வலிமார்கள் என்பவர்கள் யார்?


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா இந்த உலகத்தை படைத்து, அதில் கோடிக்கணக்கான ஜீவராசிகளை படைத்து, அந்த அத்தனை ஜீவராசிகளிலும் மனிதனை ஒரு உயர்ந்த, கண்ணியம் வாய்ந்த படைப்பாக படைத்தான். இந்த மனிதர்களிலேயே அதி கண்ணியம் வாய்ந்த மனிதராக எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களை படைத்தான். அன்னவர்களுக்கு பின் மனிதர்களில் சிறந்த படைப்பாக ஏனைய ரசூல்மார்களை படைத்தான். இந்த ரசூல்மார்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பாக ஏனைய நபிமார்களை படைத்தான். நபிமார்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பாக ஸஹாபாக்கள் இருக்கிறார்கள். ஸஹாபாக்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பாக தாபியீன்களும், தபஅத்தாபியீன்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பு அதற்கு பின்னால் வந்த அனைத்து இஸ்லாமிய இறைநேசர்களும், இமாம்களும் ஆவார்கள். இவர்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பு ஏனைய ஸாலிஹான முஸ்லிம்களாவார்கள்.

அப்படியென்றால் வலிமார்கள் என்றால் யார்? இவர்களுக்கு இஸ்லாத்திலுள்ள அந்தஸ்தும், கண்ணியமும் என்ன? இவற்றை நாங்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் அவர்களை பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம்.

அல்லாஹ்வின் கட்டளையும், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் ஸுன்னத்துகளையும் ஒன்று விடாமல் பின்பற்றி, இஸ்லாம் என்னும் மார்க்கத்தில் முறையாக நடந்து ஷரீஅத், தரீகத், ஹகீகத் என்ற மன்ஸில்களை அதாவது படித்தரங்களை கடந்து இறுதியில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக்கொண்டவர்களே அல்லாஹ்வின் அவ்லியாக்கள், வலிமார்கள் எனப்படுவார்கள்.

அவ்லியாக்கள் என்றால் அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள். அதாவது அல்லாஹ்வின் விருப்பத்துக்கு உரியவர்கள். அல்லாஹ்வால் நேசிக்கப்படுபவர்கள் என்று அர்த்தமாகும். வலி என்றால் ஒரு இறைநேசரை குறிக்கும். வலிமார்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பல இறைநேசர்களை குறிக்கும் நாம் வலிமார்கள் என்று கூறினால் அதில் ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள் ஏனைய அவ்லியாக்கள் அனைவரும் அடங்குவார்கள். என்றாலும் பொதுவாக மக்கள் பேசும்பொழுது, ஸஹாபாக்களை அவர்களது சிறப்பான அந்தஸ்தை கூறியே, அதாவது ஸஹாபாக்கள் என்று கூறியே அழைக்கிறார்கள். ஏனைய தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள், இஸ்லாமிய பெரியார்கள் இவர்களைத்தான் பொதுவாக அவ்லியாக்கள் என்று கூறுகிறார்கள்.

ஏனென்றால் உலகத்திலுள்ள எல்லா அவ்லியாக்களை விடவும் அதி கண்ணியமும், சிறப்பும், அந்தஸ்தும் மிக்கவர்கல்தான் ஸஹாபாக்கள். எனவே நாம் எந்த ஒரு அவ்லியாவையும் ஸஹாபாக்களை விட சிறந்தவர்கள் என்று கூறக்கூடாது. அப்படி நினைத்தும் பார்க்கக்கூடாது. அதேபோல் உலகத்திலுள்ள எந்தவொரு அவ்லியாவையும் எங்களோடு ஒப்பிட்டுப்பார்த்து எங்களைப்போன்ற சாதாரண மனிதர்கள்தான் என்று கூறக்கூடாது. இன்னும் அப்படி நினைத்தும் பார்க்கக்கூடாது. இதுதான் எங்களுடைய ஸுன்னத் – வல் – ஜமாஅத்துடைய அகீதா.

ஏனென்றால் அல்லாஹுதஆலா எங்களைவிட வலிமார்களுக்கு பல அந்தஸ்துகளை வழங்கி சிறப்பாக்கி வைத்திருக்கிறான். அவர்களுக்கு பல கராமத்துக்களை அதாவது பல அற்புத சக்திகளை வழங்கி அதன்மூலம் அல்லாஹ் அவர்களைக்கொண்டு பல மக்களை சீர்த்திருத்தியும், வழித்தவறியவர்களை நேரான வழியில் கொண்டுவரவும் செய்துள்ளான்.

இந்த அவ்லியாக்களைப்பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் அஸ்ஸவஜல் புனித அல்குர்ஆனில் கூறும்போது: ” அல்லாஹ்வுடைய அவ்லியாக்களுக்கு எந்த பயமும் இல்லை. எந்த கவலையும் இல்லை” என்று கூறுகிறான். அவர்கள் விரும்பாத ஒன்று நடந்து விட்டதே என்று கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் விரும்பாத ஒன்று எதிர்க்காலத்தில் நடக்குமோ என்று பயப்படவும் மாட்டார்கள். இதுதான் இதன் பொருள். ஆனால் கியாமத்து நாளைப்பற்றிய கவலை மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் அதிகமாக இருக்கும். அதேபோன்று அல்லாஹ்வுடைய அச்சம், பயம் மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் மிக அதிகமாக இருக்கும். அதேநேரம் இந்த உலக சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்கள் எந்த கவலையும், பயமும் அடையமாட்டார்கள்.

இதே போன்று அல்லாஹ் அஸ்ஸவஜல் கூறியதாக எங்கள் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் திருவுளமானார்கள்:
” எனது அடியான் நஃபிலான வணக்கங்களை விருப்பத்துடன் செய்து, என்னுடைய நெருக்கத்தைபெற விரும்பி, என்னை நெருங்கினால் நான் அவனை நேசிக்கும் அளவுக்கு ஆகிவிடுகிறான். நான் அவனை நேசித்து விட்டால், அவன் கேட்கும் காதாகவும், பார்க்கும் கண்ணாகவும், பிடிக்கும் கையாகவும், நடக்கும் காலாகவும் நான் ஆகிவிடுகிறேன்.” இந்த ஹதீஸ் ஸஹீஹுல் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலை அவ்லியாக்களுக்கு உள்ளதால்தான் மற்றவர்களால் செய்ய முடியாத விஷயங்களை எல்லாம் அவர்கள் செய்கிறார்கள். அந்த அற்புத சக்தியை அதாவது கராமத்துகளை அல்லாஹுதஆலா அவர்களுக்கு கொடுக்கிறான். இதை அல்லாஹுதஆலா சில சம்பவங்களின் மூலமாக எமக்கு சொல்லிக்காட்டுகிறான்.

பத்ர் யுத்தம் தொடங்குவதற்கு முன் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் ஒரு பிடி மண்ணை எடுத்து எதிரிகள் உள்ள இடத்தை நோக்கி வீசினார்கள். எதிரிகளுடைய பார்வை திசை திரும்பியது அதனால் அந்த யுத்தத்தில் வெற்றிப்பெற்றார்கள். இதை அல்லாஹ் அஸ்ஸவஜல் அல்குர்ஆனில் சொல்லும்போது, ” நாயகமே! நீங்கள் அந்த மண்ணை எறியவில்லை. அந்த மண்ணை அல்லாஹ் தான் எறிந்தான்” என்று கூறி காட்டுகிறான். இது நமது கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இவை அல்லாஹ்வின் அவ்லியாக்களாக யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இது சொந்தமானது.

அதே பத்ர் யுத்தத்தில் எதிரிகளை ஸஹாபாக்கள் கொன்றபோது, அல்லாஹ் அஸ்ஸவஜல் அல்குர்ஆனில் கூறினான்: ” நீங்கள் எதிரிகளை கொல்லவில்லை, அல்லாஹுத்தஆலாவே கொன்றான்” என்பதாக. இந்த வசனத்திற்கு பொருள் என்னவென்றால், அல்லாஹ் சொல்கிறானே நான் ஒருவரை நேசிக்கும்போது அவன் கேட்கும் காதாகவும், பார்க்கும் கண்ணாகவும், பிடிக்கும் கையாகவும், நடக்கும் காலாகவும் நான் ஆகிவிடுகிறேன் என்று. இதுதான் இதற்கு அர்த்தமாகும்.

எனவே அல்லாஹ் அஸ்ஸவஜல் தனக்கு சொந்தமான சில பதவிகளை அவ்லியாக்களுக்கு வழங்கி, அவர்களை இந்த உலக மக்களுக்கு தன் பிரதிநிதியாக அதாவது கலீஃபாவாக ஆக்கி வைத்திருக்கிறான். எப்படி எங்கள் இனிய தூதர் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் உலகத்துக்கே ரஹ்மத்துலில் ஆலமீனாக இருக்கிறார்களோ அப்படியே அவ்லியாக்களை அல்லாஹ் அஸ்ஸவஜல் இந்த உலக மக்களுக்கு கிருஃபையுள்ளவர்களாக ஆக்கிவைத்துள்ளான்.

மேலும், அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் ஸூரதுன்னிஸா 59ம் வசனத்தில் கூறும்போது, ” மூஃமின்களே! அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள். இன்னும் அவனது ரஸூலுக்கும் வழிப்படுங்கள். மேலும் உங்களில் தீனை பரப்பக்கூடிய உலமாக்களுக்கும், அவ்லியாக்களுக்கும் வழிப்படுங்கள்.” என்று கூறியுள்ளான். (ஆதாரம்: தப்ஸீர் ரூஹுல் பயான், தப்ஸீர் கபீர்)
ஆகவே அல்லாஹ் அஸ்ஸவஜல் அந்தக்காலத்தில் நபிமார்களைக்கொண்டு நடத்தியதை இன்று அவ்லியாக்களைக்கொண்டு நடத்துகிறான். அவர்களாலேயே உலகம் நிலைபெற்றிருக்கிறது.

ஒரு முறை பூமி கூறியது, ” அல்லாஹ்வே! என் மீது நபிமார்கள் நடந்தார்கள். அவர்களுக்கு பிறகு கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களை சந்தோசத்துடன் சுமந்தேன். அன்னவர்களும் சென்றுவிட்டார்கள். இப்போது நான் தனித்துவிட்டேன்! என் மீது எந்த நபியும் இல்லையே!” என்று அழுது முறையிட்டது. அதற்கு அல்லாஹ் அஸ்ஸவஜல் ” நான் சில அவ்லியாக்களை அனுப்புவேன். அவர்களது இதயங்கள் நபிமார்களின் இதயங்களை போல் இருக்கும். அவர்கள் கியாமத்து நாள் வரை உன் மீது நடப்பார்கள்” என்று பூமிக்கு அறிவித்தான்.

மேலும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். ” எனது உம்மத்துக்களில் 40 மனிதர்கள், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுடைய இதயத்தைப் போன்ற உள்ளம் படைத்தவர்களாக உலகத்தில் இருந்தே வருவார்கள். அல்லாஹுதஆலா அந்த நபர்களைக்கொண்டு இவ்வுலகத்தில் வாழ்பவர்களின் நோய்களை தீர்த்து வைப்பான். அவர்களுக்காக மழையை பொழிய வைப்பான். அவர்களைக்கொண்டுதான் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கு உதவி புரியப்படும்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் தபரானியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகத்தில் அவ்லியாக்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உலகத்தில் அவ்லியாக்கள் 440 பேர் இருப்பார்கள். அதில் நுஜபாக்கள் 300 பேர், நுகபாக்கள் 70 பேர், அப்தால்கள் 40 பேர், அகியார்கள் 10 பேர், உறபாக்கள் 7 பேர், அன்வார்கள் 5 பேர், அவ்தாத்கள் 4 பேர், முக்தார்கள் 3 பேர், குதுபு ஒருவர். இவர்களில் குதுபே அனைவருக்கும் தலைவராவார். இவரை கௌஸு என்றும் சொல்வார்கள்.

இப்படி குதுபுகளாக ஒவ்வொரு காலத்திலும் இருந்தவர்கள்தான் காதிரியா தரீக்காவை உருவாக்கிய குத்புல் அக்தாப் கௌஸு அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்மாதுல்லாஹி அலைஹி) அவர்கள், ரிஃபாயி தரீக்காவை உருவாக்கிய ஸுல்தானுல் ஆரிஃபீன் ஸையிது அஹ்மதுல் கபீர் ரிஃபாயீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள், ஷாதுலி தரீக்காவை உருவாக்கிய இமாம் அபுல் ஹஸன் ஷாதுலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள், சிஷ்தி தரீக்காவை உருவாக்கிய ஸுல்தானுல் அவ்லியா அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் மற்றும் நாகூர் ஷாஹுல் ஹமீத் நாயகம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் ஆவார்கள்.

இதேபோல் உலகத்தில் பல குதுபுமார்கள் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் கியாமத்து நாள் வரை வாழ்வார்கள். படைப்புகள் மீது அவர்கள் ஆட்சி செய்யக்கூடியவர்களாக இருப்பதனால் அவர்களுக்கு “கௌஸு” என்றும் பெயர். இவர்களுக்காகவே அல்லாஹ் வானத்திலிருந்து மழையை பொழியச்செய்கிறான். உலக மக்களுக்கு அல்லாஹ் கொடுத்த ரஹ்மத்துகளை ஒருத்தட்டிலும், குதுபுக்கு கொடுத்த ரஹ்மத்துகளை ஒருத்தட்டிலும் வைத்தால் குதுபுவின் தட்டே பாரமாக இருக்கும். அல்லாஹுதஆலா நபிமார்களுக்கு தனது செய்தியை வஹீ மூலம் அறிவித்தான். அதுபோல் அவ்லியாக்களுக்கு ” இல்ஹாம்” என்ற ஞான உதிப்பு மூலம் தெரியப்படுத்துகிறான்.

அவ்லியாக்கள் நபிமார்களுடைய வாரிசுகளாகும், பிரதிநிதிகளாகவும் இருக்கின்றார்கள். இதை கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறும்போது, ” அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகள் ” என்று கூறினார்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறும்போது, ” என்னுடைய உம்மத்துக்களிலுள்ள அறிஞர்கள், பனீஇஸ்ராயீல்களிலுள்ள நபிமார்களை போன்றவர்களாவார்கள். ” என்று கூறினார்கள்.

அவ்லியாக்கள் உலக மக்களின் வெளித்தோற்றத்தையும், உள்தோற்றத்தையும் அறிவார்கள் என்று தாஜுல் அவ்லியா, குதுபுல் அக்தாப் ஸைய்யதுனா முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள்.

வலிமார்களின் வணக்கவழிப்பாடுகள் மிகவும் சிறப்புமிக்கது. இதை அல்லாஹ் அஸ்ஸவஜல் கூறும்போது, ” அவர்கள் இரவு வேளைகளில் சிறிது நேரமே தூங்குவார்கள். அதிகமான நேரம் இபாதத்திலே ஈடுபடுவார்கள். ஸஹர் நேரத்தில் எழுந்து பாவமன்னிப்பு தேடுவார்கள். இவர்களே வலிமார்கள்” என்று கூறுகிறான்.

அவர்களின் தொழுகைக்கும் எங்களது தொழுகைக்கும் நிறைய வித்தியாசமுண்டு. நாங்கள் தொழுகையில் நின்றால் கிப்லாவை நோக்கியே நிற்போம். ஆனால் வலிமார்களோ தொழுகையில் நின்றுவிட்டால் அல்லாஹ்வை நோக்கியே நிற்பார்கள். அவர்கள் தொழுகையில் தங்களது உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் இறைவனின் பக்கம் நோக்கியே நிற்பார்கள். இத்தகைய பக்குவத்தை அடைந்தவர்களே வலிமார்கள் என அழைக்கிறோம்.

அதுமட்டுமல்ல, நாமும் நோன்பு நோற்கிறோம், வலிமார்களும் நோன்பு நோற்கிறார்கள். எங்களது நோன்பிற்கும் அவர்களது நோன்பிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. நாம் நோன்பு நோற்றால் உண்ணாமலும், குடிக்காமலும்தான் இருக்கிறோம். ஆனால் வலிமார்கள் நோற்கும் நோன்பு அப்படிப்பட்டதல்ல. அவர்கள் உண்ணாமலும், குடிக்காமலும் இருப்பதோடு மட்டுமல்ல, உடல் உறுப்புகளையும் நோன்பு நோற்க வைப்பார்கள். எப்படியென்றால் பார்க்க கூடாததை பார்க்காமல் கண்களை தடுத்தார்கள். கேட்க கூடாததை கேட்காமல் காதுகளை தடுத்தார்கள். பேச கூடாததை பேசாமல் நாவை தடுத்தார்கள். இதைப்போன்று முழு உடலையும் தீமையை விட்டும் தடுத்தார்கள். இவர்களே வலிமார்கள்.

அல்லாஹ் அஸ்ஸவஜல் அல் குர்ஆனில் கூறும்போது, ” அல்லாஹ்வின் இறைநேசர்கள் எப்போதும் திக்ரிலே அதாவது அல்லாஹ்வின் தியானத்திலே இருப்பார்கள்.” எப்படியென்றால் அவர்கள் நின்றுக்கொண்டு இருந்தாலும், உட்கார்ந்துக்கொண்டு இருந்தாலும், தூங்கினாலும் அல்லாஹ்வின் திக்ரிலே நிலைத்து நிற்பார்கள். இறை தியானத்திலே மூழ்கியிருப்பார்கள். அல்லாஹ் அஸ்ஸவஜல் மேலும் கூறும்போது, ” நீங்கள் காலையிலும், மாலையிலும் திக்ர் செய்யும் நல்லடியார்களுடன் நட்புக்கொள்ளுங்கள்” என்று எம்மைப்பார்த்து கூறுகிறான்.

” அல்லாஹ்வுடைய அவ்லியாக்களை யார் முஹப்பத் வைக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வை முஹப்பத் வைக்கிறார்கள். எவர்கள் அல்லாஹ்வை நேசிக்கிறார்களோ, அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். இப்படித்தான் ஸாலிஹீன்களும் அவ்லியாக்களை நேசித்து அவர்களும் அவ்லியாக்கள் ஆனார்கள்” என்று குத்பு ஷஃறானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் “தபகாத்துல் குப்ரா” என்ற கிதாபில் கூறியுள்ளார்கள்.

ஆனால் இன்று சில வழிக்கெட்ட கூட்டத்தார்கள் இந்த சிறப்பான வலிமார்களை அவமதித்து, அவர்களிடம் எந்த சக்தியும் இல்லை. அவர்களை ஸியாரத்து செய்யக்கூடாது. அவர்களின் பொருட்டால் வஸீலா கேட்கக்கூடாது. அவர்களுக்காக மௌலிது ஓதக்கூடாது. கந்தூரி கொடுக்கக்கூடாது என்று தப்புத்தவறாக சொல்லி, ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களை வழிக்கெடுக்கிறார்கள். இவர்களின் பேச்சை நம்பி இந்த அப்பாவி மக்களும் அவர்களின் முன்னோர்கள் செய்த இந்த நல்ல விஷயங்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள். ஆனால் விஷயம் தெரிந்த மக்கள் இவர்களின் இந்த பொய் பேச்சுகளை எல்லாம் கேட்பதில்லை. அவர்கள் எமது முன்னோர்கள் செய்து வந்ததைப்போல், வலிமார்களை கண்ணியப்படுத்துகிறார்கள். அவர்களுக்காக மௌலிது ஓதுகிறார்கள். அவர்களின் பொருட்டால் வஸீலா தேடுகிறார்கள்.

இப்படி இந்த மகத்துவமிக்க அல்லாஹ்வின் வலிமார்களை நேசிப்பவர்களைப் பார்த்து, இன்று சில வழிக்கெட்ட கூட்டத்தார்கள் “ஹுப்பு பாட்டி” என்றும், அவர்களின் துஆ பரக்கத்தை பெற அவர்களின் கப்ரு ஷரீஃபுக்கு செல்பவர்களை பார்த்து “கப்ரு வணங்கி ” என்றும் கூறி கேலி செய்து தப்புத் தவறாக பேசி பெரும் பாவத்தை செய்கிறார்கள்.

அல்லாஹ் அஸ்ஸவஜல் கூறியதாக கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் அறிவிக்கிறார்கள்: ” எவன் ஒருவன் எனது வலிமார்களை நோவினை செய்வானோ, அவன் என்னுடன் யுத்தம் செய்ய தயாராக இருந்துக்கொள்ளட்டும்” என்ற இந்த ஹதீஸ் ஸஹீஹுல் புகாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இப்படி அல்லாஹ்வின் எச்சரிக்கை வந்திருப்பதால் நாம் மிகக்கவனமாக இருக்கவேண்டும். வலிமார்களை தவறாகபேசினால் பெரும் பாவத்தை சம்பாதிக்கவேண்டிவரும். அல்லாஹ்வுடன் யுத்தம் செய்ய வேண்டி வரும்.

இறைநேச செல்வர்களான அவ்லியாக்கள் செய்த கடும் தவம் என்ன? இபாதத்துகள் என்ன? அவர்களைக்கொண்டு இந்த பூமி அடைந்திருக்கும் அதிர்ஷ்டங்கள் என்ன? நல்ல நசீபுகள் என்ன? இவர்களால் தான் மழையையே பொழியவைக்கிறான் என்றால் இவர்களின் சிறப்புதான் என்ன? இவ்வளவு பெரும் மதிப்பு பெற்ற அவ்லியாக்களை அல்லாஹ் நமக்கு தந்திருக்கிறான் என்றால் நாங்கள் எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள். இதை நினைத்து நெஞ்சுருகி மனமார அல்லாஹ்வுக்கு நிறைய நன்றி செலுத்த வேண்டும். அதை விட்டு விட்டு அவர்களை கேலி செய்வதால் எவ்வளவு பெரிய பாவங்களை சம்பாதிக்கிறோம்? கிருபையுள்ள அல்லாஹ் நம் அனைவரையும் இந்த வழிக்கெட்ட கூட்டங்களில் சேர்க்காமல், உண்மையான, உறுதியான, வெற்றிப்பெற்ற ஸுன்னத் – வல் – ஜமாஅத்தில் நிலைப்பெற வைப்பானாக!
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.

நன்றி:- மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணி

Advertisements
  1. 7:59 பிப இல் நவம்பர் 25, 2010

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடையை சேவை தமிழ் சமுதாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கிறது அல்லாஹ் உங்கள் பணி சிறக்க கிருபை செய்ய துஆ செய்கிறேன் வஹ்காபிகள் இஸ்லாமிய இளைஞர்களை வழி கெடுத்து அவர்களுடைய வாழ்க்கையை சீரழித்து வரும் வேளையில் உங்களை போன்ற சமுதாய ஆர்வலர்கள் சமூக சேவை செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நினைக்கும் போது மனதுக்கு சந்தோஷமாக இருக்கு ரசூல் (ஸல்) அவர்களுடைய சபாஅத் கிடைக்க துஆ செய்கிறேன் அன்புடன் M அக்பர் மதுக்கூர்

  2. Shaik madgar
    10:22 முப இல் பிப்ரவரி 21, 2012

    NALLA UNMAIYANA THAJAWAL.WALIMARGAL ILLAWITTAL NAM MUSLIMAGI IRUKKA MATTOM.

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: