தொகுப்பு

Archive for ஏப்ரல் 10, 2010

காலமெல்லாம் கல்யாணம் வாழ…


 
‘திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியான துணையாக இருப்பது’ (Marriage is not selecting the right person, but being the right person) என்று ஒரு பழமொழி உண்டு. ஆம்… பெற்றோர்களும், சுற்றத்தார்களும், நண்பர்களும் சூழ நின்று ஆசீர்வதித்து நடத்தி வைக்கும் திருமணத்தின் உண்மையான அர்த்தம், ஆண் – பெண் இருவரும் வாழ்ந்து காட்டுவதில்தான் இருக்கிறது!அப்படி நீங்களும் ஒரு ஆத்மார்த்த இணையாக, துணையாக இருக்க… தம்பதிகளுக்கும், தம்பதி ஆகப் போகிறவர்களுக்கும் இல்லற மந்திரம் போதிக்கிறது இந்தப் புத்தகம்!மந்திரங்கள் உங்கள் மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை நிரப்பட்டும்!

நிச்சயம் டு திருமணம்… ரொமான்டிக் ஹைவே!

இப்போதெல்லாம் நிச்சயத்தின்போதே சபையில் வைத்து பெண்ணுக்கு மொபைல் போனை பரிசாக வழங்குகிறார் மாப்பிள்ளை… முகூர்த்த நாள்வரை இருவரும் பரஸ்பரம் பேசி, பகிர்ந்து கொள்வதற்கு! பெரும்பாலான பெற்றோர்களும்கூட, தம் பிள்ளைகளின் இதுபோன்ற திருமணத்துக்கு முந்தைய பழக்கங்களுக்கு அலட்டிக்கொள்ளாமல் ‘க்ரீன் சிக்னல்’ காட்டிவிடுகின்றனர். எனவே, நிச்சயம் முடிந்த நாளிலிருந்து திருமண நாள் வரையிலான இந்தக் காலத்தை, ‘மண இணைவு’க்கு தங்களை மன ரீதியாக தயார்படுத்திக் கொள்ள மாப்பிள்ளை – பெண் இருவருமே பயன்படுத்திக்கொள்வது குட்!

// //

1. கற்பனையில் ஆஸ்திரேலியாவுக்குப் போய் தாராளமாக டூயட் பாடுங்கள். அதேசமயம், துணையின் வீட்டு உறவுகளோடு சந்தோஷமாக இருக்கும் பாச சீன்களையும் மனதில் ஓடவிடுங்கள். இது புதிய உறவுகளுடன் சுமுகமாவதற்கான மனப் பயிற்சியாக அமையும்.

2. வருங்கால துணையோடு பீச், கோயிலுக்குப் போவதில் தவறில்லை. அதேபோல அவர்கள் வீட்டுக்கும் ஒருமுறை விஜயம் செய்யுங்கள். கூச்சமாக இருக்கிறதா..? சரி, போனிலாவது மாமனார், மாமியார், நாத்தனார் என மற்ற உறவுகளோடு பேசிப் பழகுங்கள். அது திருமணம் முடிந்து நீங்கள் அந்த வீட்டில் கால் எடுத்து வைக்கும்போது, அவர்களுக்கும் உங்களுக்கும் இடையேயான அந்நியத்தைக் குறைத்திருக்கும்.

3. ஒருவேளை நீங்கள் அவர்களின் வீட்டுக்கு வருவது, பேசுவது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று அவர்கள் சொன்னாலோ, செய்கையால் உணர்த்தினாலோ ‘டல்’ ஆகாதீர்கள், அவர்களை ‘பழைய பஞ்சாங்கம்’ என நினைக்காதீர்கள். புன்னகையோடு ஏற்று சந்திப்பைத் தவிருங்கள்.

4. தயக்கத்தின் காரணமாகக்கூட துணையின் உறவுகள் ஆரம்பத்தில் உங்களுடன் ஒட்டாமல் இருக்கலாம். உடனே அவசரப்பட்டு அவர்களைப் பற்றி உங்களுக்குள் தீர்ப்பு எழுதி, அதே மன நிலையோடு அவர்களை அணுகாதீர்கள்.

5. நிச்சயதார்த்த பஜ்ஜி, சொஜ்ஜி ஆறும் முன்பே அறிவுரைகள் ஆரம்பித்துவிடும். எல்லாவற்றையும் கேட்டு திகிலாகாதீர்கள். எது சரி, எது தவறு என அமைதியாக யோசித்து சரியானதை ‘டிக்’ அடியுங்கள்.

6. ‘கைக்குள்ள போட்டுக்க… முறுக்கா இரு’ போன்ற பிறந்த வீட்டு உபதேசங்களை செவிப்பறையோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அந்த விதை, பின் பல பிரச்னைகளுக்கு வேராகிவிடும்.

7. துணையைப் பற்றிய எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே அதிகம் வளர்த்துக் கொள்ளாதீர்கள். முடிந்தவரை மனதை காலி பையாக வைத்துக் கொண்டு கிடைப்பதை அமைதியாகச் சேகரியுங்கள். பிடிக்காததை பிறகு தவிர்த்துவிடலாம்.

8. இந்தக் கால கட்டத்தில் திருமண முறிவு, கல்யாணத்தன்று தகராறு போன்ற நெகட்டிவ் செய்திகளைக் கேட்கவோ, படிக்கவோ சந்தர்ப்பம் வருவதுபோல் தெரிந்தால், கூடுமானவரை அவற்றைத் தவிர்த்துவிடுங்கள். நல்லவை மட்டுமே மனதுக்குள் போகட்டும்.

மேரேஜ் கவுன்சிலிங் அவசியமாகும் சூழல் இது!

பெண்களுக்கு பதினாறிலும், ஆண்களுக்கு இருபதிலும் என நம் முந்தைய தலைமுறை திருமணங்கள் முடித்து வைக்கப்பட்டபோது, அந்த வயதில் இருவருக்குமே அவரவர்க்கென பெரிய அளவில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் வளர்ந்திருக்கவில்லை. எனவே, நாணலாக வளைந்து அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பழகிக் கொண்டார்கள். ஆனால், இன்றைய சமூக, பொருளாதர மாற்றங்களால் பெண்கள் 26 வயதுக்கு மேலும், ஆண்கள் 29-35 வயதிலும்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் இருவருக்குமே சுயசிந்தனை, சுதந்திரம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் என்றெல்லாம் அவரவர்களுக்கென கேரக்டரை சமரசங்களின்றி அமைத்துக் கொள்கிறார்கள்.

அப்படி வெவ்வேறு துருவங்களாக இருக்கும் இருவர், மணவாழ்க்கையில் இணையும்போது முட்டி முளைக்கின்றன பிரச்னைகள். எனவே, மாலை சூடிக்கொள்ளும் முன்னர் அவர்களுக்கு திருமணம் பந்தம், வாழ்வியல் பற்றி ஆலோசனைகள் அவசியமாகிறது. அவற்றுள் சில இங்கே…

9. சாதாரண வேலை என்று நாம் நினைக்கும் எந்த வேலையுமே… பயிற்சிக்குப்பின்தான் சுலபமாக கைகூடும். அப்படியிருக்கும்போது ஆயிரங்காலத்துப் பயிர் திருமண பந்தத்தில் இணைய பயிற்சி இல்லாமல் எப்படி? குறிப்பாக மனதளவிலான பயிற்சிகள் அவசியம். அது சுயபயிற்சியாகவும் இருக்கலாம்… அனுபவம் வாய்ந்த பெரியோரின் வழிகாட்டுதல்களாகவும் இருக்கலாம். அல்லது குடும்பநல ஆலோசகர்களின் அறிவுரைகளாகவும் இருக்கலாம்.

10. துணையின் ‘ஆத்மார்த்த’ உறவாகிவிட வேண்டும் என்ற ஆசை சரிதான். ஆனால், திருமணம் நடந்த ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ அது நிகழ்ந்துவிடாது. அதற்கு அன்பு, நம்பிக்கை, பொறுமை, சகிப்புத்தன்மை, புரிதல் என பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. அவை நமக்குள் இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்வதும், இல்லாதவற்றை வளர்த்துக் கொள்வதும் முக்கியம்.

11. என்னதான் இருந்தாலும் உங்கள் பக்க உறவுகளோடு நீங்கள் இருப்பது போன்ற அந்நியோன்யத்துடன் துணையால் இருக்க முடியாது. அப்படி எதிர்பார்ப்பதும் தவறு. அதுபோன்ற விஷயங்களுக்கு மனதைப் பழக்கிக் கொள்ளுங்கள்.

12. நீங்கள் நெடுங்காலமாக பின்பற்றும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளும் சூழ்நிலையும் ஏற்படலாம். ‘அதெல்லாம் முடியாது’ என முரண்டு பிடிக்காமல், அட்லீஸ்ட் அதை தள்ளி வையுங்கள். தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்.

13. குறிப்பாக, உங்களுக்குத்தான் உயிர் தோழி-தோழன். உங்கள் துணைக்கல்ல. எனவே, அவர்களுக்கு நேற்றுவரை தந்த அதே முக்கியத்துவத்தை, நேரத்தை தர இயலாது என்பது உணருங்கள். ‘நான் கல்யாணமானாலும் மாறல’ என முறுக்காதீர்கள்.

14. குடும்ப வாழ்க்கையின் அடித்தளம் இரண்டு விஷயங்கள்… அன்பு, நம்பிக்கை. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றின் நூலிழை அறுந்தாலும் இன்னொன்றில் நூலிழை அதுவாகவே அறுந்துவிடும் என்பதால் எப்போதும் இவை இரண்டிலும் நேர்மையாக இருப்பது ஆரோக்கியமானது.

முதலிரவு… குழப்பங்களும் விளக்கங்களும்!

பொதுவாக திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் ஆண், பெண் இருவருக்குமே தாம்பத்யம் பற்றிய ஆர்வங்களும் குழப்பங்களும் இருக்கும். குறிப்பாக, முதலிரவு பற்றிய பல ‘மித்’கள் அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கும். அவற்றில் இருந்து தெளிவுபெற சில ஆலோசனைகள் இங்கே…

15. முதலிரவு என்றாலே பெரும்பாலான ஆண் – பெண் களிடையே தேவையில்லாத பயம் தொற்றிக்கொள்கிறது. சுயஇன்பம் கொள்வதால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்று போலி டாக்டர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள தவறான விழிப்பு உணர்வு, ஆண்களை அலைக்கழிக்கும். தாழ்வு மனப்பான்மை, பயம் கவ்விக் கொள்ளும். ஆனால், சுயஇன்பம் என்பதே கிட்டத்தட்ட இயற்கை சார்ந்த ஒரு விஷயம்தான். அந்தப் பழக்கம் பலருக்கும் இருக்கும். எனவே, அதை நினைத்தெல்லாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. சுயஇன்பத்துக்கும் ஆண்மைக் குறைவுக்கும் தொடர்பு இல்லை.

16. பெண்களைப் பொறுத்தவரை, ‘கன்னித்திரை கிழியாமல் இருப்பதுதான் கன்னி என்பதற்கான சான்று’ என்று ஒரு கதை பின்னப்பட்டுள்ளது. அதுவும் தவறான ஒரு கருத்துதான். ஏனெனில், சைக்கிள் ஓட்டுவது, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் பெண்களுக்கு கன்னித்திரை கிழிய வாய்ப்புள்ளது. எனவே, அதை வைத்து ‘கன்னி’ டெஸ்ட் செய்வது அபத்தம்.

17. முதலிரவின்போது ரத்தம் அதிகமாக வெளியேறும் என்று தோழிகள் சொல்லிக்கொடுக்கும் தவறான கருத்துக்களால் பெண்களுக்கு முதலிரவு பயம் தொற்றிக்கொள்கிறது. விளைவாக, முதலிரவில் கணவன் அருகில் வந்தாலே சிலர் பயத்தின் உச்சத்துக்கு போய் அலறி அரற்றி விடுகிறார்கள். இதுவும் ஒரு தவறான புரிதலேயாகும்.

18. முதலிரவின்போதே முழுமையான இன்பத்தை அனுபவித்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேண்டாம். பொதுவாக, திருமணமான ஒரு தம்பதி முழுமையான இன்பம் பெற வாரக்கணக்கில், மாதக்கணக்கில்கூட ஆகலாம் என்பதே மருத்துவ உண்மை.

19. முதலிரவு வேளையில் தம்பதி மனம் விட்டுப் பேசலாம். அன்றைய தினமே இன்பம் அனுபவிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. இருவருக்குள்ளும் இருக்கும் தயங்கங்கள் விலகும்வரை சில நாட்கள் காத்திருக்கலாம்.

20. தாம்பத்யம் என்பது பார்ட்னர்ஷிப். தங்களுடைய பார்ட்னரின் விருப்பத்தின் பேரிலேயே எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டும். மிரட்டி பணிய வைக்கக் கூடாது. தனக்குப் பிடித்ததை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும்.

21. ஆண்களுக்கு அவுட்டிங், பொழுதுபோக்குகள் பிடிப்பதுபோல் பெண்களுக்கு அன்பு பாராட்டுவது, ஆழமாக கருத்துப் பரிமாறுவது பிடிக்கும். எனவே, அன்பில்லாத தாம்பத்யத்தை எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை. அதேபோல, நெருக்கமாகப் பேசிவிட்டு உறவை தவிர்க்கும் பெண்ணின் மீதும் ஆணுக்கு வெறுப்பு ஏற்படுவது இயல்பான விஷயமாகும்.

22. திருமணத்துக்குப் பின் செக்ஸ் சம்பந்தமான எந்த சந்தேகமாக, குழப்பமாக, குறையாக இருந்தாலும் தயங்காமல் தக்க மருத்துவரை அணுகி ஆலோசனை கேளுங்கள். அது, இடைவெளியை சீக்கிரமே இணக்கமாக்கும்.

திருமண உறவு என்றும் இனிக்க..!

‘ஆசை அறுபது நாள்… மோகம் முப்பது நாள்’ என்ற மொழிகளையெல்லாம் பொய்த்துப் போக வைக்கும் மந்திரம்… புரிதல்! ‘கணவனென்றால் இப்படித்தான்…’, ‘மனைவியென்றால் இவ்வளவுதான்…’ என்ற அசட்டு வரையறைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, பரஸ்பர புரிதல், பகிர்தல், மரியாதை, பொறுமையை தூர் வாருங்கள். ஆயுள் வரை ஊறும் அன்பு! அதற்கு சில வழிகள்…

23. கணவன் – மனைவி இருவரில் யார் நல்ல விஷயங்களை செய்தாலும் மனம் திறந்து பாராட்டுங்கள். அது தரும் உற்சாகம்… அளவிட முடியாதது.

24. உங்கள் துணையின் பிறந்த நாள், உங்கள் திருமண நாள் போன்ற முக்கியமான நாட்களை நினைவில் வைத்து வாழ்த்தி, சிறு பரிசாவது கொடுங்கள்… அட்லீஸ்ட் ஒரு ஆசை முத்தம்… இனிக்கும் வாழ்க்கை.

25. அவசியமான நேரங்களில் ‘தேங்க்ஸ் பா…’, ‘ஸாரிமா செல்லம்…’ போன்ற வார்த்தைகளில் எல்லாம் பேசிப் பாருங்கள்… அதற்கிருக்கும் மந்திர சக்தி பிறகு புரியும்.

26. எந்த முக்கியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் இருவரும் உட்கார்ந்து ஆலோசித்து முடிவெடுத்தால் வாழ்க்கைப் பாதை ‘ஈஸி’யாக இருக்கும்.

27. உங்கள் வீட்டாரிடமும், நண்பர்களிடம் உங்கள் துணை பற்றிய அற்புதமான விஷயங்களைக் கூறுங்கள். அது அவர்களுக்குத் தெரியவரும்போது தங்களின் பெருமையைவிட உங்களின் அன்பை உணர்ந்து உச்சி குளிர்ந்துபோவார்கள்.

28. கணவன்மார்கள் பெட் ஸ்ப்ரெட் மாற்றுவது, வீட்டை ஒழுங்குபடுத்துவது என்றும், மனைவிமார்கள் கரன்ட் பில் கட்டுவது, பைக் துடைத்து வைப்பது என்றும் ஒருவரின் வேலைகளை மற்றொருவர் முடிந்தபோதாவது பகிர்ந்து செய்யும்போதுதான், ஒருவரின் வேலை பளு இன்னொருவருக்குத் தெரியும். அதை உணரும் தருணம் உங்களவர் மேலான அக்கறையும் மதிப்பும் அதிகமாகும்.

29. மனைவியின் மாதவிலக்கு காலத்தில் கணவர் அவருக்கு உதவியாக, ஆதரவாக, அனுசரணையாக இருந்து பாருங்கள். மாதத்தின் எல்லா நாட்களும் வீட்டில் பண்டிகைதான்.

30. உங்கள் துணையின் அறிவை, அனுபவத்தை குறைவாக, நெகடிவ்வாக மதிப்பிடாமல் அவரின் அறிவுக்கு மரியாதை கொடுத்தால்… மாண்புமிகு துணை ஆவீர்கள்.

31. துணை ஒரு தவறு செய்து விட்டால், ‘எல்லாம் போச்சு’ என்று திரும்ப திரும்ப குத்திக் காட்டி மனதை ரணப்படுத்தாமல் மென்மையாக சொல்லிப் பாருங்களேன்… மென்மைதான் காதலுக்குரியது என்கிறது ஆராய்ச்சி.

32. அதேபோல சிறு பிரச்னை என்றாலும் உடனே ஊதி பெரிதுபடுத்தாமல் மௌனமாக இருந்து விடுங்கள். மனதளவில் ரிலாக்ஸானதும் இருவரும் பிரச்னைக்கான காரணத்தை மனம் திறந்து பேசுங்கள். ‘உன்னால்தான் பிரச்னையே’ என்று ஒருவர் மேல் ஒருவர் பழி சுமத்தாமல் இருந்தால், தவறு செய்தவர் மனம் வருந்தி மீண்டும் அதைச் செய்யாமல் இருப்பார். அதற்கு வாய்ப்பு கொடுங்கள்.

33. ஒருவரைப் பற்றி ஒருவர் மற்றவர்கள் முன்பாக கடுமையாக விமர்சிக்காதீர்கள். உங்கள் துணையின் குறைகளை ஒருபோதும் ஊருக்கெல்லாம் தம்பட்டம் அடிக்காதீர்கள். யாரிடமும் அவரை விட்டுக் கொடுக்காதீர்கள். இவையெல்லாம் உறவை வலுவிழக்கச் செய்பவை.

34. உங்கள் துணையிடம் இன்னொருவரைப் பற்றி பெருமையாகச் சொல்லாதீர்கள். ‘அவர் மீசை என்ன அழகா இருக்கு…’, ‘அவளப் பாரு எவ்ளோ ஸ்லிம்மா இருக்கறா…’ போன்ற வசனங்கள், தெரிந்தே விபத்துக்களை உருவாக்குவதற்குச் சமமானவை.

தூண்கள் அவசியம்!

குடும்பத்தை தாங்கிப்பிடிக்க கணவன்-மனைவி என்கிற இரண்டு பில்லர்கள் (தூண்கள்) முக்கியம். அந்தப் பில்லர்களைத் தாங்கிப் பிடிக்க வேறு சில பில்லர்களும் முக்கியம்! அவை…

35. இரு குடும்பங்களில் உள்ள உறவுகள் யார் யார், அவர்களுக்கான முக்கியத்துவம் என்ன, அவர்களை எப்படி நடத்த வேண்டும், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற ‘வீட்டுப்பாடம்’ தெரிந்து விட்டால் ‘வாழ்க்கை கல்வி’ ஈஸியோ ஈஸி! – இது ஃபேமிலி பில்லர்.

36. பொதுவாக தம்பதிக்குள் பிரச்னை ஆரம்பிக்கும் இடம், பணம். வீட்டில் கணவன், மனைவி இருவரும் சம்பாதிக்கிறார்கள் எனில் வாங்கும் சம்பளத்தை யார், யாரிடம் கொடுப்பது, வீட்டு செலவு என்ன, சேமிப்பு என்ன, அக்கா, தங்கை கல்யாணச் செலவு, படிப்பு செலவு என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொண்டால் பொறுப்புணர்வு தானாக வரும்.

கணவர், ‘இது என் குடும்ப மேட்டர், உனக்கெதுக்கு?’ என்ற கேள்வி எழுப்பினால், அதுவரை ‘கோடு’ போல இருந்த இடைவெளி ‘ரோடா’கும். அதேபோல, கணவரின் பொருளாதார விஷயங்களை ‘டேக் ஓவர்’ செய்ய நினைத்தால், அது ‘டாமினேட் பண்ணுகிறாளோ’ என்ற நினைப்பை உருவாக்கும். ஆகையால் பண விஷயத்தில் இருவருக்குள்ளும் தேவை புரிதலும், புத்திசாலித்தனமும். – இது ஃபைனான்ஷியல் பில்லர்!

37. கணவன் – மனைவி இருவருக்கும் தனித்தனியே ஆசைகள், விருப்பங்கள் இருக்கும். ஒரு சினிமாவுக்குப் போகிறீர்கள் என்றால் ஒருவர் ‘விஜய் படம்தான்…’ என்றும், இன்னொருவர் ‘தமன்னா படம்தான்’ என்றும் இழுத்தால்… பிரச்னைதான் நீளும். ‘இந்த முறை விஜய், அடுத்த முறை தமன்னா’ என்று பிளான் செய்துவிட்டால் நோ பிராப்ளம்! – இது சோஷியல் பில்லர்!

38. ‘மனுஷன் வீட்டுக்குள்ள நுழையும்போதே மூஞ்சிய தூக்கி வச்சிருக்கணுமா?’ என்ற கேள்வியை மாற்றி, ‘ஏம்மா இப்படி டல்லா இருக்க… உடம்பு சரியில்லயா…’ என்ற கேட்டுப் பாருங்கள்… மூடும், வீடும் சந்தோஷமாகும்! – இது எமோஷனல் பில்லர்.

39. வீட்டுப் பிரச்னைகளை தாம்பத்யத்தில் எதிரொலிக்காமல், பிரச்னைகளை சுமுகமாக்கும் சாவியாக தாம்பத்யத்தை கொண்டாடினால், இளமை இனிக்கும்! – இது செக்ஸ§வல் பில்லர்!

முதல் குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா..?!

திருமணமான இளம் தம்பதிகள் வாழ்க்கையை கொஞ்சம் ‘என்ஜாய்’ பண்ணுவோம் என்றோ, குடும்ப பொருளாதாரக் காரணங்களுக்காகவோ முதல் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போட நினைப்பார்கள். அவர்களுக்கான ஆலோசனைகள் இங்கே…

40. ‘இன்னும் ஒரு வருடம் கழித்து குழந்தை பெற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை…’ என்று உடலளவில் ஃபிட்டாக இருப்பவர்கள் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடலாம். ஆனால், ‘இப்போதே பெற்றுக் கொண்டால்தான் நல்லது…’ என்று மருத்துவர்களே பரிந்துரைக்கும் உடல் நிலையில், வயதில் இருப்பவர்கள், காலம் தாழ்த்தாமல் குழந்தை பெற்றுக்கொள்வதே ஆலோசனைக்குரியது.

41. மாதவிலக்கு சீரில்லாதவர்கள், ஹைபர்டென்ஷன், ஹார்மோன் பிரச்னை உள்ளவர்கள், வேறு உடல் உபாதைகளுக்காக ரெகுலராக மாத்திரை சாப்பிடுபவர்கள்… இவர்கள் எல்லாம் கண்டிப்பாக முதல் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடக்கூடாது என்கிறது மருத்துவம்.

42. ‘குழந்தை இப்போது வேண்டாம்’ என்பது கணவன், மனைவி இருவரின் ஒருமித்த கருத்தாகவும் இருக்க வேண்டியது அவசியம். கூடவே, அது உங்கள் குடும்ப மூத்தவர்களையும் சங்கடப்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். இந்த முடிவைப் பற்றிய உங்களின் நியாயமான காரணங்களை அவர்களுக்கும் புரிய வைத்துவிடுவது நல்லது. இல்லையெனில், அவர்களின் புலம்பலைத் தவிர்க்க முடியாதுதான்.

43. ‘இப்ப குழந்தை வேண்டாம்பா’ என்று நீங்கள் தீர்மானித்தபின் கர்ப்பத் தடை சமாசாரங்களுக்கு மாத்திரைகளை வாங்கி விழுங்கவோ, ‘காண்டம்’ யூஸ் பண்ணவோ கூடாது. கண்டிப்பாக ஒரு மகளிர் நல மருத்துவரை அணுகி ‘க்ளினிக்கல் செக்கப்’ செய்த பிறகு, அவரின் ஆலோசனைப்படி செயல்படுவதே நல்லது.

44. அதிகபட்சமாக, ஒரு வருடம் வரை குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடலாம். அதன் பிறகும் மாத்திரை பயன்படுத்துவது நல்லதல்ல.

புகுந்த வீட்டாரின் அன்பை வெல்ல..!

திருமணம்… ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மட்டும் நடப்பதில்லை. வெவ்வேறு பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் கொண்ட இரு குடும்பங்களுக்கு இடையில் ஒரு புது உறவு மலர்கிறது. கணவன் தவிர… மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தனார், மச்சினர், ஓரகத்தி என சுற்றமும் சூழமுமாக இருக்கும் இந்த உறவுகளுடன் இணைந்து, இயைந்து செல்லும்போதுதான் துணையுடனான தாம்பத்யம் வலுவாகும் என்பதை திருமணம், குடும்பம் என்கிற சமூக அமைப்பு உருவான காலத்திலிருந்து நம் மூத்தோர்கள் உணர்த்துகிறார்கள். இது ஆணுக்கும் பொருந்தும். ஆம்… கண்டிப்பாக!

மாமனார், மாமியார் உறவு:

45. உங்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைய எல்லா விதங்களிலும் காரணமானவர்கள் இவர்கள். உங்கள் துணையை நல்லவர்களாக, படித்தவர்களாக, சம்பாதிப்பவர்களாக, பண்புள்ளவர்களாக உருவாக்கியவர்களுக்கு நம் அன்பைக் கொடுப்பதில் தயக்கம், பாரபட்சத்துக்கெல்லாம் அவசியம் என்ன? அவர்கள் உங்களை இரண்டாம் முறையாக பெற்றவர்கள் என்று நினைத்து செயல்பட்டுப் பாருங்கள்… வாழ்க்கை வசந்தமாகும்.

46. புகுந்த வீட்டில் உள்ளவர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்கள், உறவுப் பழக்க வழக்கங்கள் என்று ஒவ்வொன்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டு அதை பின்பற்றினால் ‘செல்ல மருமகள்’ ஆவீர்கள் சீக்கிரமாகவே.

47. பிறந்த வீட்டு மனிதர்களைப் பற்றி மட்டுமே பெருமை பாடாமல், மாமனார், மாமியாரையும் உறவு, நட்பு வட்டங்களிடம் பாராட்டி பேசிப் பாருங்கள். அதே பாராட்டு உங்களுக்கும் குவியும்.

48. சமையல், வீட்டு நிர்வாகம் எல்லாம் உடனே தன் கைக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்காமல் பல வருடங்களாக ‘மேலாண்மை’ செய்து கொண்டிருக்கும் மாமியாருக்கு ‘சப்போர்டிவ் சப்ஆர்டினேட்’டாக இருந்து உதவுங்கள். வாழ்வியல் சூட்சமங்களையும், ‘டெக்னிக்’களையும் அழகாகச் சொல்லித் தருவார் அவர்.

49. பண்டிகை நாள், கிழமைகளில் மாமனார், மாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்கினால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். மனமார வாழ்த்துவார்கள். பாஸிட்டிவ் எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு என்கிறது ஆராய்ச்சி.

50. வெளியே எங்கே போனாலும் ‘இங்கு போறோம் அத்தை… இத்தனை மணிக்கு வந்துடுவோம்…’ என்ற தகவலை சொல்லி விட்டுப் போங்கள். ‘எப்படி பொறுப்பா புள்ளைய வளர்த்திருக்காங்க’ என்று பெருமை உங்கள் பெற்றோரைப் போய்ச் சேரும்.

51. அதேபோல, உங்கள் துணையுடன் மட்டும் ஷாப்பிங், கோயில், சினிமா என்று போகாமல் அவ்வப்போது மாமனார், மாமியாருடனும் சென்று வாருங்கள். ‘எங்க மருமக மாதிரி உலகத்துல உண்டா’ என்று கொண்டாடுவார்கள். ஆம்! அவர்கள் அன்புக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்கும் முதிய உயிர்கள்தான் என்பதை உணர்ந்து கொண்டால், ரம்மியமாகும் வாழ்க்கை.

நாத்தனாருடனான உறவு:

52. புகுந்த வீட்டுக்குள் நுழையும்போதே ‘நாத்தனார்’ என்றாலே ‘வில்லி’தான் என்ற நெகடிவ் இமேஜுடன் நுழையாமல், ‘என் வயதுக்கேற்ற தோழி, என் ரசனைகளை, ஆசைகளை அவளிடமும் பகிர்ந்து கொள்ள முடியும்’ என்ற ‘பாஸிட்டிவ்’ எண்ணத்துடன் அடியெடுத்து வையுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் சந்தோஷம் நிலைக்கும்.

53. நாத்தனார்… கல்லூரி செல்பவராகவோ… வேலைக்குப் போகிறவராகவோ… இருந்தால், அவருக்கான ஆடைத் தேர்வு, சாப்பாடு, அழகு குறிப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். ‘எங்க அண்ணி ரொம்ப ஸ்மார்ட்’ என்று தன் நண்பர்களிடம் உங்களை கொண்டாடுமளவுக்கு இறுகிவிடும் உங்கள் பிணைப்பு.

54. அவருக்குப் பிடித்த உடை, நகை உங்களிடம் இருந்தால் ‘ஒருமுறை போட்டுத்தான் பாரேன்’ என்று கொடுங்கள். ‘அண்ணி என் மேல ரொம்ப கேரிங்…’ என்று அவர் உணர்ந்துவிட்டால், அதே அக்கறையை அவர் உங்களுக்குத் திருப்பி அளிப்பார்.

55. அண்ணனின் மனைவி என்ற உரிமையில் ‘டீஸ்’ பண்ணுகிறேன் என்று வார்த்தைகளால் வம்புக்கிழுத்தால் டென்ஷனாவதைவிட ரசித்து விடுங்கள். இருவருக்குமிடையில் நட்பு பூக்கும்.

56. ‘என் அண்ணன் வீரர், தீரர்’ என்று உங்களவரைப் புகழ்ந்தால் எரிச்சலடையாதீர்கள். உங்களைவிட பல வருடங்கள் உங்கள் கணவர் அருகில் இருந்தவர் அவர். அவருக்கும் உங்களவரைப் பற்றி அதிகம் தெரியும் என்பதை நிச்சயம் புரிந்துக்கொள்ளத்தான் வேண்டும்.

57. திருமணமான நாத்தனார் எனில், அவர் விடுமுறை, பண்டிகை என்று பிள்ளைகளுடன் தன் புகுந்த வீட்டுக்கு வரும் சமயங்களில் முறைத்துக்கொண்டு, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரியாதீர்கள். மனதில் எந்தக் கசப்பும் இல்லாமல் அவர்களை உபசரித்து அனுப்புங்கள். அன்பு விருட்சமாகும். அன்பு மட்டுமே விருட்சமாகும்.

கொழுந்தனார், ஓரகத்தி உறவு:

58. வீட்டில் செல்லப்பிள்ளையாக இவர் இருந்தால், மற்றவர்கள் அவருக்கு அதிக சலுகை காட்டினால் அதை உடனே கண்டிக்காதீர்கள். ‘என்னடா வந்தவுடனே ரூல்ஸ் பேசுறாங்க’ என்று உங்கள் மேல் எரிச்சல்தான் வரும்.

59. அவருடைய நண்பர்கள் யார், என்ன செய்கிறார்கள் என்பதை ‘உளவாளி’யாகத் தெரிந்து கொள்ளாமல், ‘நட்பாக’த் தெரிந்து கொள்ளுங்கள்.

60. ‘உங்க தம்பி மாடி வீட்டுப் பொண்ணு பின்னாடி சுத்தறாரு’ என்று கணவரிடம் காட்டமாகப் போட்டுக் கொடுக்காதீர்கள், வீட்டாரின் முன் கடை விரிக்காதீர்கள். அது குழப்பத்தைதான் உற்பத்தி செய்யும். மாறாக, ‘தம்பி, படிக்கிற வயசுல படிக்கிற வேலையைப் பார்ப்போம். பின்னாடி நானே உனக்கு நல்ல பொண்ணு பார்த்து தரேன்’ என பக்குவமாகப் பேசுங்கள்.

61. கூட்டுக் குடும்பமாக வாழாவிட்டாலும் தூரத்தில் இருக்கும் ஓரகத்தியுடன் அடிக்கடி போனிலாவது கூப்பிட்டு, ‘அக்கா… எப்படி இருக்கீங்க… குழந்தைங்க என்ன பண்றாங்க’ என்று நலம் விசாரியுங்கள். வார்த்தைகளில்தான் வாழ்க்கை பரந்தும் குறுகியும் இருக்கிறது.

62. நாள், கிழமைகளில் அவர்கள் வீட்டுக்குப் போய் வாருங்கள். போகும்போது குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிப் செல்லுங்கள். மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

63. முக்கியமான விஷயங்களில் அவர்களிடமும் ‘ஒருவார்த்தை’ கேட்டு செய்யுங்கள். இருபக்கமும் மரியாதையும், உறவும் ஒருசேர வளரும்.

64. அவர்கள் திருமண நாள், பிறந்தநாள், குழந்தைகள் பிறந்த நாளுக்கு மறக்காமல் வாழ்த்துச் சொல்லுங்கள். முடிந்தால் ஒரு சின்ன பரிசாவது கொடுங்கள். ‘என் கோ-சிஸ்டர்தான் கிரேட்’ என்பார்கள்.

கல்யாண செலவுகள்… கவலை வேண்டாம்!

இந்த செஷன் பெற்றோர்களுக்கு! பிள்ளைகளின் திருமண சமயத்தில் செலவுகள் கழுத்தை நெரிக்கும் என்பது பலரும் அறிந்ததுதான். ஆனால், திட்டமிட்டு செயல்பட்டால்… அந்தச் செலவுகள்கூட தூசுதான். எப்படி திட்டமிடுவது?!

65. பெண் குழந்தை பிறந்தது முதலே அதற்கு நகை சேர்க்கத் துவங்கிவிடுவது கெட்டிக்காரத்தனம். தவறியவர்கள், குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவாவது நகைகளைச் சேமிக்கத் துவங்குங்கள்.

66. நகை சேமிக்க நினைப்பவர்கள் நகையாக வாங்காமல் தற்போது ‘பேப்பர் தங்கம்’ என்று சொல்லப்படும் ‘கோல்ட் ஈ.டி.எஃப்’ வாங்கலாம்.

67. அதென்ன கோல்ட் ஈ.டி.எஃப்? கோல்ட் ஈ.டி.எஃப். என்பது ‘ஆன்லைனில்’ தங்கம் வாங்குவது. ஒரு நிறுவனத்தின் ஷேர் வாங்குவதைப் போல்தான் இதுவும். இதில் நம்மால் தங்கத்தை கண்ணால் பார்க்க முடியாது. தங்கம் இன்றைக்கு 1,650 ரூபாயில் இருக்கிறது என்றால், கோல்ட் இ.டி.எஃப்-ஐ அந்த விலையில் ‘ஆன்லைனில்’ வாங்கிக் கொள்ளலாம். இதில் செய்கூலி, சேதாரம் எல்லாம் கிடையாது. தங்கத்துக்கு மட்டுமே விலை. அதுவும் 24 கேரட் சுத்த தங்கம்… மாதந்தோறும் பணம் கிடைக்கும்போதெல்லாம் கோல்ட் ஈ.டி.எஃப். வாங்கி வைத்துக் கொள்ளவும்.

68. வாங்கிய கோல்ட் ஈ.டி.எஃப்-களை தேவைப்படும்போது அன்றைய மார்க்கெட் விலைக்கே ஆன்லைனில் விற்றுக் கொள்ளலாம். எந்தக் கழிவும் கிடையாது. பணமாகவே கிடைக்கும். அப்போது இருக்கும் ஃபேஷனுக்கு தகுந்தவாறு நகை வாங்கிக் கொள்ளலாம்.

69. திருமணத்துக்கு என்று சில வங்கிகள் கடன் கொடுக்கின்றன. இது தனிநபர் கடன் போல்தான். பெரும்பாலும் இதை வாங்காமல் இருப்பது நல்லது. காரணம், வட்டி கூடுதலாக இருக்கும்.

70. திருமணக் கடன் என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு கூடுதல் சுமை. அதைத் தவிர்க்க, திருமணத்துக்கு சில ஆண்டுகள் முன்பாகவே திட்டுமிட்டுச் சேமிக்கப் பழக வேண்டும்.

71. அந்தச் சேமிப்பு, முதலீடாக இருப்பது இன்னும் பயன் தரும். உதாரணமாக, இன்றைய தேதியில் ஒரு திருமணத்துக்கான எஸ்டிமேட் 5 லட்ச ரூபாய் என்றால், அதுவே ஐந்து ஆண்டுகள் கழித்து 6% பணவீக்க கணக்குப்படி 6,69,113 ரூபாய் தேவைப்படும்.

72. தற்போது இருக்கும் ஏதாவது சிறந்த ‘ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்’டில் மாதந்தோறும் 6,955 ரூபாய் முதலீடு செய்து வந்தால், 18 சதவிகிதம் வட்டிக்கு கணக்கிட்டால், 6,69,113 ரூபாய் கிடைக்கும். திருமணச் செலவுகளுக்கு அப்போது கடன் வாங்காமல் சமாளித்துக் கொள்ளலாம்.

73. கூடுதலாக பணம் வேண்டும் என்று நினைப்பவர்கள், அதற்கு ஏற்றாற்போல முதலீட்டை அதிகப்படுத்தலாம். முதலீட்டுத் திட்டங்களையும் தேர்ந்தெடுக்கலாம்.

திருமண சட்டங்கள்!

திருமணம் எனும் பந்தத்தை உருவாக்கி, அதை இன்றளவும் பெரிய சிக்கல்கள் இல்லாமல் நகர்த்திக் கொண்டிருக்கும் பாரம்பரியம் மிக்க நாடுகளில்… முதன்மையானது இந்தியா. இதற்கு சட்டரீதியிலான பாதுகாப்பும் இங்கே அதிகம். திருமணத்துக்கு உரிய தகுதிகளையும் சட்டம் நிர்ணயித்திருக்கிறது.

74. முழுமையாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருப்பவர்களால் திருமணத்துக்கு ஒப்புதல் தர இயலாது என்பதால், அவர்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது.

75. திருமண ஒப்புதல் தர இயன்ற போதிலும்… மனநிலை பாதிக்கப்பட்டவராகவும், உறவில் ஈடுபடமுடியாதவராகவும் இருந்தால் அவருக்கு, திருமணம் செய்துகொள்ள தகுதி இல்லை.

76. அடிக்கடி மனநிலை பாதிப்பு, வலிப்பு நோய் இருந்தால் அவர்களும் திருமணத்துக்கு தகுதியற்றவர்களே.

77. மதங்களுக்கு ஏற்றவாறு (இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள்) என்று தனித்தனி சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. அதேசமயம், ‘இந்து திருமணம்’ என்று சட்டம் குறிப்பிடும் எல்லாமும்… புத்த, ஜெயின், சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும். சிறப்புத் திருமணச் சட்டம் என்ற ஒன்று இருக்கிறது. சுயமரியாதைத் திருமணங்கள் மற்றும் கலப்புத் திருமணங்கள் இதன் கீழ்வரும்.

78 இந்திய மற்றும் அயல்நாடுகளில் வசிக்கும் அனைத்து இந்துக்களுமே ‘இந்து திருமணச் சட்டம்’ என்ற வரம்புக்குள் அடங்குவார்கள்.

79. சுயமரியாதை திருமணங்கள் 1967-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் சட்ட அங்கீகாரம் பெற்றுள்ளன.

80. தற்போது திருமணங்கள் அனைத்தும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். முதன் முதல் திருமணம் என்றால்… ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் முடிந்திருக்க வேண்டும். இருவரும் மணமாகாதவராக இருக்க வேண்டும். மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடாது. அண்ணன், தங்கை போன்ற உறவு முறைகளாக இருக்கக்கூடாது (இந்து திருமணச் சட்டப்படி).

81. பதிவுக்கு சில சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப் படவேண்டியது அவசியம். வயதை நிரூபிக்க பள்ளிக்கூட சான்றிதழ், பாஸ்போர்ட், பிறந்தநாள் சான்றிதழ்… இவற்றில் ஒன்றை தரலாம். இத்தகைய சான்றிதழ்களுக்கு வாய்ப்பில்லாதவர்கள், நீதிமன்றம் மூலம் பெறப்படும் ஆவணத்தை சான்றாக அளிக்கலாம். வசிப்பிட சான்றிதழாக… ஓரிடத்தில் குறைந்தபட்சம் முப்பது நாட்கள் தங்கி இருந்ததற்கான சான்று தரவேண்டும்.

82. கிறிஸ்தவர், இஸ்லாமியர்களின் திருமணம் அன்றைய தினமே சம்பந்தபட்ட மத குருமார்களால் பதிவு செய்யப்படுகிறது. எனவே, அரசாங்க திருமணப் பதிவுக்கு அந்தச் சான்றிதழை கொண்டு செல்ல வேண்டியது அவசியம். அதேபோல, இந்துக்களின் திருமணம் கோயிலில் நடைபெற்றால் அதற்கான ஆவணம் அல்லது திருமண அழைப்பிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

83. பொதுவாக… திருமணம் முடிந்த எத்தனை வருடங்களுக்குப் பிறகும் திருமணத்தை பதிவு செய்யலாம் என்று இருந்தது. தற்போது, ‘திருமணம் முடிந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால், அது குற்றம்’ என்று தமிழ்நாடு திருமணச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, புதிதாக திருமணம் செய்பவர்கள் தாமதிக்க வேண்டாம்.

84. ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள், இரண்டாவது திருமணத்தை பதிவு செய்ய, ‘சிறப்புத் திருமணச் சட்டம் 1954’ படி கணவன்- மனைவி இறந்ததற்கான அல்லது விவாகரத்து ஆனதற்கான ஆவணத்தை கட்டாயம் தர வேண்டும்.

85. திருமணத்தைப் பதிவு செய்ய சாட்சிகளை அழைத்துச் செல்ல வேண்டும். இந்து திருமணச் சட்டத்தின்படி பதிவு செய்யப்படும் திருமணத்துக்கு இரண்டு சாட்சிகளும், சிறப்புத் திருமணச் சட்டப்படி பதிவு செய்யப்படும் திருமணத்துக்கு மூன்று சாட்சிகளும் அவசியம்.

86. உங்களின் திருமணம் குறித்த தகவல் திருமணப் பதிவு அலுவலகத்தின் நோட்டீஸ் போர்டில், ‘யாரவது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் தெரிவிக்கலாம்’ என்ற செய்தியுடன் 30 நாட்கள் வைக்கப்படும்.

87. அந்த முப்பது நாட்களில் யாராவது ‘இவர் என் கணவர்- மனைவி’ என்று ஆட்சேபனை தெரிவித்து, அதற்கான சான்றிதழை அளித்தால் அந்த திருமணம் செல்லாது. ஆட்சேபனை வராத பட்சத்தில் முப்பது நாட்களுக்குப் பிறகு சென்று சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

88. என்னதான் முதல் மனைவி-முதல் கணவன் அனுமதி பெற்ற அத்தாட்சி இருந்தாலும், அவர் உயிரோடு இருந்தால், இரண்டாவது திருமணம் செல்லாது. அத்தகைய திருமணத்தை பதிவு செய்ய முடியாது.

திருமண பந்தம் நீடித்து நிலைபெற…

இப்போதெல்லாம் ‘முணுக்’கென்றால்… விவாகரத்தில் வந்து நிற்கின்றன பல திருமணங்கள். அதிலும் சமீபகாலமாக விவகாரத்து செய்துகொள்வோரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. பரஸ்பர புரிதலின்மையின் உச்சகட்டம்தான் இது. வெவ்வேறு குணாதியங்களைக் கொண்ட இருவர் திருமணம் தொடங்கி மரணம் வரை இணைந்து ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவித்து வாழ்வதில்தான் அந்தத் திருமணத்தின் வெற்றி உள்ளது. அந்த வெற்றிக்கு…

89. ‘என்னோட பலமே இவங்கதான்’ என்று சொல்லுமளவுக்கு எல்லா நேரத்திலும் உறுதுணையாக இருங்கள். குறிப்பாக, அவர் ஏதேனும் தோல்வியில் துவண்டிருக்கும் நேரத்தில் வார்த்தை கணைகளை வீசாமல் அன்பு சாமரத்தை வீசுங்கள். இல்லறம்… ‘சாம்ராஜ்ய’மாகும்.

90. ‘இந்த நிமிடம் வாழுங்கள்’ – இந்த வாழ்க்கைத் தத்துவம், நீளும் நாட்களை இனிப்பாக்கும். கடந்தகால மோசமான வடுக்களை மீண்டும் சுரண்டிப் பார்ப்பதால் பலனில்லைதானே!

91. எதையும் முழு மனோதோடு 100 சதவிகிதம் செய்யுங்கள். திரும்ப 10 சதவிகிதம் கிடைத்தால் போதும் என்று சமாதானம் ஆகுங்கள். இந்த மனோபாவம், வாழ்க்கைப் பாதையில் பூக்களை மட்டுமே தூவும்.

92. ‘தாம்பத்யம்’ இரு உள்ளங்களையும் எப்போதும் நெருக்கமாக வைத்திருக்கும் மெல்லிய அழகிய சங்கிலி. அந்தச் சங்கிலியை முடிந்தவரை புதிது புதிதாக கோத்திருங்கள். உணர்வுகளை பகிந்து கொள்வது போல் ‘ரகசிய’ ஆசைகளையும் இருவரும் பகிர்ந்து கொண்டால்… மஞ்சம் சொர்க்கம்!

93. கோபம், எரிச்சல், பழிவாங்குதல், குரோதம், விரோதம் – இந்த ‘எனர்ஜி டெஸ்ட்ரக்டர்’களை படுக்கைக்குள் கண்டிப்பாக அனுமதிக்காதீர்கள். கதவை மூடுவதற்கு முன், இவற்றுக்கும் மூடு விழா நடத்தி விடுங்கள்.

94. வருடம் ஒரு முறையாவது பிள்ளைகள், ஆபீஸ் பொறுப்புகள் எல்லாவற்றையும் தள்ளி வைத்து விட்டு ‘உனக்கே உனக்கா…’ என்று ‘தனித்திருங்கள், விழித்திருங்கள், புசித்திருங்கள்… இருவர் மட்டும்’.

95. உங்கள் வாழ்க்கைத் துணைக்கு இன்னொருவர் மேல் ஈர்ப்பு ஏற்படலாம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், ‘ஈர்ப்பு’ என்கிற விஷயம் தெரிந்ததுமே… வீட்டை ‘பாக்ஸிங்’ களமாக்காமல்… அவரை ஈர்த்த விஷயம் என்பதை தெரிந்து கொண்டு, சிக்கலைத் தீர்க்க வழி தேடுங்கள்.

96. இத்தகைய ஈர்ப்பு என்பது சராசரி மனிதர்களுக்கு வரக்கூடியதுதான். யோசித்துப் பாருங்கள்… நீங்களும்கூட இதே தவறை செய்திருக்கக் கூடும். யாராவது திருத்தியிருக்கக் கூடும்! எனவே, பின்விளைவுகள் என்னாகும் என்பதை உரிய வகையில் எடுத்து வைத்து, உங்கள் பக்கம் திருப்பப் பாருங்கள்!

97. இருவருக்குள்ளும் சின்ன பிரச்னை என்றால் உடனே மூட்டை முடிச்சைக் கட்டுக்கொண்டு ‘நான் போகிறேன்… இனிமே உன் முகத்துல முழிக்கவே மாட்டேன்’ என்று வசனம் பேசாதீர்கள். சொல்லிக் கொண்டிருந்த நீங்கள் அப்படியே இருக்கலாம். கேட்டுக் கொண்டிருந்தவர் வெளியேறலாம், ஜாக்கிரதை!

98. ‘இப்படியே பண்ணிக்கிட்டிருந்தா… ஒரேயடியா செத்துத் தொலைச்சுடுவேன்’ என்று பயமுறுத்தாதீர்கள். இது எதிர்மறையாக செயல்பட்டு வெறுப்பையும் விலகலையும்தான் உண்டாக்கும்.

99. எப்போதும் காதலையும், தாம்பத்யத்தையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் சூழலை இருவருமே உருவாக்குங்கள். அந்த சூழலை உருவாக்குவதில் இருவரும் இணைந்து செயல்படுங்கள்.

100. இருவரைச் சுற்றி நிகழும் வயது, சூழ்நிலை, பொருளாதர ஏற்ற – இறக்கம் என எல்லா மாற்றங்களையும் ஏற்றுக் கொண்டு, அதற்கேற்ப எப்படி நடைபோடுவது என்று அவ்வப்போது யோசித்து செயல்படுத்துங்கள்.

”வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்!”

– வைரமுத்து

பூவும் வேருமாக பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்!

நன்றி:- அ.வி

——————————————————————

தொகுப்பு: நாச்சியாள், எம்.மரியபெல்சின், என்.திருக்குறளரசி,
கே.யுவராஜன், இரா.மன்னர்மன்னன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால், து.மாரியப்பன்
தொகுப்புக்கு உதவியவர்கள்: வழக்கறிஞர்கள் கே.சாந்தகுமாரி, சி.சங்கர்,
டி.ஆனந்தராஜ், சென்னை உயர் நீதிமன்றம்
டாக்டர் ஸ்ரீகலா பிரசாத், மகப்பேறு மருத்துவர், சென்னை
டாக்டர் பத்மாவதி, மனநல மருத்துவர், சென்னை
நங்கநல்லூர் பத்மா, சென்னை

வாழ்வின் முன்னேற்றத்திற்கு


ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.

1.நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?

·         நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.

2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?

·         தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

3. நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?

·         ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

4. நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.

·         ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.

5. நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?

·         நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்

6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?

·         அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்

7. அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?

·         அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்

8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?

·         எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்

9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?

·         ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

10. முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?

·         நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்

11. கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?

·         குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்

12. பாவங்கள் குறைய வழி என்ன ?

·         அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்

13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?

·         அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்

14. அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?

·         பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்

15. உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?

·         விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்

16. அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?

·         அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்

17. அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?

·         (F) பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்

18. நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?

·         அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்

19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?

·         கண்ணீர், பலஹீனம், நோய்

20. நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?

·         இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது

21. அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?

·         மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது

22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?

·         கெட்ட குணம் – கஞ்சத்தனம்

23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?

·         நற்குணம் – பொறுமை – பணிவு

24. அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?

·         மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்

( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் )