இல்லம் > ஆயுத விற்பனை... அடுத்தது மருந்து!, கட்டுரைகள் > ஆயுத விற்பனை… அடுத்தது மருந்து! – டி.எல்.சஞ்சீவிகுமார்

ஆயுத விற்பனை… அடுத்தது மருந்து! – டி.எல்.சஞ்சீவிகுமார்


”ஹலோ, ஜூ.வி. ஆக்ஷன் செல்?”

– கேட்ட குரலில் கிலோ கணக்கில் அப்பி யிருந்தது பதற்றமும் பயமும். ”நான் ஒரு சேல்ஸ் ரெப்ரசென்டேடிவ்! மருந்து உலகில் எப்படி யெல்லாம் மோசடி நடக்குதுனு ஜூ.வி-யில் ‘போஸ்ட் மார்ட்டம்’ தொடர் வெளியானபோது எப்படியெல்லாம் கொந்தளிப்பு எழுந்திச்சு? ஆனா, அது அத்தனையுமே நிஜம்னு இப்ப ஒவ்வொரு முகமூடியா கிழியும்போது ஜனங்களுக்கு பக்காவா புரிஞ்சிருக்கும்!” என்று சொன்னவர்… இன்னும் எப்படியெல்லாம் ஃபிராடுகள் நடத்தி மக்களின் உயிரோடு விளையாடுறாங்கனு சொல்லியே ஆகணும் சார். இல்லாட்டி என் தொழிலுக்கு நான் பண்ற பெரிய துரோகமா போயிடும்!” என்றும் படபடத்தார். அவரையும், அவர் அறிமுகப்படுத்திய மருந்துத் துறை நபர்களையும், நம்பகமான வேறு சிலரையும் நாம் தேடிச் சென்று சந்தித்தபோது… காலாவதி மருந்து விவகாரம் ரொம்ப… ரொம்ப… ரொம்பவே சீரியஸ் என்று புரிந்தது நமக்கு!

மருந்து தயாரிப்பிலேயே தில்லாலங்கடி..!

”இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட சுமார் 300 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில், 40 சதவிகித நிறுவனங்களுக்கு தயாரிப்பு யூனிட்டே கிடையாது. இவை தங்களுக்குத் தேவையான மூலப் பொருட்களை வெளியே வாங்கி, மருந்து-மாத்திரைகளையும் குடிசைத் தொழில்போல ஜாப் ஒர்க்காக ஆர்டர் கொடுக்கின்றன. இதைக் கண்காணிக்கவோ தரத்தை சோதிக்கவோ முறையான கட்டமைப்பில்லை. மாத்திரை தயாரிப்பில் ஒரு கிலோ மூலப்பொருளில் இவ்வளவு மாத்திரைகள்தான் தயாரிக்கணும்னு கணக்கீடுகள் உண்டு. ஆனால், அந்த மூலப்பொருளில் சாதாரண சுண்ணாம்பு பவுடரையோ உணவு மாவுப் பொருளையோ கலந்து தயாரிப்பை இரட்டிப்பாக்குகிறார்கள்…” என்று சில மருந்தாளுநர்களே தெரிவித்தனர்.

ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம்..!

”இதுபோன்ற விளம்பரங்களை ஜவுளிக்கடை பஜாரில் தான் பார்க்க முடியும். ஆனால், மருந்து உலகிலும் இது உண்டு! வயிற்றுப்போக்குக்குப் பயன்படுத்தக்கூடிய ‘அமிக் காசின்’, காய்ச்சல், தலைவலிக்குப் பயன்படுத்துகின்ற, ‘பாராசிட்டமால்’, ஆன்டிபயாடிக் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள், அறுவை சிகிச்சைக்கு பின்பு பயன்படுத்தக்கூடிய ஊசி மருந்துகள், அல்சர், இருமல் மருந்துகள் போன்றவற்றில்தான் இதுபோன்ற இலவசங்கள் அள்ளித் தரப்படுகின்றன. தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி, மருந்து தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் ஏஜென்சி ஒன்று 100 மாத்திரை வாங்கினால் 200 மாத்திரை கூடுதலாக இலவசம்! இந்த இலவசத்தின் லாபம் முழுக்க, முழுக்க மருந்து வியாபாரிகளுக்கு மட்டும்தான். ஆனால், அதை நுகர்கின்ற வாடிக்கையாளர்களுக்கு பக்கவிளைவுகள் மட்டுமே இலவசம். தரமில்லாத மருந்து மாத்திரை அல்லது போலி தயாரிப்புகள் மூலம் மட்டுமே இந்த இலவசங்கள் சாத்தியப்படும்…” என்றும் சிலர் சொல்கிறார்கள்.

சக்கைப்போடு சாம்பிள்!

”மருந்து நிறுவனங்கள், டாக் டர்களுக்கு அளிப்பதற்காக ஏராளமான சாம்பிள் மருந்து களை விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் கொடுக்கின்றன. இவற்றில் இருக்கும் ‘நாட் ஃபார் சேல்’ என்கிற வாசகங்களை டர்பன்டைன் மூலம் அழித்து, விற்பனைக்கு விடும் மருத்துவர்களும் இருக்கின்றனர்!” என்கிறார்கள்.

இயன்முறை மருத்துவர்கள் பெருமன்ற நிர்வாகி களான கிருஷ்ணகுமார் மற்றும் டேனியல் நம்மிடம், ”குறிப்பிட்ட சில மருந்துகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் ‘நிமிசிலிடு’ என்னும் ரசாயனம் உள்ளது. எனவே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நம்நாட்டில் மேற்கு வங்கத்திலும் அப்படிப்பட்ட மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அவை சர்வசாதாரணமாக விற்பனையாகின்றன…” என்கிறார்கள்.

டீல் டாக்டர்கள்..!

சில மருந்து விற்பனைப் பிரதிநிதிகள், ”டாக்டர்கள் நினைத்தால் போலி மருந்துகளை களைந்துவிடலாம். இவற்றை ஊக்குவிப்பதே அவர்கள்தான். ஒரு மருந்து போலி என்று தெரிந்தும்கூட, மருந்து கம்பெனிகள் அளிக்கும் ஆதாயத்துக்காக பரிந்துரைக்கின்றனர். பிரதிபலனாக பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், சொகுசு பங்களா கட்டித்தருவது, கார் வாங்கித் தருவது, வெளிநாட்டுக்குச் சுற்றுலா அழைத்துச்செல்வது என டாக்டர்களை குளிப்பாட்டுகின்றன…” என்று சீறுகிறார்கள்.

தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலின் தலைவர்டாக்டர் பிரகாசத்திடம் பேசியபோது, ”இந்த ஸ்பான்ஸர்… பரிசு விஷயங்களை முற்றிலுமாக மறுக்க முடியாது. ஆனால் சமீபத்தில், ‘டாக்டர்கள் பரிசுப் பொருள் வாங்கக் கூடாது. அப்படி வாங்கினால் அவர்கள் கவுன்சிலில் இருந்து நீக்கப்படுவார்கள்’ என்று இந்திய மருத்துவ கவுன்சில் கடுமையாக விதிமுறைகளை வகுத்திருக்கிறது. எச்சரிக்கை அறிக்கையும் அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே டாக்டர்கள் யாரேனும் இது போன்ற காரியங் களில் ஈடுபட்டால் கவுன்சிலில் புகார் கொடுக்க முடியும்…” என்றார்.

ஆயுதம்… மருந்து!

சமூக ஆர்வலரான தன்ராஜ், ”உலகப் பொருளாதார மயமாக்கலுக்கு முன்பு, 1991-ம் ஆண்டு வரை இந்தியா வில் மருந்து உற்பத்தி 90 சதவிகிதம் அரசாங்கத்திடமே இருந்தது. அதன்பின்பு கடனுக்காகக் கையேந்தியதில் உலக வங்கி விதித்த நிபந்தனைகளுக்கு இந்திய அரசு மண்டியிட்டு, சேவைத் துறையான மருந்து துறையை தனியார் கையில் ஒப்படைத்து விட்டது. உலகில் ஆயுத விற்பனைத் தொழிலுக்கு அடுத்தபடியாக அதிக லாபம் தரும் துறை இது! அதனால் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பலவும் தங்கள் நாட்டில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய முடியாத ஆபத்து நிறைந்த மருந்துகளை இந்தியா போன்ற நாடுகளில் புழக்கத்தில் விட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனமே, ‘இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு உற்பத்தியாகும் 22,887 கோடி ரூபாய் மருந்து தயாரிப்பில் 4,112 கோடி ரூபாய் அளவுக்கு போலி மருந்து புழக்கத்தில் இருக்கிறது’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதன்படி பார்த்தால், தமிழ்நாட்டில் கைதாகியுள்ள போலி மருந்து சுறாக்களையும் மிஞ்சும் திமிங்கிலங்கள் இந்திய மருந்து மார்க்கெட்டில் கோடிகளை அள்ளிக் கொண்டிருப்பதுதான் நிஜம். அவர்கள் மீது கைவைக்க மத்திய அரசு முன்வருமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி…” என்றார் ஆதங்கத்துடன்.

மேற்கண்ட விவகாரங்கள் குறித்து தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநர் பாஸ்கரன், ”காலாவதி மருந்து விவகாரம் இப்போது வெளி யில் வந்திருப்பதைத் தொடர்ந்து, துப்புரவாக தவறுகளைக் களைவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். மருந்து கம்பெனிகள் செய்யும் பல முறைகேடுகள் குறித்தும் எங்களுக்கு ரகசிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த செப்டம்பர் மாதம்கூட இதுபோல போலி மருந்துகளை தயாரித்த ஒரு கம்பெனி மீது நடவடிக்கை எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸில் புகார் அளித்துள்ளோம். தற்போது, இன்னும் சில மருந்து நிறுவனங்கள் இதுபோல் மோசடி வேலையில் ஈடுபட்டு வருவதாக எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்…” என்றார்.

”சட்டத்தை மாற்றி அமையுங் கள். மருந்தில் விளையாடும் பஞ்சமா பாதகர்களை தூக்கில் போடுங்கள்!” என்று பொது இடங்களில் குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. ”எவன் எவனையோ என்கவுன்ட்டர் பண்றானுங்க… இவனுங்களைத் தான்யா மொதல்ல சுடணும்!” என்று கேட்கும் குரல்களில் உள்ள கொதிப்பு, இந்த தேசத்தின் பாதிப்பைக் காட்டும் மீட்டராகவே இருக்கிறது!

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

நன்றி:– டி.எல்.சஞ்சீவிகுமார்

நன்றி:-ஜூ.வி.

____________________________________________________

Advertisements
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: