எது முக்கியம்?


நாம் அன்றாடம் செய்யும் பணிகளின் தன்மையைப் பற்றி எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா?

காலையில் எழுகிறோம், அலுவலகத்துக்குச் செல்கிறோம், கொடுத்த வேலைகளைச் செய்கிறோம், நண்பர்களுடன் உரையாடுகிறோம், வீடு திரும்புகிறோம், நம் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுகிறோம், தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடர்களைப் பார்க்கிறோம், இணையதளங்களில் கும்மியடிக்கிறோம், பிறகு தூங்கச்செல்கிறோம்.

நம் பெரும்பாலானோரின் நாள் இப்படித்தான் செல்கிறது.

நமக்காக நாம் என்ன செய்கிறோம்?

எனக்கு அலுவலகத்தில் நல்ல சம்பளம் கிடைக்கிறது, வீட்டுக்கு வேண்டியதெல்லாம் வாங்கமுடிகிறது. எங்கள் வாழ்க்கைத் தரம் முன்னேறித்தான் உள்ளது, வேற என்ன வேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

சரி, இந்த முன்னேற்றம் தான் நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

உங்கள் சம்பளம் அதிகரித்த அளவு உங்கள் கனவுகள் நிறைவேறியுள்ளதா? உங்கள் உடல்நலம் நன்றாக உள்ளதா? உங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா?

முதலில் நாம் அன்றாடம் பார்க்கும் பணிகளின் தன்மையைப் பார்ப்போம். அதை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1. முக்கியமானவை, அவசரமாக முடிக்கவேண்டியவை.
2. முக்கியமானவை, அவசரமற்றவை
3. முக்கியமற்றவை, அவசரமானவை
4. முக்கியமற்றவை, அவசரமற்றவை.

* அலுவலகத்தில் உடனடியாக முடிக்கவேண்டிய வேலை, அலுவலகம் மற்றும் குடும்பத்தில் உடனடி கவனம் தேவைப்படுபவை, தேர்வுகள் போன்றவற்றை முக்கியம் மற்றும் அவசரமானவையில் சேர்க்கலாம். இது போன்ற வேலைகளை நாம் தவிர்க்க இயலாது.

* அலுவலகத்தில் சந்திக்கும் இடையூறுகள், தேவையற்ற தொலைபேசி அழைப்புகள், தேவையற்ற சந்திப்புகள், சுவாரஸ்யமான வேலைகள் போன்றவற்றை முக்கியமற்றவை அவசரமானவையில் சேர்க்கலாம்.

* பொழுதுபோக்கு, அரட்டை, கிசுகிசு, தொலைபேசியில் நேரத்தை செலவிடுவதல் போன்றவற்றை முக்கியமற்றவை அவசரமற்றவையில் சேர்க்கலாம். இது போன்ற பணிகளால் நமக்கோ நமது முன்னேற்றத்துக்கோ எந்த வகையிலும் பயனில்லை.

* திறமைகளை வளர்த்தல், வேலை/ வாழ்க்கைக்கான திட்டமிடல், நல்ல தொடர்புகளை ஏற்படுத்துதல், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுதல் போன்றவற்றை முக்கியமானவை அவசரமற்றவையில் சேர்க்கலாம்.

இந்த நான்கு வகையான வேலைகளில் நாம் அதிக நேரம் செலவிடுவது எதில்?

பெரும்பாலானோர் ஒன்று, மூன்று மற்றும் நான்காம் வகையைச் சார்ந்த பணிகளிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறோம்.

எப்பொழுதும் அலுவலகத்தில் அவசரமாக வேலை வருகிறதென்றால் என்ன காரணம்? நம் திட்டமிடுதலில் தவறா அல்லது நமக்குப் போதிய திறமை இல்லையா அல்லது மேலதிகாரியின் தவறா?

நம் உடல் நலம் கெடுவதற்கு நம் வேலைப்பளு காரணமா அல்லது உடல் நலனில் கவனம் செலுத்தாத நம் மெத்தனம் காரணமா?

குடும்பத்துடன் நேரம் ஒதுக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?

இவை அனைத்தையும் நாம் கவனிக்க வேண்டுமென்றால் இரண்டாம் வகை வேலைகளில் நேரத்தை ஒதுக்க வேண்டும். நம் திறமைகளை வளர்ப்பதன் மூலம் நம் அலுவலகத்தில் பதவி உயர்வுக்குத் தயாராகலாம். குடும்பத்துக்கு தேவையானவற்றைத் திட்டமிடுவதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

இப்படி ஒதுக்க முடியாமல் போவதற்குக் காரணம் என்ன? நேரமின்மையா அல்லது பொழுதுபோக்கில் அதிக நேரம் செலவிடுவதா?

இன்றைக்கு பெருகிவரும் இணையதளங்களும், சமூக வலையமைப்புகளும் நம்மை வசியப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றன. நாம் என்ன செய்கிறோம் என்பதை உடனுக்குடன் தெரிவிப்பது, நண்பர்களுடன் மின்னாடுவது (CHAT), இணைய குழுமங்களில் கும்மியடிப்பது, பதிவுலகில் அளவளாவுவது என்று பொழுதுபோக்கு விடயங்களில் நேரம் போவதே தெரிவதில்லை.

ஆனால் இதனால் என்ன பயன்?

நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள், பலதரப்பட்ட கருத்துகளைத் தெரிந்து கொள்கிறோம் என்றாலும், அது நாம் செலவிடும் நேரத்துக்கு ஏற்ப நம் வளர்ச்சிக்கு உதவுகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டியதிருக்கும்.

இதுவே ப்ளாக்ஸ் எனப்படும் பதிவுலகம் என்றால் சொல்லவே வேண்டாம்.

பதிவுலகினால் பல தரப்பட்ட கருத்துகள் தெரியவருகிறது, நல்ல நண்பர்கள் பலர் கிடைக்கிறார்கள் என்றாலும் இது நம் சுயமுன்னேற்றத்துக்கு உதவுகிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பதிவுலகம், சோசியல் நெட்வொர்க்கிங் எனப்படும் சமூக வலையமைப்புகள் போன்றவை எல்லாம் முக்கியமற்றவை, அவசரமற்றவை என்ற வகையிலேயே சேரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

முக்கியமற்ற விடயங்களில் செலவிடும் நேரத்தை முக்கியமானவற்றுள் செலவிட்டால் நாமும் முன்னேற முடியும், நம் வாழ்க்கையும் வளமையடையும்.

எது முக்கியம்? முடிவெடுங்கள் நண்பர்களே!

பின் குறிப்பு : இந்தக் கட்டுரை STEPHEN R.COVEY எழுதிய 7 HABITS OF HIGHLY EFFECTIVE PEOPLE என்ற நூலில் தரப்பட்டுள்ள சில கருத்துகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.

– ச.செந்தில்வேலன்.

Advertisements
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: