இல்லம் > IPL 20000 கோடி > IPL 20,000 கோடி – வா.கார்த்திகேயன்

IPL 20,000 கோடி – வா.கார்த்திகேயன்


இன்று ஐ.பி.எல். பற்றி பேசுகிறவர்கள் முதலில் சுபாஷ் சந்திராவுக்கும் (ஜீ.டிவி.) கபில்தேவுக்கும்தான் நன்றி சொல்லவேண்டும். அன்று அவர்கள் ஐ.சி.எல். என்று ஒன்றை ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் இன்று ஐ.பி.எல். என்கிற உலகத் திருவிழா பிறந்திருக்குமா என்பதே சந்தேகம்தான். இன்டர்நேஷனல் போட்டிகளில் விளையாடாத கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முகம் தெரியாத உள்ளூர் வீரர்களைக் கொண்டு அணி அமைத்தது மூலம் ஐ.சி.எல். உருவாக்கிய ஃபார்முலா வெற்றி பெறாமல் போனது. ஆனால் அவர்கள் செய்த தவறிலிருந்து சரியான பாடத்தைக் கற்றுக் கொண்டார் லலித் மோடி. மேலும் கிரிக்கெட்டுக்கான அதிகாரபூர்வ அமைப்பான பி.சி.சி.ஐ. லிருந்து உருவானதால் உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் கிரிக்கெட் வீரர்களை மட்டுமே கொண்ட புதிய அணிகளை உருவாக்க முடிந்தது. அதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை இந்தியாவின் உச்சபட்ச கிரிக்கெட் திருவிழாவாக மாற்றினார். குறுகிய காலத்தில் ஐ.பி.எல்-ஐ இவ்வளவு பெரிய சக்ஸஸ்ஃபுல் பிராண்ட்-ஆக மாற்றி காட்டியதன் மூலம் கில்லாடி என்கிற பெயரையும் பெற்றுவிட்டார் லலித் மோடி.

பிஸினஸில் மில்லியன், பில்லியன் டாலர் என்பதெல்லாம் சாதாரண விஷயமில்லை. ஆனால் ஐ.பி.எல்.லில் மில்லியன், பில்லியன் டாலர் என்பது அற்ப விஷயமாகிவிட்டது. இங்கு புழங்கும் நம்பர்களை கேட்பதற்கே மலைப்பாக இருக்கிறது. நான்காவது ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட புதிதாக இரண்டு அணிகளுக்கு ஏலம் விடப்பட்டது. இந்த இரண்டு அணிகளை மொத்தம் 3,235 கோடி ரூபாய்க்கு சஹாரா நிறுவனமும் ரென்டிவு (Rendezvous) நிறுவனமும் ஏலம் எடுத்தது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல். ஆரம்பிக்கும் போது 8 அணிகளுக்கும் மொத்த மாகச் சேர்த்தே 2,853 கோடிதான் ஏலம் எடுக்கப்பட்டது. சுமார் 750 நாட்களில் ஒவ்வொரு அணிகளின் மதிப்பும் மூன்று முதல் நான்கு மடங்குக்கு மேல் எகிறியிருக்கிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 300 கோடி ரூபாய்க்கு ஏலமெடுத்த நெஸ்வாடியாவும் ப்ரீத்தி ஜிந்தாவும் இப்போது 300 மில்லியன் டாலருக்கு, அதாவது 1,300 கோடி ரூபாய்க்கு விலை பேசுகிறார்கள். (இப்போதுகூட என்ன விலை கொடுத்தாவது ஒரு அணியை வாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறது வீடியோகான் நிறுவனம்!)

கடந்த வருடம் 2.01 பில்லியன் டாலராக இருந்த ஐ.பி.எல். பிராண்டின் மதிப்பு இந்த வருடம் 4.13 பில்லியன் டாலராக (சுமாராக 18,600 கோடி) உயர்ந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது பெங்களூரைச் சேர்ந்த பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம். இதில் முக்கியமான விஷயம், புதிதாக ஏலம் எடுத்துள்ள இரண்டு அணிகள் இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதுதான். இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஐ.பி.எல். மதிப்பு 20,000 கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறது.

ஐரோப்பாவில் பிரபலமானது இங்கிலீஷ் பிரீமியர் லீக். 1992-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதன் தற்போதைய பிராண்ட் மதிப்பு 12 பில்லியன் டாலர்கள்தான். ஆனால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே முடிந்த ஐ.பி.எல்.லின் மதிப்பு 4.13 பில்லியன் டாலர் என்கிறது பிராண்ட் ஃபைனான்ஸ். விளம்பரங்கள், ஸ்பான்ஸர்கள், உலக அளவில் எவ்வளவு மக்கள் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் வைத்து மதிப்பீடு செய்துள்ளது பிராண்ட் ஃபைனான்ஸ். ஐ.பி.எல். என்று பெயர் வைத்துவிட்டு இந்தியாவில் நடத்தாமல் ஆப்பிரிக்காவில் நடத்தும்போதே 2.01 பில்லியன் டாலருக்கு மதிப்பு இருக்கும்போது, இந்த ஆண்டு 4.13 பில்லியன் டாலர்கள் இருப்பதில் எந்த ஆச்சயர்மும் இல்லை.

அமெரிக்க நாட்டு பத்திரிகையான ஃபாஸ்ட் கம்பெனி (FastCompany) ஒருபடி மேலே போய், ஐ.பி.எல்.-ஐ புதுமை படைத்த இந்திய கம்பெனி ((IPL most innovative Indian company) என்று ஐ.பி.எல்-ஐ ஒரு நிறுவனமாகவே மாற்றிவிட்டது. ஐ.பி.எல்-லுக்கு உலக அளவில் 22-வது இடம் கொடுத்துள்ளது. வி.என்.எல்.

என்ற இந்திய நிறுவனத்துக்கு 39-வது இடம் கொடுத்துள்ளது. மற்ற எந்த இந்திய நிறுவனமும் முதல் 50 இடங்களுக்குள் இல்லை. அடுத்த பத்தாண்டுகளில் ஐ.பி.எல். 2 பில்லியன் டாலர் (சுமார் 9,000 கோடி) வருவாய் கொண்ட நிறுவனமாக மாறும் என்று தெரிவித்துள்ளது.

”இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல்-ன் வருமானம் தேக்கநிலை அடையும்” – ஐ.பி.எல்-ன் பிராண்ட் இமேஜ் பற்றிய அத்தனை புள்ளிவிவரங்களையும் சொன்ன ‘பிராண்ட் ஃபைனான்ஸ்’ நிறுவனம்தான் இப்படிச் சொல்லி இருக்கிறது. ‘ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?’ என அந்த நிறுவனத்தின் எம்.டி. உன்னி கிருஷ்ணனிடம் கேட்டோம்.

”ஐ.பி.எல்-ன் வருமானம் நிலையானது. உதாரணத்துக்கு, டி.வி. உள்ளிட்ட சில உரிமைகளை 10 ஆண்டுகளுக்குப் பேசியிருக்கிறார்கள். இப்போது ஃப்ரான்ச்சைஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது கிடைக்கும் வருமானத்தை பகிர்ந்தளிக்கவேண்டும். அதனால் இந்த வருமானம் தேக்கநிலை அடையும் என்று சொல்கிறோம். தவிர, இந்த பிஸினஸ் மாடல் கொஞ்சம் வித்தியாசமானது. இதில் கண்ணுக்குத் தெரியக்கூடிய சொத்து குறைவு. கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் சொத்துதான் அதிகம். பிராண்ட் மதிப்பையும் பங்குதாரர்களின் நம்பிகையையும் வைத்து மட்டுமே ஐ.பி.எல். இயங்குகிறது. அதனால்தான் இந்த பிஸினஸ் மாடல் வித்தியாசமானது” என்றார்.

‘இங்கிலீஷ் பிரிமியர் லீக் 800 மில்லியன் டாலர் பற்றாக்குறையில் உள்ளது. ஆனால் ஐ.பி.எல். லாபத்தில் உள்ளது. அதனால் ஐ.பி.எல். ஐ.பி.ஓ. வரவேண்டிய அவசியமில்லை’ என்று சொல்லி இருக்கிறார் லலித் மோடி. ஐ.பி.எல். ஐ.பி.ஓ. வராவிட்டாலும் அதில் இடம்பெற்றிருக்கும் அணிகள் ஐ.பி.ஓ. வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று உன்னிகிருஷ்ணனிடம் கேட்டபோது, ”வெளிநாடுகளில் நிறைய கால் பந்தாட்ட கிளப்கள் பங்குச் சந்தையில் பட்டியலி டப்பட்டுள்ளன. அதேபோல ஐ.பி.எல். அணிகள் ஐ.பி.ஓ. வருவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. ஆனால் அது எப்போது ஐ.பி.ஓ. வரும் என்பதை அணி நிர்வாகம்தான் முடிவு செய்யவேண்டும்” என்றார்.

இப்போது இருக்கும் அணிகளிலேயே மிகவும் காஸ்ட்லியானது சஹாரா நிறுவனம் வைத்திருக்கும் புனே அணிதான். இது எப்போது பிரேக் ஈவனை அடையும்?’ என்ற கேள்விக்கு, ”சஹாரா நிறுவனம் மூன்று அணிகளை (நாக்பூர், அஹமதாபாத் மற்றும் புனே அணிகள்) 370 மில்லியன் டாலர் ஏலத்துக்கு கேட்டிருந்தது. மூன்று இடங்களிலேயும் சஹாராவே அதிகத் தொகைக்கு கேட்டிருப்பதால் ஐ.பி.எல் நிர்வாகம் சஹாராவையே முடிவெடுக்கச் சொன்னது. சஹாரா தேர்ந்தெடுத்தது புனேவை. காரணம், இங்கிருந்து மிக அருகில்தான் சஹாராவின் அம்பே வேலி சிட்டி (Aamby Valley City்) உள்ளது. இதன் காரணமாக சஹாரா புனேவை தேர்ந்தெடுத்து. வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவின் மூலம் தன் வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது சஹாரா. ஆனால் எப்படி பிரேக் ஈவன் அடையப் போகிறது என்பது வரும் ஆண்டுகளில்தான் தெரியும்” என்றார் உன்னி கிருஷ்ணன்.

‘இப்போது இந்தியாவின் உச்சபட்ச திருவிழாவாக இருக்கும் ஐ.பி.எல். போட்டிகள் என்றைக்கும் அதே மவுசோடு இருக்குமா? ஐ..பி.எல். நீண்ட நாளைக்கு நீடிக்காது என்ற யூகங்கள் வருகிறதே!’ என்று லலித் மோடியிடம் கேட்டபோது அவர் சொன்னது இதுதான்…

”ஐ.பி.எல். பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், எங்களிடம் போதுமான நம்பர்கள் உள்ளது. எங்களிடம் விளையாட்டு உள்ளது. இன்னும் சிறப்பாக விளையாடுவது எப்படி என்றும் எங்களுக்குத் தெரியும்!”

ஆனால் பிராண்ட் ஃபைனான்ஸ் சொல்வதையும் மறுக்க முடியாது. ஐ.பி.எல்-லிடம் கண்ணுக்குத் தெரிந்த சொத்துக்களைவிட கண்ணுக்குத் தெரியாத சொத்துக்களே அதிகம். தவிர, ஐ.பி.எல்-ஐ போல மற்ற கிரிக்கெட் விளையாடும் நாடுகள் ஏதேனும், இது போன்ற போட்டியை ஆரம்பிக்கும் பட்சத்தில் ஐ.பி.எல்-ன் மதிப்பு குறையக்கூடும்.

பார்த்துக் கொள்ளுங்கள் மோடி, வெறுங்கையால் நீண்ட நாளைக்கு முழம் போட முடியாது.

சென்னைக்கு என்னாச்சு?

சென்னை சூப்பர் கிங்ஸ் அரையிறுதிக்கு வந்துவிடும் என்று நம்பிக்கையாகக் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த ஆண்டு ஏமாற்றம்தான். அந்த வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. ஹெய்டனையும் ரெய்னாவையும் மட்டுமே நம்பியதுதான் இதற்குக் காரணம். ஃபிளின்டாப், ஓரம் ஆகியோர் இந்தமுறை காயம் காரணமாக ஆட்டத்துக்கே வரவில்லை. ஹசி ஏப்ரலில் தான் வருவார். டோனி போன்ற விக்கெட் கீப்பர்- பேட்ஸ்மேன் இருக்கும்போது எதற்காக பர்தீவ் பட்டேல் விளையாடும் அணியில் இருந்தார் என்பது டோனிக்கும் அணி நிர்வாகத்துக்கும்தான் வெளிச்சம். கடந்த ஆண்டு நன்றாக விளையாடியதால் பிராண்ட் மதிப்பில் சென்னை முதலிடம் பெற்றது. ஆனால் இந்த ஆண்டு விளையாடுவதைப் பார்த்தால் அதன் பிராண்ட் இமேஜ் கடுமையாகச் சரிந்துவிடும் போலிருக்கிறது. இந்த ஆண்டுடன் டோனியின் ஒப்பந்தம் முடிவடைகிறது. டோனி தொடர்ந்து இதே அணியில் இருப்பாரா, இல்லையா என்பது பில்லியன் டாலர் கேள்வி. புனே அணியை வாங்கியுள்ள சஹாராவின் சுப்ரதா ராயின் வலையில் எந்த திமிங்கலம் மாட்டப்போகிறதோ?.

யாருக்கு எவ்வளவு?

ஒரு போட்டியில் கிடைக்கும் வருமானத்தில் 80 சதவிகிதம் ஃப்ரான்ச்சைஸ் எடுத்த அணிகளுக்கும் 20 சதவிகிதம் ஐ.பி.எல்-க்கும் (பி.சி.சி.ஐ.) கிடைக்கும். தற்போது நடக்கும் ஐ.பி.எல்-ல் ஒரு போட்டிக்கு சுமார் 13.5 கோடி ரூபாய் கிடைக்கும் என்றால் 60 போட்டிகளுக்கு சுமார் 810 கோடி கிடைக்கும். இதில் 80 சதவிகிதம், அதாவது சுமார் 650 கோடிரூபாய் அணிகளுக்கு கிடைக்கும். அதாவது தோராயமாக ஒவ்வொரு அணிக்கும் சுமார் 81 கோடி கிடைக்கும். இதுபோக இதர வருமானங்கள் தனி!

தற்போதைய நிலையில் ஒவ்வொரு அணியும் ஏலமெடுத்த தொகையில் 10 சதவிகிதத் தொகையை ஒவ்வொரு வருடமும் ஐ.பி.எல். அமைப்புக்குச் செலுத்த வேண்டியிருக்கும். அது மட்டுமல்லாமல், வீரர்களுக்குத் தரவேண்டிய பணம் மற்றும் இதரச் செலவுகள் என்று பெரிய செலவுக் கணக்கே இருக்கிறது. புனே அணியை எடுத்துக்கொண்டால் ஆண்டுக்கு எப்படி இருந்தாலும் குறைந்தபட்சம் 225 கோடி ரூபாய் தேவைப்படும். அடுத்த ஆண்டு ஒரு போட்டிக்கு சுமார் 25 கோடி வருமானம் வரும் என்று கணித்திருக்கிறார் லலித் மோடி. 90 போட்டிகள் நடந்தால்கூட ஒவ்வொரு அணிக்கும் சுமாராக 185 கோடிதான் வருமானம் கிடைக்கும். அதனால் இதர வருமானத்தை வைத்துக் கொண்டுதான் புனே அணியும் கொச்சி அணியும் சமாளிக்க வேண்டிவரும்

 

படம்: வி.செந்தில்குமார்

நன்றி:-வா.கார்த்திகேயன்

நன்றி:- நாணயம் விகடன்

_________________________________________

Advertisements
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: