தொகுப்பு

Archive for ஏப்ரல் 18, 2010

தலைமுடி பிரச்சனையும் மருத்துவமும்


th

‘இவனுக்கு இளநரையாக இருக்கிறது. என்ன செய்யலாம்’  கேட்டவர் அவனது தகப்பனார்.

அவனுக்கு 13வயதுதான் ஆகிறது.வெளிப்படையாகப் பார்க்கும் போது நல்ல கருமையாகத்தான் தெரிந்தது.

ஆயினும் உற்றுப் பாரத்த போது ஆங்காங்கே வெள்ளிக் கம்பிகளாக சில தெரிந்தன. மகன் முகத்தில் சற்று வெட்கத்தின் சாயல் மெழுகியிருந்தது.

மற்றொருத்தியின் தலையில் பட்டை பட்டையாக வெள்ளை முடிகள் கருமுடிகளை அடாத்திப் பெரும்பான்மையாக நின்றன. சரும மருத்துவர் ஈடாக பலரிடம் மருத்துவம் செய்துவிட்டாராம். வயது 28 மட்டுமே.

அழைத்து வந்தது காதலன்.

எப்படிக் கழற்றி விடலாம் என வாய்புக்காகக் காத்திருப்பவன் போல அந்தரப்பட்டுக் கொண்டிருந்தான்.

பெண் முகத்தில் இயலாமையும் சோகமும் கருமேகங்களாக அப்பிக் கிடந்தன.

உண்மைதான் அகத்தை விட முகத்தையும் தோற்றத்தையும் மட்டுமே கவனத்தில் எடுக்கும் இன்றைய சமுதாயத்தின் பார்வையில் நரையும் பின்னடைவுதான்.

இதைத் தடுப்பதற்கு வழி என்ன?

முடி நரைப்பது ஏன்?

முடி ஏன் நரைக்கிறது?

எமது முடியின் வளர்ச்சியானது படிப்படியாக நடக்கிறது.

எல்லா முடியும் ஒரே நேரத்தில் ஒரே வீச்சில் வளரும் என்றில்லை.
சில முனைகளிலுள்ள முடிகள் வளராது, வேறு சில ஓய்விலும் இருக்கும்.
சில உதிரும்.
ஓய்வில் இருந்தவை வளரும்.

எமது சருமத்தின் அடியில் இருக்கும் வேர் போன்ற கலங்களிலிருந்து (hair follicles); வளர்கிறது. அங்குதான் முடிக்கு கருமை நிறத்தைக் கொடுக்கும் மெலனின் (melanin) என்ற சாயம் உள்ளது.

அதில் மெலனின் உற்பத்தி நின்றுவிட்டால் அந்த வேரிலிருந்து வளரும் முடிக்கு கருமை நிறம் இருக்காது. அது வெள்ளை முடியாகவே இருக்கும்.

ஆனால் அதே நேரம் வேறு முளைகளிலிருந்து கருமையான முடி வளரக் கூடும்.

படிப்படியாக ஏனைய முளை வேர்களிலும் மெலனின் உற்பத்தி அற்றுப் போக வெண் முடிகள் அதிகரிக்கும்.

மருத்துவ ரீதியாக 40 வயதிற்கு உட்பட்ட ஒருவரது தலைமுடிகளில் பாதிக்கு மேல் வெண்மை அடைந்தாலே அதனை இளநரை premature greying என்பார்கள்.

ஆனால் பேச்சு வழக்கில் நாம் சில முடிகள் நரைத்தால் கூட இளநரை என்கிறோம்.

பிரதான காரணம்

இளநரைக்குக் காரணம் என்ன?

பொதுவாக இது பரம்பரை சம்பந்தமானது. உங்கள் இரத்த உறவினர்களில் பலர் ஏற்கனவே நரைத் தலையினர் எனின் உங்கள் முடியும் பெரும்பாலும் அந்தத் திசையிலேயே செல்ல நேரிடும்.

தலைமுடி வேகமாக வளர்கின்ற காரணத்தால் அதுவே முதலில் நரைக்கத் தொடங்கும்.
உடல் முடிகள் நரைக்கச் சற்றுக் காலம் செல்லும்.

வேறு காரணங்கள்

ஒரு சிலருக்கு இவை
தைரொயிட் சுரப்பி நோய்கள்,

வெண் குஷ்டம்,

இரத்தசோகை,

விட்டமின் பீ 12 gP 12 vitamin B12 deficiency குறைபாடு

ஆகியவற்றாலும் நேரலாம். ஆயினும் இவை அரிது.

‘மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும் மருந்துகள் கிடையாதா?’ என நீங்கள் வினவுவது எனக்கும் கேட்கிறது.

தினமும் பத்திரிகைகளில் நரைமுடிக்கு மருந்துவம் என விளம்பரங்கள் வருகின்றன.

உண்மையில் அப்படி ஒரு மருந்து இருந்திருந்தால் இன்று மருந்துக்கடைகளை மக்கள் மொய்த்திருப்பார்கள்.

நரை முடியுடன் உலகில் எவருமே இருக்க மாட்டார்கள்.

வெளிப்படையாகச் சொல்வதானால் இதற்கான முயற்சிகளை பலரும் செய்திருக்கிறார்கள். ஆனால் வென்றவர் எவரும் இல்லை என்பதே.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை அத்தகைய விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கும்.

‘எனக்கும் பத்து வயதிலேயே இளநரை வந்தது.. என ஆரம்பித்தார் தனது மகனுடன் வந்த அந்த 50வயதுத் தகப்பனார்.

நிமிர்ந்து அவரது தலையைப் பார்த்தேன்.

கன்னங்கரேல் எனக் கருமையாக இருந்தது.

காரணம் என்ன? கேட்காமலே அதற்கான விடை என்னிடம் இருந்தது.

‘அப்போதிருந்தே நான் டைதான் பாவிக்கிறேன்’ கண்ணைச் சிமிட்டிக் கொண்டே சொன்னார்.

உலகை வென்றுவிட்ட பெருமிதம் அவர் முகத்தில் தெரிந்தது.

புத்தியுள்ளவர். மாயையில் இருக்கும் உலகை சுலபமாக வென்று விட்டார்.

இயற்கையின் நியதியையும் மற்றவர்கள் மனநிலையையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்டார்.

ஆம்! இன்றைய நிலையில் உங்களது இளநரைக்கு ஒரே விடை தலை முடிச்சாயம் மட்டுமே.

ஆனால் நான் கூறிய அவ்வளவு விளக்கங்களையும் கேட்ட மற்ற இளம் பெண் அடுத்த மருத்துவரை தேடிச் செல்ல ஆயத்தமானார்.

ஆசைக்கு அளவேது. இன்னும் சிலகாலம் மருந்திற்கு பணத்தைத் தண்ணீராகச் செலவழித்துவிட்டு டை (Dye) க்கு இறுதியில் வருவார்.

ஆனால் இன்னொரு வழியும் உண்டு. “Grey hair is a crown of Glory”
என்கிறது பைபிள்.

முதிர்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு என நரைமுடியை மதிப்பவர்களும் உளர்.

நீங்கள் உங்கள் முடிக்கு சாயம் பூச விருப்பம் அற்றவராயின் மேற் கூறிய அந்தப் பெருமையைப் பெற்று மகிழ்வாக வாழ முடியும்.

————————————————————————————–
நன்றி :- Dr.எம்.கே.முருகானந்தன்.

நன்றி :-  ஹாய் நலமா?

##########################################################

இளநரை மறைய…–  மு.பெருமாள்

சிலருக்கு மாணவப் பருவத்திலேயே இளநரை தோன்றும். அதை தடுக்க சில குறிப்புகள்:

கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் சேகரிக்கவும். இரண்டையும் தனித் தனியாக காயவைத்து பொடி செய்யவும்.

இவை இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை பழம் சாறு 1 டீஸ்பூன் சேர்த்து கலக்கவும்.

இதை தலையில் தேய்த்து 10 நிமிடம் மிதமான வெயிலில் நிற்கவும். பின்னர் குளிக்கவும்.

வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்தால், இளநரை மறைந்து தலைமுடி கருகருவென ஜொலிக்கும்.

(மூலம் – வெப்துனியா)

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

முடி வளர சித்தமருத்துவம் – ஆக்கம் சிவகுமார்

முடி உதிர்வதை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

————————————————————————————–
நன்றி :- சிவகுமார்

நன்றி :-  சிவகுமாரின் சித்தமருத்துவம்

##########################################################

வாய்நாற்றம் (Halitosis) – Dr.எம்.கே.முருகானந்தன்.


அந்த முதியவர் வந்து உட்கார்ந்து தனது நோயைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

நான் எனது சுழலும் கதிரையைச் சற்றுப் பின் நகர்த்திக் கொண்டேன்.

இப்பொழுது என்னால் சலனமின்றி அவர் சொல்வதைக் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

வாய்நாற்றம் என்பது பொதுவாக அப்பிரச்சனை உள்ளவரை விட அவரோடு தொடர்பாடல் செய்ய வேண்டியவர்களையே முதலில் உணரச் செய்கிறது.

அவரைச் சுற்றியுள்ளவர்கள் இவரது வாய்நாற்றத்தை உணர்ந்தும் நாகரீகம் கருதி நேரடியாகச் சொல்வதைத் தவிர்ப்பர்.

அந்த மணம் இவருக்கு பழக்கப்பட்டுப் போவதால் இவரது நாசி அதை உணர்ந்து அச் செய்தியை மூளைக்கக் கடத்தத் தவறிவிடுவதால் இவ்வாறு நேர்கிறது.

அதே நேரம் வாய்நாற்றம் உள்ளவர்களையே அதிக பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்பதும் உண்மையே.

மற்றவர்கள் இவரோடு உரையாடுவதை விரைவில் வெட்டிவிடவே முயல்வர். இதனால் தொழில் ரீதியாகவும்,
நட்பு உறவு ரீதிகளாகவும் பாதிப்புகள் ஏற்படுவதுடன்,
தாழ்வு மனப்பான்மைக்கும் இட்டுச் செல்லும்.

பொதுவாக எவருக்குமே காலையில் நித்திரைவிட்டு எழும்போது வாய் நாற்றம் சற்று இருக்கவே செய்யும். இது இயற்கையானது. தூக்கத்தின்போது உமிழ் நீர் சுரப்பது குறைவாக இருப்பதால் வாய் வரண்டு கிருமிகள் அதிகரிப்பதால் இது நேர்கிறது.

நாம் பல்விளக்கி, வாய் கொப்பளிக்க அது நீங்கும். அத்தகைய உதயகால வாய்நாற்றமானது வாயைத் திறந்து கொண்டு தூங்குபவர்களில் அதிகமாகும்.

பல்லுகள் மிதப்பாக இருப்பவர்கள், மூக்கடைப்பு உள்ளவர்கள் குறட்டை விடுபவர்களில் அதிகம் இருக்கக் கூடும்.

இதைத் தவிர காய்ச்சல், வயிற்றோட்டம், டொன்சிலைடிஸ், போன்ற பல்வேறு நோய்களின் போதும் ஏற்படலாம். ஆயினும் நோய் குணமாக இவை மாறிவிடும்.

உள்ளி, வெங்காயம், சீஸ் போன்ற உணவுச் சுவையூட்டிகளும், மது, புகைத்தல் போன்ற பழக்கங்களும் காரணமாகின்றன.

இவற்றிற்கு மணத்தைக் கொடுக்கும் இராசாயனப் பதார்த்தங்கள் உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட்டு குருதிச் சுற்றோட்டத்தில் கலந்து மீண்டும் சுவாசக் காற்றில் வெளிப்படுவதாலேயே வாய் மணம் ஏற்படுகின்றது.

ஆயினும் நாட்பட்ட அல்லது நீண்ட காலம் தொடரும் வாய்நாற்றம் மிகவும் பிரச்சனைக்கு உரியது.

வாயை ஒழுங்காகச் சுத்தம் செய்யாததால் பற்களுக்கிடையே உணவுத் துகள்கள் தங்கி நிற்கும்போது அதில் பக்டீரியா தொற்று ஏற்படுவதாலேயே இது நேர்கிறது. பக்றீரியா தொற்றுள்ள சீழ் நாறுவதை ஒத்தது இது.

பற்களிடையே இடைவெளி இருப்பவர்களும், ஒழுங்கான அமைப்பின்றி பல்வரிசை தாறுமாறக இருப்பவர்களும் கூடிய அவதானம் எடுப்பது அவசியம்.

ஏனெனில் அத்தகையவர்கள் அதிக அக்கறையோடு சுத்தம் செய்தால் மாத்திரமே பற்களுக்கு இடையே சிக்கியுள்ள உணவுத் துகள்களை முற்றாக அகற்ற முடியும்.

பற்சொத்தை உள்ளவர்கள் முரசு கரைதல் போன்ற முரசு நோயுள்ளவர்களிலும் வாய்நாற்றம் அதிகம் ஏற்படுகிறது.

நீரிழிவு கட்டுப்பாடில் இல்லாதவர்களில் முரசு நோய்கள் அதிகம். அதனால் வாய்நாற்றமும் அதிகம்.

மூக்கில் உள்ளபிரச்சனைகளும் வாய் நாற்றத்திற்குக் காரணமாகலாம்.

மூக்கடைப்பு உள்ளவர்கள், மூக்கில் நீர்க்கட்டி (Nasal Polyp) உள்ளவர்களிலும் ஏற்படுகிறது.

சிறு பிள்ளைகளில் இவ்வாறான மணம் இருந்தால் அது ஏதாவது மூக்கினுள் வைக்கப்பட்ட அந்நியப் பொருள் காரணமாகலாம்.

மூக்கினுள் குண்டுமணி, ரப்பர் துண்டுகள், அழிரப்பர் போன்ற பல பொருட்களை பிள்ளைகளின் மூக்கினுள் இருந்து அகற்றி துர்நாற்றத்தை ஒழித்த அனுபவம் எனக்கு நிறையவே உண்டு.

உணவுகளால் வாய் நாற்றம் ஏற்படுவது போலவே உணவு உண்ணமால் பட்டினி கிடப்பதும், விரதம் அனுஷ்டிப்பதும் கூட வாய் நாற்றத்தை ஏற்படுத்தலாம்.

அதற்குக் காரணம் பட்டினியிருக்கும் நேரங்களில் எமது உடலின் சக்தித் தேவைகளுக்காக கொழுப்பு கரைக்கப்படுகிறது. இதன்போது ‘கீட்டோன்’ என்ற இரசாயனப் பொருள் உற்பத்தியாகிறது. இது சுவாசத்தோடு வெளிவரும்போது வாய்நாற்றமாகத் தோன்றும்.

இவ்வாறு பல காரணங்களைச் சொன்னாலும் பெரும்பாலும் வாயிலிருந்தே இது ஏற்படுகிறது.

  • ஏற்கனவே குறிப்பிட்டது போல சரியாகச் சுத்தம் செய்யாததால் பல் இடுக்குகளுக்குள்ளும், முரசுகளிலும ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுத்துகள் முக்கிய காரணமாகும்.
  • ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களில் பக்டிரீயா கிருமிகள் சேர்ந்து அழுகிச் சேதமடையும். அதன்போது வெளியேறும் வாயுக்கள்தான் துர்நாற்றத்திற்குக் காரணமாகும்.
  • பற்களின் மேல் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களில் உமிழ் நீரும், பக்டீரியா கிருமிகளும் சேரும்போது பிளாக் (Dental Plaque) எனப்படும் மென் படலமாகப் படியும். இதில் கல்சியமும் சேர்ந்து இறுகிக் காரையாகப் (Tartar)படியும்.
  • அத்தகைய காரையை அகற்றாவிட்டால் பற்கள் ஆட்டம் கண்டு விரைவில் விழுந்துவிடும். ஆதலால் பல்மருத்துவரிடம் காட்டி அவற்றைச் சுத்தம் செய்வது அவசியம். காரை இறுக்கமாக பற்களின் மேல் ஒட்டிக்கொள்ளும். பற்களுக்கும் முரசுக்கும் இடையேயும் பரவி முரசு நோய்களுக்கும் இட்டுச் செல்லும். இதனால் முரசுகள் அழற்சியடைந்து வீங்கும். பற்களை துலக்கும் போது இரத்;தம் வடிவதற்குக் காரணம் இத்தகைய (Gingivitis) முரசு நோய்தான். இவை யாவுமே வாய் நாற்றத்தைக் கொண்டுவரும்.
  • சிலருக்கு நாக்கின் பிற்பகுதியில் வெள்ளையாக அழுக்குப் படர்வதுண்டு. இது பொதுவாக மூக்கின் மேற்பாகத்திலிருந்து சளி உட்புறமாகக் கசிவதால் (Post Nasal Drip) ஏற்படலாம். இதுவும் வாய்நாற்றத்திற்குக் காரணமாகலாம்.

இவ்வாறு வாய்நாற்றத்திற்குக் காரணங்கள் பல. அடிப்படைக் காரணத்தைக் கண்டு பிடித்து அதை நிவரத்தி செய்ய வாய்நாற்றம் முற்றாக நீங்கும்.

————————————————————————————–
நன்றி :- Dr.எம்.கே.முருகானந்தன்.

நன்றி :- தினக்குரல்

நன்றி :-  ஹாய் நலமா?

##########################################################

சிலந்தி – விஞ்ஞான உண்மைகள்


சிலந்திகளைப் பார்த்திருக்காத சுட்டிகளே இருக்க முடியாது. உங்கள் வீடுகளை நூலாம் படைகளின் கூடாரமாக்கும் சிலந்திகளும் உண்டு. கடித்து உயிரையே பறித்துவிடும் சிலந்திகளும் உண்டு. சிலந்திகளிலும் ஆயிரம் வகை!

வீட்டுச் சிலந்தி

வீட்டுச் சிலந்திகள் இருள் அடைந்த இடங்களை அதிகம் விரும்பும். வீட்டுக் கூரையிலோ, ஜன்னல் பக்கமோ வலை கட்டும். நிறைய பூச்சிகளைப் பிடிக்க முடியும் என்பதால் இந்த இடங்களை தேர்ந்தெடுக்கிறது.

வலையைக் கட்டி முடித்ததும் ஓர் ஓரமாக அமர்ந்து பூச்சிகள் வருவதற்காகக் காத்திருக்கும்.

பெரிய பூச்சிகள் மாட்டினால் அவற்றின் மேல் அதிக அளவு நூலைப்போட்டு பிடித்துக்கொள்ளும்.

பிளாக் விடோ

கறுப்புக் கண்ணாடி போல் உடலுள்ள சிலந்தி இது. ஆண் சிலந்திக்கும் பெண் சிலந்திக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. பெண் சிலந்திகள் ஆண் சிலந்திகளை விடச் சற்றுப் பெரியவை.

பெண் சிலந்திகளின் வயிற்றுப்பகுதியில் ஒரு சிவப்பு வட்டம் இருக்கும். ஆண் சிலந்திகளுக்கு இருபுறமும் சிவப்பு மற்றும் வெள்ளையில் கோடுகள் காணப்படும்.

பொதுவாக இவை தனிமை விரும்பிகள். வலையில் சின்ன அதிர்வு ஏற்பட்டாலும் ஓரமாக பதுங்கிக்கொள்ளும். இந்த வகை சிலந்திகளின் கடி விஷமுள்ளது. ஆனால், ஆரோக்கியமானவர்களை ஒன்றும் செய்யாது. பெண் சிலந்திதான் கடிக்கும். ஆண் கடிக்காது.

தோட்டச் சிலந்தி

தோட்டங்களிலும் புல்வெளிகளிலும் வாழும். கறுப்பு மற்றும் மஞ்சள் கோடுகளுடன் காணப்படும்.

நடுப்பகுதியில் சற்று அதிக வலிமையாக இருக்கும்படி வலை கட்டும். அந்த இடத்தில் பெண் சிலந்தி அமர்ந்து கொள்ளும். ஆண் சிலந்தி பெண் சிலந்தியைச் சுற்றி வலையை மேலும் பெரிதாக்கிக்கொண்டே போகும்.

தங்கக்கம்பி சிலந்தி

இதைப் ‘பூச்சிலந்தி’ என்றும் சொல்வார்கள். மஞ்சள் உடலில் சிவப்பு தீற்றல்கள் இருக்கும். கண்களுக்கு இடையேயும் சிவப்பு வண்ணம் காணப்படும். இவை புல்வெளி, வயல், தோட்டங்களில் வெள்ளை, மஞ்சள் மலர்களின் மேல் மலர்ந்திருக்கும்.

இவை பெரிய மலர்களின் ஓரத்தில் அமர்ந்திருக்கும். பூவிலுள்ள தேனைக் குடிக்க பூச்சிகள் வந்ததும் பிடித்து அவற்றின் உடலுக்குள் விஷத்தை ஏற்றும். இந்த விஷம் பூச்சியின் உடலில் உள்ள பாகங்கள் அனைத்தையும் உருக்கி திரவமாக மாற்றும். அதன் பிறகு அந்த திரவத்தை அப்படியே உறிஞ்சிக் குடிக்கும்.

பச்சைச் சிலந்தி

இவை வயல்களிலும் காடுகளிலும் காணப்படும். புதர்களிலும் சின்னச் செடிகளிலும் கூட இருக்கும்.

வேகமாக ஓடக்கூடிய இச்சிலந்திகள் பூச்சிகளை பூனை போல் பதுங்கிச்சென்று பிடித்து உண்ணும்.

கரோலினா உல்ஃப் சிலந்தி

இவை வயல்களில் காணப்படும். தரையில் கிடக்கும் பூச்சிகளை இரவில் வேட்டையாடும்.

பாலைவனச் சிலந்தி

சிலந்திகளுள் மிகப்பெரியவை இவை. மணலுக்கடியில் புதைகுழிகள் கட்டி வாழும்.

இரவில் குழியின் வாசலருகே குட்டிப்பூச்சிகளுக்காக காத்திருந்து பிடிக்கும். மற்ற நேரங்களில் வெளியே வராது.

ஆண் சிலந்திகள் 10-11 ஆண்டுகள் வாழும். பெண் சிலந்திகள் 25 ஆண்டுகள் வரை வாழும்.

********************************************************************

நன்றி:- சு.வி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நீச்சல் – GSS


எந்த விளையாட்டையுமே அதன் நுணுக்கங்களையும், அடிப்படை விதிகளையும் அறிந்துகொண்டால் திறமையாக ஆட முடியும். குறிப்பிட்ட விளையாட்டுப் போட்டிகளை நேரிலோ தொலைக்காட்சியிலோ பார்த்தாலும் நன்றாக ரசிக்க முடியும். அதற்கு இந்தப் பகுதி உதவும். முதலில் நீச்சல்.

1. நீச்சல் என்பது ஒரு விளையாட்டா?

கிராமத்தில் வசிப்பவர்களுக்கு நீச்சல் ஒரு தினசரி ஆனந்த அனுபவம். ஆறுகளிலும் குளங்களிலும் அவர்கள் சிறுவயதிலிருந்தே இயல்பாக நீச்சல் அடிப்பார்கள். அதே சமயம், இன்றைய காலகட்டத்தில் நீச்சல் போட்டிகளில் பலவித மான பரிசுகளை வெல்ல வாய்ப்பு உண்டு. மற்ற எந்த விளையாட்டையும்விட நீச்சல் சாம்பியன்களை அதிகமாக கொண்ட நாடுகள் நிறைய பதக்கங்களை சர்வதேச போட்டிகளில் தட்டிவர வாய்ப்பு அதிகம்.

2. ஏன் அப்படி?

நீச்சலில் நான்கு வகை உண்டு. ஒவ்வொரு வகையிலும் வெவ்வெறு தூர அளவுக்கான போட்டிகள் (50 மீட்டர், 100 மீட்டர் என்பதுபோல்) உண்டு. ஆக, நீச்சல் என்ற ஒரு பிரிவிலேயே பல பதக்கங்களை அள்ளி வரலாம்.

3. நீச்சலில் உள்ள நான்கு வகைகள் என்ன?

பட்டாம்பூச்சி இறக்கைகளை அடித்துக்கொள்வது போல அசைவுகள் செய்தபடியே நீச்சல் அடிப்பது ’பட்டர்ஃப்ளை’ வகை நீச்சல். அதாவது, இரண்டு கைகளும் ஒரே சமயத்தில் முன்னே வரவேண்டும். ஒரே சமயத்தில் பின்னே செல்லவேண்டும். இரண்டு தோள்களும் தண்ணீரில் ஒரே நேர்க்கோட்டில் இருக்கவேண்டும்.

மார்புப் பகுதி ஆகாயத்தைப் பார்த்திருப்பது போல வைத்துக் கொண்டு நீச்சலடிப்பது ‘பேக்ஸ்ட்ரோக்’ (backstroke). இப்படி நீச்சலடிக்கும்போது பாதம் தண்ணீருக்குள்ளேயே எப்போதும் இருக்கவேண்டும்.

‘ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்’ (breast stroke) என்றவகை நீச்சலில் கைகள் எப்போதும் தண்ணீர் மட்டத்துக்கு அடியிலேயே இருக்கவேண்டும். இரண்டு கால்களும் ஒரேமாதிரி அசைவுகளைத்தான் ஒரு சமயத்தில் தரவேண்டும்.

இப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நமக்கேற்ற வகையில் நீச்சலடிப்பது ‘ஃப்ரீஸ்டைல்’ (freestyle). இந்த வசதியின் காரணமாகவே மற்ற மூன்று பிரிவுகளை விட இந்தப் பிரிவில் பங்கெடுத்துக் கொள்பவர்கள் குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க மிகக் குறைவான நேரமே எடுத்துக் கொள்வார்கள்.

4. நீச்சல் வீரர் பாதி ஆட்டத்தில் அவுட் ஆக வாய்ப்பு உண்டா?

தேசிய மற்றும் சர்வதேச நீச்சல் பந்தயங்கள் நடைபெற வேண்டுமானால் நீச்சல் குளங்களில் எட்டு லேன்கள் இருக்கவேண்டும். அதாவது, ஒரே சமயத்தில் எட்டுப் பேர் பங்கு பெறும்படி யாக அமைக்கப்படவேண்டும். பங்கேற்பவர்கள் தங்கள் லேனுக்குள்தான் நீச்சலடிக்க வேண்டும். பக்கத்திலிருக்கும் லேனுக்குள் நுழைந்துவிட்டாலோ, பிற நீச்சல் வீரரின்மீது மோதிவிட்டாலோ அவர் அவுட்.

5. அந்தந்த ஊர்க்காரர்களுக்கு உள்ளூர் நீச்சல்குளம் நன்கு பழகியிருக்கும். இது வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் நீச்சல் வீரர்களுக்குப் பாதகம் அல்லவா?

இப்படி யாரும் குறை சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவே ஒரு சர்வதேச விதி இயற்றப்பட்டது. எந்த நீச்சல் குளமும் அதன் போட்டியாளர்களுக்கு போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே பயிற்சி பெறத் திறந்துவிடப்பட வேண்டும்.

6. நீச்சல் போட்டி எப்படித் தொடங்கு கிறது?

சர்வதேசப் பந்தயங்களில் அதிகபட்சம் எட்டுப் பேர்தான் ஒரே நேரத்தில் கலந்துகொள்வார்கள். ஒவ்வொரு லேனின் எதிர்ப்புறத்திலும் ஒரு மேடை இருக்கும். ரெஃபரி எனப்படும் நடுவர் முதல் சிக்னலைக் கொடுத்தவுடன் போட்டியாளர்கள் தங்களது நீச்சல் பாதைக்கு நேரெதிராக உள்ள இந்த மேடைக்குக் கீழே தயாராக நிற்க வேண்டும். அப்படி நிற்கும்போது தண்ணீருக்கு எதிர்ப்புறமாகப் பார்த்து நிற்க வேண்டும்.

பிறகு நடுவர் ‘டேக் யுவர் மார்க்ஸ்’ என்பார். உடனே விளையாட்டு வீரர்கள் அந்த மேடையின்மீது ஏறி நிற்க வேண்டும். எல்லாப் போட்டியாளர்களும் தயார்நிலையில் நின்றபிறகு ரெஃபரி விசில் கொடுப்பார். அப்படி விசில் கொடுத்த வுடன் நீரில் குதித்து நீச்சல் அடிக்க வேண்டியதுதான்.

விசில் கொடுப்பதற்கு முன்பாகவே யாராவது தண்ணீரில் குதித்துவிட்டால் அவர் கரையேற வேண்டும். அவர் குதித்த பிறகு விசில் கொடுக்கப்பட்டு பிறர் நீரில் குதித்துவிட்டால் அவர்களும் கரையேற வேண்டும். பிறகு புதிதாக மற்றொரு முறை போட்டி துவங்கப்பட்டு அதற்கு அடையாளமாக மறுபடி ஒருமுறை விசில் கொடுக்கப்படும்.

இரண்டாவது முறையும் யாராவது அதே போன்ற தவறை (அதாவது விசிலுக்கு முன்பே தண்ணீரில் குதிப்பது) செய்தால் அப்படிச் செய்தவர் போட்டியிலிருந்து விலக்கப்படுவார். மற்றவர்கள் போட்டியைத் தொடர வேண்டியதுதான்.

7. நான்கு அல்லது ஐந்தாவது லேனில் கலந்துகொள்வபவர்தான் பெரும்பாலும் வெற்றி அடைகிறார். ஏதாவது நியூமராலஜிதான் இதற்கு வழிசெய்கிறதா?

அதெல்லாம் இல்லை. சர்வதேச விதிகளின்படி எந்த ஒரு இறுதிப்போட்டியிலும் எட்டுப் பேர்தான் கலந்து கொள்ளலாம்.

ஆக, அரையிறுதிப்போட்டிகளிலிருந்து எட்டுப் பேர்தான் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந் தெடுக்கப்படுவார்கள். இறுதிச் சுற்றில் அவர்களைக் கீழ்க்கண்ட முறையில் கலந்து கொள்ளச் செய்வார்கள்.

அரையிறுதிச் சுற்றில் முதல் இரு இடங்களைப் பெற்றவர்களுக்கு நான்காவது மற்றும் ஐந்தாவது லேன்கள் ஒதுக்கப்படும். பிறருக்கு இதே வரிசையில் லேன்கள் ஒதுக்கப்பட, அரையிறுதியில் ஏழாவதாகவும் எட்டாவதாகவும் வந்தவர்களுக்கு இறுதிச் சுற்றில் முதல் மற்றும் எட்டாவது லேன்கள் (அதாவது இவர்கள் போட்டியிடும்போது ஒருபுறம் குளத்தின் சுவர் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும்) ஒதுக்கப் படும்.

அதாவது தலைசிறந்த நீச்சர் வீரர்கள் பெரும்பாலும் இறுதிச் சுற்றில் நான்காவது மற்றும் ஐந்தாவது லேனில்தான் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். எனவே, அவர்கள் தங்கத்தைத் தட்டிச் செல்வதில் வியப்பு எதுவும் இல்லையே?

8. உலகப் பந்தயங்கள் நடைபெறும் நீச்சல் குளங்களை அதிக நீளத்துக்கு எழுப்பவேண்டியிருக்கும் இல்லையா?

ஃப்ரீ ஸ்டைல் எனப்படும் பிரிவில் மட்டும்தான் பல்வேறு அதிக துாரங்களுக்கான நீச்சல் பந்தயங்கள் உண்டு. ஆண்கள் பிரிவில் 50, 100, 200, 400, 1500 மீட்டர் பந்தயங்கள் உண்டு. பெண்கள் பிரிவென்றால் 50, 100, 200, 400, 800 மீட்டர் பிரிவுகள். இவை அல்லாத வேறெந்தப் பிரிவும் சர்வதேசப் போட்டிகளில் இடம் பெறக் கூடாது.

ஃப்ரீ ஸ்டைல் அல்லாத பிற நீச்சல் வகை பிரிவுகளில் (பட்டர்ஃப்ளை, பேக்ஸ்ட்ரோக், ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் ஆகியவற்றில்) அதிகபட்சம் 200 மீட்டர்வரைதான் சர்வதேச அளவில் பந்தயம் நடத்த அனுமதி உண்டு.

நூறு, இருநூறு மீட்டர் ஓட்டப் பந்தயமொன்றில் இலக்குக் கோடு வரையப்பட்டு பங்குபெறுபவர்கள் அதைத் தாண்டவேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், பந்தயத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட தூரம் மிக அதிகம் என்றால் (800, 1600 மீட்டர்கள் என்பதுபோல்) ஒரே மைதானத்தை பல சுற்றுகள் ஓடவேண்டியிருக்கும் அல்லவா?

அதுபோலதான் நீச்சல் பந்தயங்களும். 200 மீட்டர் நீச்சல் பந்தயமென்றால் 50 மீட்டர் நீளமுள்ள நீச்சல் குளத்தை நான்குமுறை கடக்கவேண்டும். ஒவ்வொருமுறை திசைதிரும்பும்போதும் சுவரைக் கையால் தொடவேண்டியது அவசியம்.

9. போட்டி நடக்கும்போது பார்த்தால் இரண்டு மூன்றுபேர் ஒரே சமயத்தில் முதலில் கரையைத் தொட்டமாதிரி இருக்கிறது. வெற்றிபெற்றவர் யார் என்பதை எப்படிக் கணக்கிடு கிறார்கள்?

நீச்சல் போட்டியின் நேரத்தை வெகு துல்லியமாகக் கணக்கிடவேண்டியது மிக அவசியம். ஒவ்வொரு போட்டி யாளருக்கும் மூன்று டைம் கீப்பர்கள் நியமிக்கப்படுவார்கள். தங்கள் லேனில் நீச்சலடிப்பவர் குறிப்பிட்ட தூரத்தைக்கடக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறார் என்பதை இந்த மூவரும் தங்களிடம் இருக்கும் ஸ்டாப் வாட்ச்களின் உதவியின் மூலம் கணிப்பார்கள்.

ஆனால் அவர்களின் நேரங்கள் மாறுபட்டால், சராசரி நேரம் கணக்கெடுத்துக் கொள்ளப்படுவ தில்லை. அந்த மூவரில் இருவரின் நேரக்கணக்கு ஒத்துப்போனால் அதையே முடிவாகக் கொள்வார்கள். ஒவ்வொருவரின் கடிகாரமும் ஒவ்வொரு நேரத்தைக் காட்டினால்? இடைப்பட்டவரின் நேரம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளை சின்னத்திரையில் பார்த்தபோது இப்படி ஒவ்வொரு லேனுக்கும் மூன்று டைம்கீப்பர்களைப் பார்த்ததாகத் தெரியவில்லையே என்பவர்களுக்கு இதோ ஒரு குறிப்பு. இப்போதெல்லாம் அதுபோன்ற சர்வதேச நீச்சல் போட்டி களில் எலக்ட்ரானிக் கருவிகள் துல்லியமாக நேரத்தைக் கண்டு பிடிக்கின்றன. இறுதிக் கட்டத்தில் நீச்சல்வீரர் சுவரைத் தொட்டவுடன் தானாக அந்த நேரக்காட்டி நின்றுவிடும்.

10. எந்த வகை நீச்சல் பந்தயத்திலுமே பாதி தூரத்தில் ஒருவர் களைப்படைந்தோ அல்லது வேறுகாரணத்தினாலோ சட்டென்று ஒரு கணம் நீச்சல் குளத்தில் நீருக்குள் சென்றுவிட்டால் அவர் போட்டியில் தொடரும் வாய்ப்பை இழந்து விடுவாரா?

அப்படியல்ல. அவர்பாட்டுக்கு போட்டியைத் தொடரலாம். போட்டியின் போது குளத்தில் நடக்கக்கூடாது அவ்வளவுதான்.

11. கூடுதல் வேகத்தோடு நீச்சல் அடிக்க உதவும் வகையில் நீச்சல் வீரர் தன் உடலில் ஏதாவது கருவிகளைப் பொருத்திக்கொள்ள முடியுமா?

நீச்சல் பந்தயங்களில் கலந்து கொள்ளும்போது கையுறைகள்கூட அணியக் கூடாது. கண்களுக்குமட்டும் காகில்ஸ் அணிந்துகொள்ள அனுமதியுண்டு.

12. சக போட்டியாளரின் வெற்றி வாய்ப்பை கெடுக்கவேண்டும் என்பதற்காகவே ஒருவர் அவர் நீச்சல் அடிக்கும் பாதையில் குறுக்கே சென்று அவரது நீச்சல் வேகத்தை தடைசெய்துவிட்டால்?

இப்படி அழுகுணி ஆட்டம் ஆடினால் அப்படி ஆடியவர் அந்த போட்டியில் தொடர்ந்து ஆடும் தகுதியை இழந்து விடுவார். பாதிக்கப்பட்ட நீச்சல் வீரரை அடுத்த சுற்றுக்கு அனுப்பும் அதிகாரம் நடுவருக்கு உண்டு. அது இறுதிச்சுற்றாக இருந்தால் மீண்டும் ஒருமுறை அந்தப் போட்டியை நடத்தும் அதிகாரமும் அவருக்கு உண்டு.

13. மெட்லி என்றால்?

அதுவும் நீச்சல்தான். ஆனால், அது ஒரு தனிப்பட்ட நீச்சல் பிரிவல்ல. முன்பே நாம் குறிப்பிட்ட நான்கு வகை நீச்சல் வகைப் பிரிவுகளும் இணைந்த பிரிவு அது. அதாவது கடக்க வேண்டிய துாரம் நான்காகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவையும் ஒவ்வொரு வகை நீச்சல் மூலம் கடக்க வேண்டும்.

14. மெட்லி பந்தயத்தில் இந்த வரிசையில்தான் நீச்சல் அடிக்கவேண்டும் என்று விதிமுறைகள் உண்டா?

உண்டு. முதலில் பேக்ஸ்ட்ரோக், அடுத்து ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக், மூன்றாவதாக பட்டர்ஃப்ளை, நான்காவது சுற்றில் ஃப்ரீஸ்டைல் என்ற வரிசையில்தான் அடுத்தடுத்த சுற்றுகளில் நீச்சல் அடிக்க வேண்டும்.

15. நீச்சலில் ‘ரிலே ரேஸ்’ என்றால் என்ன?

ஃப்ரீஸ்டைலில் 4 ஙீ 100 மற்றும்4 ஙீ 200 மீட்டர் பந்தயங்கள் உண்டு. ஒவ்வொரு அணியிலும் நான்குபேர் கலந்துகொள்ள வேண்டும். உலகப் போட்டிகளாக இருந்தால் ஒரு அணியிலுள்ள நான்குபேரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

********************************************************************

நன்றி:- சு.வி

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++