இல்லம் > இஸ்லாம், நஃப்ஸுடன், முன்மாதிரி முஸ்லிம் > முன்மாதிரி முஸ்லிம் – நஃப்ஸுடன், உடற்பயிற்சி, உடல், உடை

முன்மாதிரி முஸ்லிம் – நஃப்ஸுடன், உடற்பயிற்சி, உடல், உடை


முஸ்லிம் தனது நஃப்ஸுடன்

முஸ்லிம்கள் மனிதர்களில் சிறந்தவர்களாகத் திகழ வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது. தங்களது நடை, உடை, பாவனையில், கொடுக்கல், வாங்கல் மற்றும் ஏனைய செயல்களில் தனித்தன்மைமிக்க அழகிய வழிகாட்டிகளாகத் திகழவேண்டும். அப்போதுதான் மனிதர்களுக்கான தூதுத்துவத்தை சுமந்து கொள்வதற்கான சக்தியை முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இப்னு ஹன்ளலிய்யா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை பிரயாணத்திலிருந்து தங்களது தோழர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது கூறினார்கள்: “நீங்கள் உங்கள் சகோதரர்களை சந்திக்கச் செல்கிறீர்கள். உங்களது வாகனத்தின் சேணங்களை சரி செய்து, ஆடைகளை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் மனிதர்களில் தனித்தன்மை கொண்டவர்களாக காட்சியளிக்க முடியும். நிச்சயமாக அல்லாஹ் அசிங்கமானதையும் அருவருப்பானதையும் நேசிப்பதில்லை.” (ஸுனன் அபூதாவூத்)

இங்கு நபி (ஸல்) அவர்கள் பரிதாபத் தோற்றம், கிழிந்த அடைகள் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய நிலையை இஸ்லாம் வெறுக்கிறது.

உண்மை முஸ்லிம் இவ்வுலகின் மாபெரும் கடமைகளைச் சுமக்கும் நிலையிலும் தன்னை மறந்துவிடமாட்டார். எனெனில், ஒரு முஸ்லிமின் வெளிரங்கம் அவரது உள்ரங்கத்திலிருந்து மாறுபட்டிருக்கக் கூடாது. உண்மை முஸ்லிம் தனது உடல், அறிவு, ஆன்மாவுக்கு மத்தியில் சமத்துவத்தைப் பேணவேண்டும். ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய உரிமையைக் கொடுக்க வேண்டும். ஒன்றைவிட மற்றொன்றை உயர்த்தி விடக்கூடாது. இதுபற்றி நடுநிலையை வலியுறுத்திய நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியைக் காண்போம்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எனது அளவுக்கதிகமான வணக்கங்களைப்பற்றி அறிந்து, என்னிடம் “நீர் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணங்குவதாக நான் கேள்விப்பட்டேனே?” என்று கேட்டார்கள். நான் “ஆம் இறைத்தூதரே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “அவ்வாறு செய்யாதீர்கள். நோன்பு வையுங்கள்; நோன்பின்றியும் இருங்கள். தொழவும் செய்யுங்கள்; தூங்கவும் செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் உடலுக்கும், உங்கள் இரு கண்களுக்கும், உங்கள் மனைவிக்கும், உங்களை சந்திக்க வருபவர்களுக்கும் நீங்கள் செலுத்தவேண்டிய கடமைகள் உள்ளன” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

முஸ்லிம் தனது உடல், அறிவு, ஆன்மா ஆகியவற்றுக்கிடையே சமத்துவத்தைப் பேணுவார்
அ – அவரது உடல் நலம். உண்பது, குடிப்பதில் நடுநிலையானவர்
முஸ்லிம் தனது உடல் நிலையை அரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக உண்பது, குடிப்பதில் நடுநிலையைப் பேணுவார். உணவை பேராசையுடன் அணுகவும் மாட்டார், முற்றிலும் குறைக்கவும் மாட்டார். அவரது முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கவேண்டும், அவரது வலிமையும், ஆரோக்கியமும் உற்சாகமும் காக்கப்படவேண்டும். இதுவே உணவுக்கான அளவுகோலாகும்.

(இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். எனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அளவு கடந்து (வீண்) செலவு செய்வோரை நேசிப்பதில்லை. (அல்குர்அன் 7:31)

உண்பது, குடிப்பதில் நடுநிலையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆதமுடைய மகன் நிரப்பும் பைகளில் மிகக் கெட்டது அவனது வயிறாகும். சாப்பிடுவதாக இருந்தால் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியைக் குடிப்பதற்கும் மூன்றாவது பகுதியை மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்.” (ஸுனனுத் திர்மிதி)

உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “வயிறு நிரம்ப உண்பது மற்றும் குடிப்பதில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். எனெனில் அது ஆரோக்கியத்தைப் பாதித்து நோய்களை உருவாக்கும்; தொழுகையில் சோம்பலை எற்படுத்தும். அந்த இரண்டிலும் நடுநிலையை மேற் கொள்ளுங்கள். அது உடலை சீர்படுத்தி வீண் விரயத்தைத் தவிர்க்கும். நிச்சயமாக அல்லாஹ் கொழுத்த உடல்களை முற்றிலும் வெறுக்கிறான். நிச்சயமாக மனிதன் மார்க்கத்தைவிட தனது மனோ இச்சையைத் தேர்ந்தெடுத்தால் அழிந்து விடுவான்.” (அல் கன்ஜ்)

முஸ்லிம் போதைப் பொருட்களையும், செயற்கை உற்சாகத்தை அளிக்கும் மருந்துகளையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக அவைகளில் ஹராமானவைகளை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். விரைவாக உறங்கி விரைவாக எழுந்திட வேண்டும். நோய்க் காலங்களில் மட்டுமே மருந்து சாப்பிடவேண்டும். அவரது வாழ்க்கை முறையே இயற்கையான உற்சாகத்திற்கும் அரோக்கியத்திற்கும் காரணமாக அமைய வேண்டும்.

உடல் வலிமைமிக்க மூஃமின் பலவீனமான முஃமினைவிட அல்லாஹ்வுக்கு மிக உவப்பானவர் என்பதை உண்மை முஸ்லிம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஆதை நபி (ஸல்) அவர்கள் உறுதிப் படுத்தியுள்ளார்கள். எனவே உடல் வலிமையைப் பேண தனது வாழ்வில் அரோக்கிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்து வருவார்
முஸ்லிம் அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட இன்னும் உடலுக்குத் தீங்கிழைக்கும் அனைத்து வகையான உணவு, பானங்களை ஒதுக்கி விடுவார். இரவில் வீணாக விழித்திருப்பது போன்ற உடலையும் உள்ளத்தையும் பலவீனப்படுத்தும் தீய பழக்கங்களிலிருந்து தவிர்ந்திருப்பார். இதனால் அவர் வலிமையும் ஆரோக்கியமும் உடையவராக இருப்பார். மேலும் தனது உடலுக்கு அதிக வலிமை சேர்க்க முயற்சி செய்து வருவார். தனக்குத் தானே ஒர் ஆரோக்கிய வழிமுறையை வகுத்துக் கொண்டு அதுவே போதுமென்று இருக்கமாட்டார். அவரது சமூக அமைப்பு, வயது, உடல் நலனுக்கேற்ப உடற்பயிற்சியைக் கற்று ஆரோக்கியத்தைப் பேணிக் கொள்ளவேண்டும்.

முறையான உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது அழகிய உடலமைப்பைப் பெற்றுத்தரும். உடற்பயிற்சிக்கான நேரங்களை குறிப்பாக்கிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் உடற்பயிற்சியின் முழுப்பலனையும் அடைந்துகொள்ள முடியும். இது அனைத்தும் எல்லாக் காலங்களிலும் நடுநிலையையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பதன் மூலமே சாத்தியமாகும்.

உடல், உடையில் தூய்மையானவர்
இஸ்லாம் விரும்பும் உண்மை முஸ்லிம், மக்களிடையே மிகத் தூய்மையானவராக இருக்க வேண்டும். இது குறித்து நபி (ஸல்) அவர்கள் சிறந்த முறையில் குளித்து மணம் பூசிக்கொள்ள வேண்டுமெனவும், குறிப்பாக ஜுமுஆ நாளில் அதைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்கள்.

“நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இல்லையென்றாலும் ஜுமுஆ நாளில் குளித்து, தலையைக் கழுவிக் கொள்ளுங்கள்! மணம் பூசிக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குளித்து தூய்மையாக இருப்பதைப் பற்றி மிகவும் வலியுறுத்தியதால் சில இமாம்கள் ஜுமுஆ தொழுகைக்காக குளிப்பது வாஜிப் எனக் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வொரு முஸ்லிமும் வாரத்தின் ஏழு நாட்களில் ஒரு நாள் குளித்துக்கொள்வது கடமையாகும். அப்போது தனது தலையையும் உடலையும் கழுவிக் கொள்வாராக!” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

முஸ்லிம் தனது உடை, காலுறைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கால்கள் மற்றும் உடலில் வெறுக்கத்தக்க துர்நாற்றம் வருவதை அவர் விரும்பமாட்டார். நறுமணத்தின் துணையுடன் அதை தவிர்த்துக் கொள்வார்.

அமீருல் முஃமினீன் உமர் (ரழி) அவர்கள் “ஒருவர் தன் செல்வத்தின் மூன்றில் ஒரு பகுதியை வாசனைத் திரவியங்களுக்காகச் செலவிட்டாலும் அவர் வீண் விரயம் செய்தவராகமாட்டார்” என்று கூறி அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள்.

பேணுதலான முஸ்லிம் ஒவ்வொரு நாளும் மிஸ்வாக், பிரஷ் போன்ற சாதனங்களின் மூலம் தனது வாயைத் தூய்மைப்படுத்தி பிறருக்கு நோவினை தரும் வாயின் துர்நாற்றத்தை அகற்றிடவேண்டும். வருடத்தில் ஒருமுறையேனும் பல் மருத்துவரிடம் சிகிச்சை பெறவேண்டும். அவ்வாறே தேவை எற்பட்டால் காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடமும் சிகிச்சை பெறவேண்டும்.

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் இரவிலோ பகலிலோ தூங்கினால் விழித்த உடன் உளுவுக்கு முன் மிஸ்வாக் செய்வார்கள்.” (ஸன்னன் அபூதாவூத்)

வாயை தூய்மையாக வைத்திருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் மிகுந்த முக்கியத்துவமளித்துக் கூறினார்கள்: “எனது உம்மத்தினருக்கு சிரமம் எற்படாது என்றிருந்தால் ஒவ்வொரு தொழுகைக்கும் மிஸ்வாக் செய்யும்படி அவர்களை நான் ஏவியிருப்பேன்.” (ஸஹீஹுல் புகாரி)

அன்னை அயிஷா (ரழி) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் எந்தக் காரியத்தை முதன் முதலாகச் செய்வார்கள்?” என்று கேட்கப்பட்டபோது, அன்னையவர்கள் “மிஸ்வாக்’ என பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

மிஸ்வாக் என்பது இஸ்லாமின் கெªரவச் சின்னமாக இருந்தும் சில முஸ்லிம்கள் இது விஷயத்தில் அலட்சியம் காட்டுவது வருந்தத்தக்க தாகும். அவர்கள் தங்களது, உடல், உடை மற்றும் வாயின் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால் அவர்கள் இறையில்லங்கள் மற்றும் மார்க்க உபதேச சபைகள், கல்வி மற்றும் ஆலோசனை அரங்குகளில் பங்கேற்கிறார்கள். அவர்களிடமிருந்து வெளிப்படும் துர்நாற்றம் சபையோரைத் துன்புறுத்துகிறது. இறையருள் இறங்கும் இவ்வாறான சபைகளில் சூழ்ந்துகொள்ளும் மலக்குகளையும் வெறுப்படைய செய்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் பூண்டு, வெங்காயத்தை சாப்பிட்டுவிட்டு மஸ்ஜிதுக்குள் நுழையக் கூடாது; அது மனிதர்கள், மலக்குகளுக்கு நோவினை எற்படுத்தும் என்ற நபிமொழியை அன்றாடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வெங்காயம், பூண்டு, உள்ளியை சாப்பிட்டவர் நமது மஸ்ஜிதை நெருங்க வேண்டாம். எனென்றால், மனிதர்களுக்கு சங்கடம் எற்படுத்தும் விஷயங்களால் மலக்குகளும் சங்கடம் அடைகிறார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கெட்ட வாடையுடைய சில காய்களை சாப்பிட்டவர்கள் மஸ்ஜிதுக்குள் நுழையத் தடை விதித்தார்கள். அவர்களது துர்நாற்றமுள்ள வாடையால் மனிதர்கள், மலக்குகள் நோவினை அடையக்கூடாது என்பதுதான் தடைக்குக் காரணமாகும். பொடுபோக்கும், அலட்சியமும் உடைய சிலரின் வாய்நாற்றம் அருவருப்பை எற்படுத்துகிறது. உடல் மற்றும் அழுக்கடைந்த ஆடைகள், காலுறைகள் இவைகளிலிருந்து வெளிப்படும் கெட்ட வாடையாலும் பலர் பாதிப்படைகின்றனர்.

அஹ்மது மற்றும் நஸாஈ (ரஹ்) அவர்கள் ஜாபிர் (ரழி) அவர்களிடமிருந்து ஒரு நபிமொழியை அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எங்களைச் சந்திக்க வந்தபோது அழுக்கடைந்த ஆடை அணிந்திருந்த ஒரு மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “தனது ஆடையைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் (சாதனம்) எதுவும் இம்மனிதருக்குக் கிடைக்கவில்லையா?” என்று கேட்டார்கள்

தனது ஆடையைத் தூய்மையாக வைத்திருப்பதற்கான வசதியைப் பெற்றிருந்தும் அழுக்கடைந்த ஆடைகளுடன் மக்களிடையே வருபவர்களை நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள். முஸ்லிம்கள் தூய்மையான ஆடை, அழகிய, கம்பீரமான தோற்றத்துடனேயே எப்போதும் காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தான் வழமையாக அணியும் கீழாடை, மேலாடையைத் தவிர முடிந்தால் ஜுமுஆ நாளுக்காக மற்றொரு ஆடையைத் தயார் செய்து கொள்ளட்டும்.” (ஸன்னன் அபூதாவூத்)

இஸ்லாம் மனிதர்களை எல்லா நிலையிலும் தூய்மையைப் பேணி நடக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. தூய்மையான நறுமணப் பொருட்களின் மூலம் உடலில் நறுமணம் கமழச் செய்வது அவசியமாகும். இதுவே நபி (ஸல்) அவர்களின் நடைமுறையாக இருந்தது.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்களின் உடலிலிருந்து வெளியான நறுமணத்தைவிட அதிக நறுமணமுடைய கஸ்தூரியையோ அம்பரையோ வேறெந்த நறுமணப் பொருளையோ நான் நுகர்ந்ததேயில்லை.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் உடல் மற்றும் ஆடைகளின் தூய்மை குறித்தும், அவர்களது வியர்வையின் நறுமணம் குறித்தும் பல சான்றுகள் காணக் கிடைக்கின்றன. அன்னார் எவரையேனும் முஸப்ஃபஹா (கைலாகு) செய்தால் அன்றைய நாள் முழுவதும் அவரது கரத்தில் நறுமணம் கமழும். அவர்கள் குழந்தைகளின் தலைமீது அன்புடன் தடவிக்கொடுத்தால் அக்குழந்தைகளிடமிருந்து நறுமணம் வீசும்.

ஜாபிர் (ரழி) அவர்கள் வழியாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது “தாரீகுல் கபீர்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் ஒரு வீதியில் நடந்து சென்றால் அதற்குப்பின் அந்த வீதியில் நடப்பவர் அங்கு எழும் நறுமணத்தைக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றதை அறிந்து கொள்வார்.”

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரழி) அவர்களின் இல்லத்தில் உறங்கினார்கள். அவர்களிடமிருந்து வியர்வை வெளியேறியது. அனஸ் (ரழி) அவர்களின் அன்னையார் ஒரு பாட்டிலைக் கொண்டுவந்து அதில் அந்த வியர்வையை சேகரித்தார்கள். அதுபற்றி நபி (ஸல்) அவர்கள் வினவியபோது அவர் “இது உங்களது வியர்வை; இதை நாங்கள் எங்களது வாசனைத் திரவியங்களில் சேர்த்துக் கொள்வோம்” என்றார்கள். அந்த அளவு அது மிகச் சிறந்த வாசனைத் திரவியமாக இருந்தது. (ஸஹீஹ் முஸ்லிம்)

தலைமுடி பற்றியும் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதல் உண்டு. அதை சீர்செய்து இஸ்லாம் கற்பித்த நெறியின் அடிப்படையில் அழகுபடுத்திக் கொள்ளவேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவருக்கு முடி இருக்கிறதோ அதற்கு அவர் கண்ணியமளிக்கட்டும்.” (ஸன்னன் அபூதாவூது)

இஸ்லாமியப் பார்வையில் முடியைக் கண்ணியப்படுத்துவது என்றால் அதைத் தூய்மைபடுத்துவது, எண்ணெய் தேய்ப்பது, சீவிக் கொள்வது மற்றும் அழகிய வடிவில் அதைப் பேணுவதைக் குறிக்கும். தலைவிரி கோலமாக வரண்டுபோன தலைமுடியைத் தொங்கவிட்டுக் கொண்டு மக்களிடையே வருவது சபிக்கப்பட்ட ஷைத்தானின் உருவத்துக்கு ஒப்பாகிவிடும் என்ற காரணத்தால் நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள்.

அதா இப்னு யஸப்ர் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாக இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தனது முவத்தாவில் குறிப்பிடுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் தலைவிரி கோலமாக ஒழுங்கற்ற தாடியுடன் உள்ளே நுழைந்தார். அவரை நோக்கிய நபி (ஸல்) அவர்கள் அவரது தலைமுடியையும் தாடியையும் சீர்செய்து கொள்ளும்படி தனது திருக்கரத்தால் சைக்கினை செய்தார்கள். அவர் சீர்செய்துவிட்டுத் திரும்பினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உங்களில் ஒருவர் ஷைத்தானைப் போன்று தலைவிரிகோலமாக வருவதைவிட இப்படி வருவது சிறந்ததல்லவா?” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தலைவிரிகோலமாக இருப்பதை சபிக்கப்பட்ட ஷைத்தானுடன் ஒப்பிட்டது, முஸ்லிம் அழகும் கம்பீரமும் உடையவராக தோற்றமளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதும், அசிங்கமாக, அருவருப்பாக தோற்றமளிப்பதை வெறுத்ததும்தான் காரணமாகும். மனிதன் தனது தோற்றத்தில் அழகையும் கம்பீரத்தையும் வெளிப்படுத்தவேண்டும் என வலியுறுத்துவதை நபி (ஸல்) அவர்கள் வழமையாகக் கொண்டிருந்தார்கள். எவரேனும் தலைமுடியை சீர்செய்து கொள்ளாமல் அலட்சியமாக இருந்தால் அவர்மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை எங்களை சந்திக்க வந்தார்கள். அப்போது தலைமுடி கலைந்து தலைவிரிகோலமான ஒரு மனிதரைக் கண்டார்கள். அப்போது “இம்மனிதருக்கு தனது தலைமுடியை சீர்படுத்திக் கொள்ளும் (சாதனம்) எதுவும் கிட்டவில்லையா?” என்று கேட்டார்கள். (முஸ்னத் அஹ்மத்)

நன்றி:- அஷ்ஷைக் முஹம்மது அலீ அல்ஹாஷிமி

தமிழில் கா.ஹுஷைன் கனி, அ. உமர் ஷரீஃப்.

வெளியீடு தாருல் ஹுதா. சென்னை

நன்றி:- Read Islam

  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s