை எடுப்பது அவசியம். நீங்களும் லேப்ராஸ்கோபிக் அறுவைசிகிச்சை செய்து பார்க்கலாம். இதனால், எந்தப் பிரச்னையும் வராது. பயப்பட வேண்டாம். இதன் மூலம், கருத்தரிக்காததற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருந்தாலும் தெரியவரும். அதன்பின் மகப்பேறு மருத்துவரை அணுகி, தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் கருத்தரிக்க வாய்ப்புள்ளது. மற்றபடி, மாத விலக்கு தள்ளிப்போவது பற்றிக் கவலைப்பட வேண்டாம்.’’

********************************************************************

நன்றி:-டாக்டர் நடராஜன், தோல் சிறப்பு நிபுணர், சென்னை:
நன்றி:-டாக்டர் சி.முருகன், தோல் நோய் சிகிச்சை நிபுணர், மதுரை:
நன்றி:-டாக்டர் பூங்கோதை செந்தில், மகப்பேறு மருத்துவ நிபுணர், திருச்சி:

நன்றி:- அ.வி

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

டாக்டரிடம் கேளுங்கள் பகுதி-01

டாக்டரிடம் கேளுங்கள் பகுதி-02

டாக்டரிடம் கேளுங்கள் பகுதி-03

#########################################################

உறவுகள் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


ஆதாம் ஏவாள்
ஆரம்பித்த உறவுகள் 
சாத்தான் புகுந்து
சாய்த்தான்; அதனால் – பிரிவுகள்

அண்டை வீட்டோடும்
அண்டை நாட்டோடும்
சண்டை போட்டே
மண்டை ஓட்டை
மலிவாக்கினோம்….

உறவு ஓர் அதிசய மரம்:
உள்ளன்பே அதன் உரம்;
உதவும் கரம் தான் உண்டு
அதனைத் தாங்கும் தண்டு;

அன்பு ஊற்று தான்
இன்பக் காற்று தரும் இலைகள்;
உறவுக்கு மறுபெயர் “கிளைகள்”
உட்காரட்டும் பாசப்பறவைகள்….

உணர்வு தான் ஆணி வேர்;
உணவு அதற்கு உளமார மன்னிக்கும் நற்குணமே
சட்டை பையில் பணமிருந்தால்
சட்டென ஒட்டும் உறவுகள்;

சற்றே நிலை மாறினால்
சட்டை செய்யாது திசை மாறும் பறவைகள்
விலா எலும்பின்
விலாசம் காண

விவாக உறவுகள்
உயிர் காக்கும்
உண்மைத் தோழமை
உயிருள்ள வரை மறவா உறவு

தொப்புள் கொடியாய்த்
தொடரும் இரத்த உறவு
ஆயிரம் உறவுகளிருந்தாலும்
தாயும்-தந்தையும் தன்னேரில்லா உறவு

கற்ற கல்வி
உற்ற நண்பனாய் உதவும் உறவு
நற்செயல்கள் என்னும் உறவே நம்மோடு
நடந்து வரும் இடுகாடு

இவ்வுறவைப் பேண
இறுதிவரைப் போராடு
எல்லா உறவுகளும்
நில்லா உலகோடு நின்றுவிடும்;

எல்லாம் வல்ல இறைவனிடம்
எல்லா நேரமும் அடியான் கொண்ட “உறவு”
எல்லா துன்பங்களையும் வென்றுவிடும்!!!!
எல்லா உறவுகளயும் பேணுவோம்

எல்லார்க்கும்  இறையோனுக்கும்
பகைவனான சாத்தானைப்
பகைத்திடுவோம்; அதனால்
கலகமே இல்லாத
உலகமேக் காணுவோம்……………………!!!!!!!!!!!!!

குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி !


சென்னை : குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில், ‘குடும்பத்தில் முதல் பட்டதாரி’ என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டக் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், தொழிற்கல்வி படிப்பை ஊக்குவிக்க சாதி பாகுபாடின்றி, வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்’ என, ஜனவரியில் சட்டசபை கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை செயலர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:  வரும் 2010-11ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும். கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக் கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும். கவுன்சிலிங் முறையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். முந்தைய ஆண்டுகளில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.

தங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும். சான்றிதழ்களை சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர்/அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

‘குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை’ என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப் படும். உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெற வேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

40 சதவீதம் பேர் பயனடைவர்: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பொறியியல் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப் பங்களில், மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியா என்ற விவரமும் கேட்கப்பட்டது. அதன்படி, 40 சதவீத மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலிலும் 40 சதவீத மாணவர்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது. இதர தொழிற்கல்வி படிப்புகளிலும் இதே நிலையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டம் ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் சேருபவர்களில் 40 சதவீதம் பேர் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருப்பர் என்றும், தமிழக அரசின் இச்சலுகை மூலம் ஆண்டுதோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற விவரம் ஆவணங்களுடன் கேட்கப்படுவதால், இந்த எண்ணிக்கை சற்று குறையவும் வாய்ப்புள்ளது.

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++

பராசக்தி – ரிப்பீட்டேய் [சிரிக்க சிந்திக்க]

ஏப்ரல் 23, 2010 1 மறுமொழி

அரசியல் பல உட்டாலக்கிடி வேலைகளைப் பார்த்து இருக்கிறது. பல டுபாக்கூர் அரசியல்வாதிகளைக் கண்டிருக்கிறது. ஆனால் இந்த பதிவு உட்டாலக்கிடியும் அல்ல; எழுதுகிற நான் டுபாக்கூரும் அல்ல. அரசியலில்வாதிகளிடம் அன்றாடம் அடிபட்டு உதைபட்டு மிதிபட்டு அல்லல்படுகிற சாதாரண குடிமகன்தான்.

மனிதாபிமானத்தை இழந்தேன்; மனசாட்சியைப் புதைத்தேன்; மருத்துவத்துக்காக வந்த மூதாட்டியைத் திருப்பி அனுப்பியதைப் பார்த்தும் மவுனம்  சாதித்தேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்!

நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று! இல்லை; நிச்சயமாக இல்லை!

மனசாட்சியைப் புதைத்தேன் மனசாட்சி வேண்டாம் என்பதற்காக அல்ல; மனசாட்சியை வைத்துக்கொண்டு மலிவு விலைக்கடையில் மளிகை கூட வாங்க முடியாது என்பதற்காக!

வந்த மூதாட்டியைத் திருப்பி அனுப்பியதை வாளாவிருந்து பார்த்தேன்; அன்னை வேண்டாம் என்பதற்காக அல்ல! இந்த அன்னையை வரவேற்றால் வேறுசில அன்னைகள் வெகுண்டு எழுவார்களே என்பதற்காக!

உனக்கேன் இந்த கையாலாகாத்தனம்? உலகத்தில் யாருக்கும் இல்லாத
கையாலாகாத்தனம் என்று கேட்பீர்கள்!

நானே பழக்கப்பட்டுவிட்டேன்;நன்றாகப் பழக்கப்பட்டுவிட்டேன்.

சுயநலம் என்பீர்கள்- என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது.
அண்டப்புளுகர்கள் அள்ளி வழங்கும் பணத்துக்காக அவ்வப்போது வாக்குப்போட்டு
ஜனநாயகக்கடமையாற்றுகிறோமே, அதைப்போல!

என்னை சொரணைகெட்டவன் என்கிறீர்களே? இந்த சொரணைகெட்டவனின் வாழ்க்கையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவனை குப்புறப்போட்டு குமுறியவர்கள் எத்தனை, மல்லாக்கப்போட்டு மிதித்தவர்கள் எத்தனை, நிற்க வைத்து உதைத்தவர்கள் எத்தனை என்று கணக்குப் பார்க்க முடியும்.

நாங்கள் நல்லாட்சியைப் பார்த்ததில்லை; நமீதாவின் நடனத்தை நாக்கைத்  தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்திருக்கிறோம். கஞ்சி குடித்ததில்லை; ஜொள்ளு வடித்திருக்கிறோம்.

கேளுங்கள் என் கதையை! எம்மை இடித்தபுளி என்று இகழ்வோரே! திட்டுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்!

தமிழ்நாட்டிலே இந்தப்பாடாவதி மாநிலத்திலே பிறந்தவன் நான். மாநிலத்தில் ஒரு பேச்சு; மத்தியில் ஒரு பேச்சு! தமிழக அரசியல்வாதிகளின் இரட்டைவேடத்துக்கு நானென்ன விதிவிலக்கா?

தில்லி! அவர்களின் வயிறை வளர்த்தது; சிலரை ஆசியப்பணக்காரர்களின் வரிசையில் சேர்த்தது.

கனவு கண்ட தமிழகத்தைக் கண்டேன்; கண்றாவியாக! ஆம், கையாலாகாததாக!

மாநிலத்தின் பெயரோ தமிழ்நாடு! மங்களகரமான பெயர்; ஆனால் டிவியில் கூட தமிழில்லை.

நிமிர்ந்து நின்ற தமிழனின் தலை குனிந்துவிட்டது. கையிலே டாஸ்மாக் பாட்டில்; கண்ணெதிரே சினிமா போஸ்டர்! வீட்டிலே இலவச டிவி! தமிழகம் முடங்கியது; தமிழகத்தோடு நானும் முடங்கினேன்.

தமிழனுக்கு தயவு காட்டியவர் பலர். அவர்களிலே சில தறுதலைகள் அவனது தலையிலே மிளகாய் அரைத்தனர். மரத்தடியில் திருடிவிட்டு பிள்ளைகளுக்கு மாநிலத்தை வடை போல பிய்த்துக் கொடுத்து அழகு பார்த்தனர்.

கள்ளச்சாமியார்களும் தமிழனுக்குக் கருணைகாட்ட முன்வந்தனர். பிரதி உபகாரமாக பக்தைகளோடு மெத்தையிலே வித்தை காட்டினர். அதில் தலையானவன் தான் நித்தி! எங்கள் தலையிலே போட்டான் சுத்தி! முதுகிலே இறக்கினான் கத்தி! காவியின் பெயரால், அதை அணிந்த பாவியின் பெயரால்!

தமிழன் சட்டையைக் கிழித்துக்கொண்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்காவது போயிருப்பான். ஆனால், அவனை தன் மீதே கல்லை எடுத்து எறிந்து கொள்ள வைத்தவன் அவன் தான்!

தன் வயிறு பட்டினியில் காய்வதைத் தமிழன் விரும்பவில்லை; மாதத்திற்கு நாலு சினிமா கூட பாராமல் தவிக்க விரும்பவில்லை. அவனே மனசாட்சியைக் கொன்றுவிட்டான். ஒன்றுக்கும் உதவாதத்தை உத்தரத்தில் போடுவது தமிழகத்துக்குப் புதியதல்ல: சிங்கிள் டீக்காகச் சிங்கியடித்த வட்டச்செயலாளர்கள் எல்லாம் சிகையலங்காரம் செய்ய சிங்கப்பூர் போகிறார்கள். மாடுகட்டிப் போரடித்த தமிழனுக்கு மானாட மயிலாட போரடிக்கவில்லை.இது
எப்படிக் குற்றமாகும்?

தமிழனுக்கு சொரணை வந்திருந்தால் பீஹாருக்கு ஓடிப்போய் ஐந்து வருடம், உத்திரப்பிரதேசத்துக்கு உருண்டு போய் பத்துவருடம், பாகிஸ்தானுக்கு ஓடிப்போய் பதினைந்து வருடம் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை? அதைத் தானா எல்லாரும் விரும்புகிறீர்கள்?

பணபலம் தமிழனை மிரட்டியது; பயந்து ஓடினான்.

ஆள்பலம் மிரட்டியது; மீண்டும் ஓடினான்.

ஆன்மீகம் தமிழனை விரட்டியது.

ஓடினான், ஓடினான் டாஸ்மாக்கின் கவுன்டருக்கே ஓடினான்.

அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும்; இலவசமாய் தினமும் பாட்டிலைக் கொடுத்திருக்க வேண்டும் என்று காட்டமாய்த் திட்டுபவர்கள். செய்தார்களா, வாழ விட்டார்களா எம் தமிழரை?

அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

தமிழன்: யார் வழக்குமல்ல! அதுவும் என் வழக்குத்தான்! தமிழனைச்
சொரணைகெட்டவன் என்று எழுதுகிறவர்களுக்காக இன்னொரு சொரணைகெட்டவன் பதில் சொல்வதில் என்ன தவறு?

தமிழன் சொரணையில்லாமல் இருப்பது ஒரு குற்றம்; சொரணை வந்தாலும் வராத மாதிரி நடிப்பது ஒரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் யார் காரணம்?

தமிழனை டாஸ்மாக் வாசலில் தத்தளிக்க விட்டது யார் குற்றம்? கடையின் குற்றமா? அல்லது கடையிலே ஊசிப்போன வடையின் குற்றமா?

திரையரங்க வாசலில் தமிழனை நிறுத்தியது யார் குற்றம்? நடிக நடிகையரின் குற்றமா? அல்லது நடிக நடிகையரின் நிகழ்ச்சிகளை அன்றாடம் ஒளிபரப்பும் டிவிகளின் குற்றமா?

அரசியல் என்ற பெயரில் அப்பத்தைப் பங்குபோடும் குரங்குகளை வளர்த்தது யார் குற்றம்? குரங்கின் குற்றமா? அல்லது குரங்கு போல தாவுகிறவர்களுக்கும் கூட்டம் கூட்டமாகப் போய் ஓட்டுப்போடும் வாக்காளர்கள் குற்றமா?

இக்குற்றங்கள் களையப்படும்வரை ஹவுஸ்ஃபுல் போர்டுகளும், பீர் விலையேற்றமும்  குறையப்போவதுமில்லை.

இது தான் தமிழ்நாட்டில் எந்த டாஸ்மாக் கடைக்குப் போனாலும் கிடைக்கிற மொக்கை, அலப்பறை, மப்பில் உளறுகிற தத்துவம்.

தமிழன்:
———————————————————-